“உங்கள் ஓவியங்களில் ஏன் பெண்கள் இவ்வளவு சோகமாக இருக்கிறார்கள்?”
“பெண்கள் விரும்பித் தானே வீட்டு வேலை செய்கிறார்கள்… நாங்கள் யாரும் கட்டாயப்படுத்துவதில்லை!”
“நானும் கூடத்தான் என்னுடைய ரூமில் எல்லா வேலைகளையும் செய்கிறேன். இது என்ன அத்தனை சவாலான காரியமா?”
“ஆண்கள் செய்யும் கடினமான வேலைகளைக் காட்டிலும் சமைப்பதும், துணி துவைப்பதும் கடினமான வேலையா என்ன?”
“ஆண்கள் இந்த உலகத்தையே உருவாக்கியிருக்கிறார்கள் ஆனால் இந்த பெண்கள் இருப்பதிலேயே மிக எளிமையான வீட்டு வேலைகளைத்தானே செய்கிறார்கள்?”
இப்படியான குறுஞ்செய்திகளையும் கேள்விகளையும் தான் ஓவியர் சௌமியா ராமலிங்கம் அண்மைக் காலமாக எதிர்கொண்டு வருகிறார்.
இத்தனை கேள்விகளையும் அவரிடம் கேட்டு, விவாதப் போட்டியே நடத்தியிருக்கின்றனர் பலர். இத்தனை கேள்விகளுக்கு ஆளாகும் படி சௌமியா என்னதான் செய்துவிட்டார்?
இத்தனை கேள்விகளுக்கும் காரணம், வீட்டில் பெண்கள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகளை டிஜிட்டல் ஓவியங்களாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடுவது தான்.
அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் இட்லி பாத்திரம். அதில் இட்லி நன்றாக வெந்த நிலையில், ஆவி பறந்து கொண்டிருக்கிறது. ஆறு இட்லிகளுக்கு நடுவே, சாம்பல் நிற புடவை அணிந்த பெண் ஒருவரும் இட்லியோடு சேர்ந்து வெந்து கொண்டிருக்கிறார்.
இந்த ஓவியத்தை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்?
இந்த புகைப்படத்தில் கமெண்ட் பதிவிட்ட பெண்களும், சௌமியாவிடம் பேசிய பலரும், தங்களின் அம்மா நினைவுக்கு வருவதாக கூறியிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு சில ஆண்கள் அந்த ஓவியத்தில் வரும் பெண் சோகமாக இருக்கிறார், வருத்தத்துடன் சமைக்கிறார் என்று தங்களின் கருத்தைக் கூறியுள்ளனர்.
ஓவியங்களின் நோக்கம் என்ன?
“ட்ரீம்ஸ்” என்ற தலைப்பில் இந்த ஓவியங்களை வரைந்து, வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார் சௌமியா.
சௌமியாவிடம் கேள்வி எழுப்பும் சிலரோ, இந்த பாலினத்தவர் இந்த வேலைகளை தான் செய்ய வேண்டும் என்ற பாலினம் சார்ந்த வேலைகளை (Gender Role) நியாயப்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து சௌமியா, பிபிசி தமிழிடம் பேசும்போது, “என் ஓவியங்கள் யாரையும் புண்படுத்தவோ, ஆண்கள் மோசமானவர்கள் என்று சித்தரிக்கும் வகையிலோ இல்லை. என் ஓவியங்கள் என்னை பிரதிபலிக்கின்றன. என் அம்மாவையும், என் பாட்டியையும், என்னைப் போன்ற கோடிக்கணக்கான பெண்களையும் பிரதிபலிக்கின்றன,” என்கிறார்.
“என்னுடைய ஓவியங்களில் இருக்கும் பெண்கள் சோகமாக இல்லை. கோபத்துடன் இருக்கின்றனர். சோர்வுற்று இருக்கின்றனர். ஓய்வறியாமல் இருக்கின்றனர், இளைப்பாறுதல் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கின்றனர்” என்றும் விவரிக்கிறார் சௌமியா.
ஆண்களும் வீட்டு வேலைகள் செய்கிறார்களே என்று முன்வைக்கப்பட்ட வாதம் குறித்து பேசுகையில், “ஆம். வேலைகள் செய்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் தனியாக வாழும் காலத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேலை பார்த்திருப்பார்கள்.
ஆனால் முழுமையாக ஒரு வீட்டின் பணிச்சுமையை அவர்கள் ஏற்கிறார்களா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்,” என்கிறார் சௌமியா.
“திருமணம் முடிந்து ஒரு வீட்டிற்கு செல்லும் பெண், நான்கு – ஐந்து நபர்களுக்கு மூன்று வேலை சமைத்து, பாத்திரங்களை கழுவி, அனைவரின் துணிகளையும் துவைத்து – காய வைத்து – மடித்து, வீட்டை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறார்.
இது ஒரு நாள் மட்டும் செய்யும் வேலையல்ல இது… நாட்கணக்கில், வாரக்கணக்கில் , மாதக்கணக்கில்… தங்களின் ஆயுட்காலம் முழுவதும் பல பெண்கள் இதையே செய்கின்றனர்” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார் சௌமியா.
வீட்டு வேலைகளில் பெண்களுக்கே சுமை அதிகம்
“பணிக்கு செல்லும் பெண்களின் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது. வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் அவர்கள் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர்,” என்கிறார் சௌமியா.
நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும் கூட, வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்ற மன ரீதியான அழுத்தம் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
தனியார் கல்லூரி ஒன்றில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் சௌமியா, திருமணத்திற்கு பிறகான குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களில் ஒருவர்.
“அந்த திருமண உறவில் இருந்து வெளியேறிவிட்டேன். ஆனால் அங்கே நான் அனுபவித்த வலிகளின் நீட்சியே இந்த ஓவியங்கள்,” என்று கூறும் சௌமியா 2010-ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் ஓவியங்களை தீட்டி வருகிறார்.
இதை வரைய வேண்டும் என எப்படி தோன்றியது என்று கேட்ட போது, இது தினமும் நடக்கின்ற நிகழ்வுதானே என்று பலரும் கடந்து போவதால் தான் இது ஒரு பிரச்னை என்று பலருக்கும் தெரிவதில்லை என்று கூறுகிறார்.
“ஒரு பாலினத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இதுபோன்ற பணிச்சுமையை சுமப்பதன் விளைவை காட்சி ஊடகத்தில் பதிவு செய்ய நினைத்தேன்” என்கிறார் சௌமியா.
சௌமியா ஓவியங்களின் தனிச்சிறப்பு
சௌமியாவின் ஓவியங்களில் இருக்கும் தனிச்சிறப்பு அவர் ஓவியங்களில் காட்டப்படும் பெண்கள் தான். இவரின் ஓவியங்கள் வீட்டில் நாம் பார்க்கும் பெண்களின் சித்தரிப்பாக இருக்கிறது.
இந்த மண்ணுக்கே உரிய நிறங்களிலும், வெவ்வேறு வயதிலும், வெவ்வேறு உடல் அளவைக் கொண்ட பெண்களும் சௌமியாவின் ஓவியங்களில் இருக்கின்றனர்.
“நம் நிறம் மிகவும் அழகான நிறம். ஆனால் அதனை நாம் எந்த மீடியாவிலும் காண முடியாது. படங்களில் காட்டப்படும் பெண்களில் பெரும்பாலும், கோதுமை நிறம், பெரிய கண்கள், ஒல்லியான தேகம் என்று யதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கும் அழகியல் அம்சங்களை கொண்டவர்கள் தான்.
டிஜிட்டல் சித்தரிப்பில் மாற்றங்களை கொண்டு வர விரும்பினேன். யதார்த்தத்தைக் காட்ட விரும்பினேன். அதனால் தான் என்னுடைய தேர்வு என்னைப் போன்ற, என் பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற சித்தரிப்பு” என்று குறிப்பிடுகிறார் சௌமியா.
வீட்டு வேலைக்கு தினசரி 5 மணி நேரம் செலவிடும் பெண்கள்
வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்கின்றனர். ஆனால் எவ்வளவு நேரம் செய்கிறார்கள்? ஆண்கள் வீட்டு வேலைகள் தாமாக முன்வந்து செய்கின்றனரா?
அப்படி செய்தால் தோராயமாக நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் வீட்டு வேலைகளை ஆண்கள் செய்கின்றனர்? உண்மையில், ஆய்வுகளும் கணக்கெடுப்பு முடிவுகளும் என்ன தான் சொல்கின்றன?
2020-ஆம் ஆண்டு இந்திய புள்ளியியல் துறை தேசிய அளவிலான சர்வே முடிவுகளை வெளியிட்டிருந்தது.
2019-ஆம் ஆண்டு ஜனவரி – டிசம்பர் மாதங்களில் 1.39 லட்சம் குடும்பங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளில் ஆண்களைக் காட்டிலும், அதிக நேரம் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது பெண்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது.
சமையல் உட்பட வீட்டு நிர்வாகம் போன்ற பணிகளில் 81.2% பெண்கள் தினமும் ஈடுபடுகின்றனர்.
26.1% ஆண்கள் இத்தகைய வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் என்கிறது இந்த கணக்கெடுப்பு.
நாள் ஒன்றுக்கு 299 நிமிடங்கள் (5 மணி நேரம்) பெண்கள் வீட்டு வேலைகளை செய்கின்றனர். ஆனால் ஆண்கள் 97 நிமிடங்கள் (1 மணி நேரம் 37 நிமிடங்கள்) மட்டுமே வீட்டு வேலைகளை செய்கின்றனர்.
வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணிகளிலும் பெண்களே அதிக அளவில் ஈடுபடுகின்றனர். நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் 14 நிமிடங்கள் குழந்தை வளர்ப்புக்கு பெண்கள் நேரம் ஒதுக்குகின்றனர்.
ஆண்கள் நாள் ஒன்றுக்கு 76 நிமிடங்கள் மட்டுமே குழந்தை வளர்ப்பு தொடர்பான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
தொடர்ந்து ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் என்ன என்பதை பிபிசி தமிழிடம் விவரித்தார் மனநல ஆலோசகர் அக்ஷயா அகிலன்.
“பெண்கள் தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று பலரும் முன்வைக்கும் வாதங்கள் பொதுவாக, ஆதிகாலத்தில் ஆண்கள் வேட்டையாடச் சென்றனர்.
பெண்கள் அந்த குழுக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து வந்தனர் என்ற பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது தான்.
ஆனால் சமீபத்திய ஆய்வு முடிவுகள், பெண்களும் ஆண்களுக்கு நிகராக வேட்டையாடினார்கள் என்பதை நிரூபித்துள்ளது” என்று விளக்குகிறார் மனநல ஆலோசகரான அக்ஷயா.
ஹைபிஸ்கஸ் ஃபவுண்டேஷன் ஃபார் சோசியல் வெல்ஃபேர் (Hibiscus Foundation for Social Welfare (HFSW)) நிறுவனத்தின் தலைவரான அக்ஷயா, தொடர்ச்சியாக இந்த பணிகளை மேற்கொள்ளும் பெண்கள் தங்களின் “அடையாளம்” எது என்ற சந்தேகத்திற்கு ஆளாவதை காண முடிகிறது, என்கிறார்.
இங்கு மனநல ஆலோசனை பெற வரும் பெண்களில் யாரும், வீட்டு வேலைகள் சுமையாக இல்லை என்று ஒருபோதும் கூறியதில்லை என்பதை மேற்கோள் காட்டுகிறார்.
“திரும்பத் திரும்ப அதே வேலைகளை செய்யும் போது, அது மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிகமாக பெண்கள் மெனக்கெடுகின்றனர்.
ஆனால், சில ஆண்டுகளில் இத்தகைய பெண்கள் தங்களின் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர்.
அவர்களின் குடும்பத்தில் அவர்களுக்கான இடம் எது, அவர்களின் குரலுக்கு முன்னுரிமை இருக்கிறதா என்ற கேள்வியும் அவர்களுக்குள் எழுகிறது” என்கிறார் அக்ஷயா.
இந்த வேலைகளை எந்த எதிர்பார்ப்பும் பிரதிபலனும் இன்றி பெண்கள் செய்கின்றனர். “பெண்கள் வீட்டில் இருந்து இந்த வேலைகளை விருப்பத்துடன் செய்தால் அதில் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால் அப்படி வேலை செய்யும் பெண்களை மதிக்கப்பட வேண்டும்” என்கிறார் சௌமியா.
“அட நம்ம அம்மாவும் மனைவியும் இதே வேலைகளை தான் தினமும் செய்றாங்க… நாம குறைஞ்சபட்சமாவது அவங்களுக்கு உதவி பண்ணியிருக்கலாம் என்று ஒரு ஆண் தன்னை மாற்றிக் கொண்டாலே இந்த ஓவியங்களுக்கு கிடைத்த வெற்றி என்று நான் கருதுவேன்” என்கிறார் சௌமியா.
எழுதியவர்: நித்யா பாண்டியன்
-நன்றி: பிபிசி தமிழ்