ஒரு மொழியில் தயாராகும் திரைப்படங்கள் இன்னொரு மொழியில் ‘டப்’ செய்யப்படுவது, 1940கள் முதல் தொடர்ந்து வரும் ஒரு வழக்கம். அவ்வாறு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிப் படங்கள் தமிழ் பேசியிருக்கின்றன. தமிழில் தயாரிக்கப்படும் படங்கள் பிற மொழி ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இன்று புழக்கத்தில் இருக்கும் ‘பான் இந்தியா’ சினிமாவுக்கும் அந்த வழக்கத்திற்கும் பெரிதாக வித்தியாசம் கிடையாது.
அந்த வகையில் தெலுங்கு நடிகர் நானி நாயகனாக நடித்துள்ள ‘சூர்யாவின் சாட்டர்டே’ திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. ஆக்ஷன் படம் என்பதைத் தாண்டி, அனைத்து ரசிகர்களும் பார்க்குபடியாக இப்படத்தில் என்ன இருக்கிறது?
கதைத் தேர்வில் கவனம்!
தெலுங்கு திரையுலகில் வெவ்வேறுபட்ட கதைகளாகத் தேர்ந்தெடுத்து தனது படவரிசையை அமைத்துக் கொள்பவர் நானி. அப்படிப்பட்ட நட்சத்திர நடிகர்களின் எண்ணிக்கை குறைவென்பதால், அவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்களும் கணிசம். அதனாலேயே, நானியின் படங்கள் ‘சுமார்’ ரகமாக இருந்தால் கூட அவற்றின் வசூல் வேட்டை அபாயகட்டத்தைத் தாண்டுவதாக இருந்து வருகிறது. அவர் நடித்த படங்களில் மிகச்சில மட்டுமே மோசமான தோல்வியைத் தழுவியிருக்கின்றன.
வெறுமனே ஹீரோயிச பில்டப், சண்டை மற்றும் நடனக்காட்சிகளுக்கு முக்கியத்துவம், பிரமாண்டமான தயாரிப்பு என்றில்லாமல் தனது பாத்திரம் வெவ்வேறுபட்டதாக இருக்க வேண்டுமென்று மெனக்கெடுபவர் நானி. அந்த வழியைப் பின்பற்றச் சில நடிகர்கள் தெலுங்கில் உண்டு என்றாலும், அவர்களில் எவரும் நானி அடைந்த நட்சத்திர அந்தஸ்தை இன்னும் எட்டவில்லை.
ஆனால், இந்த உயரத்தின் பின்னால் அவரது உழைப்பு இருக்கிறது. மிக முக்கியமாக, கதைத் தேர்வில் அவர் செலுத்தும் அபார கவனத்திற்குக் காரணம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் தான். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தபோது உணர்ந்த விஷயங்கள், அவர் நடிகராக அறிமுகமாகி நாயகனாக உருமாறியபோது உதவியது. அதுவே, நட்சத்திரமாகத் தன்னிலையை தக்கவைப்பதோடு வேறுபட்ட அனுபவங்களையும் தரும் கதைகளைத் தேடிக் கண்டெடுக்க வைக்கிறது.
’அஷ்ட சம்மா’வில் தொடங்கி ‘பீமிலி கபாடி ஜட்டு’, ‘அலா மொதலைண்டி’, ‘பிள்ள ஜமீன்தார்’, ’ஈகா’, ‘யடோ வெல்லிபோயிந்தி மனசு’ என்று ஐந்தாண்டுகளிலேயே அவரது பயணம் குறிப்பிட்ட உயரத்தை எட்டியது. அதற்குள் வெப்பம், ஆஹா கல்யாணம் ஆகிய தமிழ் படங்களிலும் நானி நாயகனாக நடித்திருந்தார். ராஜமௌலியின் ‘நான் ஈ’ அவரைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது.
பிறகு யவடே சுப்பிரமணியம், பலே பலே மகதிவோய், கிருஷ்ண காடி வீர பிரேம கதா, ஜென்ல்மேன், நேனு லோக்கல், நின்னுகோரி, மிடில் கிளாஸ் அப்பாயி, தேவதாஸ், ஜெர்ஸி, நானி’ஸ் கேங்க்லீடர், ஷ்யாம் சிங்கராய், அண்டே சுந்தரானிகி, தசரா, ஹாய் நானா என்று நானி நாயகனாக நடித்த படங்கள் அனைத்துமே தெலுங்கு ரசிகர்கள் தவிர்த்து பிறருக்கும் தெரிந்தவை. கோவிட் காலத்தில் வந்த ‘வி’, ‘டக் ஜெகதீஷ்’ இரண்டும் பெரியளவில் பெற்ற வெற்றியும் அவரை நாடு முழுக்கத் தெரிந்தவராக ஆக்கியிருக்கிறது.
‘பான் இந்தியா’ அந்தஸ்து!
‘நான் ஈ’ படத்தின் வெற்றியே நானிக்கு ‘பான் இந்தியா’ அந்தஸ்தை தந்துவிட்டது. அந்த காலகட்டத்தில், அவர் அளவுக்கு தெலுங்கு ஹீரோக்கள் எவரும் அப்படியொரு பெயரைப் பெறவில்லை. ஆனால், தனது அசுர வளர்ச்சியை அவர் திட்டமிட்டுத் தணித்துக்கொண்டார். முதலில் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று, பலமானதொரு அஸ்திவாரத்துடன் பிற திசை நோக்கி நகர்வதென்று முடிவு செய்தார்.
அதன் தொடர்ச்சியாகவே அவரது படங்கள் அடடா சுந்தரா, ஹாய் நானா என்று தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகின. அவை மட்டுமல்லாமல், அவர் நடித்த இதர படங்களும் தமிழ் தொலைக்காட்சிகளுக்காக ‘டப்’ செய்யப்பட்டு ஒளிபரப்பாகியுள்ளன. இதே வரவேற்பை இதர மொழிகளிலும் கூட நானி பெற்றிருக்கிறார்.
அதனாலேயே, தற்போது ‘சரிபோதா சனிவாரம்’ படம் தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்றாகியிருக்கிறது.
ஒரு படம் தெலுங்கில் வெளியாகிப் பின்னர் ஓடிடி அல்லது தொலைக்காட்சிகளுக்காக ‘டப்’ செய்யப்பட்டு வரவேற்பு பெறுவதற்குப் பதிலாக, நேரடியாக அம்மொழி ரசிகர்களுக்காக தியேட்டரில் வெளியிடும் முடிவை மேற்கொண்டிருக்கிறது இப்படக்குழு. ‘பான் இந்தியா’ வெளியீடு என்று முடிவு செய்துவிட்டு ‘டப்’ செய்யப்பட்ட படங்களைக் காட்டிலும் ‘புஷ்பா’ பெரிய வெற்றியைப் பெற்றது போல, இப்படமும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறது.
நானி – எஸ்.ஜே.சூர்யா காம்போ!
‘சூர்யாவின் சனிக்கிழமை’ பட ட்ரெய்லரே, வழக்கமான கமர்ஷியல் மசாலா படம் என்பதைத் தாண்டி இதில் நிறைய விஷயங்கள் அடங்கியிருப்பதை உணர்த்துகிறது.
தன்னுள் எழும் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என்று மரணத்தருவாயில் இருக்கும் தாயிடம் சத்தியம் செய்கிற நாயகன், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று மட்டும் அந்த ரௌத்திரத்தை வெளிப்படுத்துகிறான். அதனால், ஒரு சனிக்கிழமையன்று அவரது வாழ்வில் நிகழும் சம்பவங்கள் எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொணர்கின்றன என்பதே இக்கதையின் மையம்.
கேட்கும்போது சுவாரஸ்யத்தைத் தருகிறது இக்கதை. இதில் நானி உடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறபோது, அந்த எதிர்பார்ப்பு பன்மடங்காகிறது.
ஏனென்றால் ‘மாநாடு’, ‘மார்க் ஆண்டனி’ படங்கள் மூலமாகப் பெரியளவில் ரசிகர் பட்டாளத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தமிழ் தவிர்த்து பிற பகுதிகளிலும் புகழ் கொடி நாட்டியிருக்கிறார்.
முந்தைய படங்கள் போன்று அவரது கதாபாத்திரம் சிறப்பாகத் திரையில் வெளிப்படுகிற பட்சத்தில், நானி – எஸ்.ஜே.சூர்யா காம்பினேஷன் திரையில் விருந்தைப் படைக்கும். இயக்குனர் விவேக் ஆத்ரேயா அதனைச் சாத்தியப்படுத்தியிருப்பார் என்றே சொல்கிறது படத்தின் ட்ரெய்லர்.
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நிகழ்ந்திருக்கிறது. அதில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது. அதுவே, இப்படம் சில நூறு கோடிகளை வசூலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, விஜய் தேவரகொண்டாவின் குஷி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இதில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார்.
இப்படி ‘சூர்யாவின் சாட்டர்டே’வில் பணியாற்றியிருக்கிற கலைஞர்களின் கூட்டணி, சிறப்பானதொரு கமர்ஷியல் பட அனுபவத்தை வழங்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. வருகிற 29-ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. அப்போது நமது எண்ணம் சரியா என்பது தெரிந்துவிடும்..!
#Nani #Surya_s_Saturday #Priyanka_mohan #Jakes_Bejoy #Vivek_Athreya #சூர்யா_சாட்டர்டே #நானி #விவேக்_ஆத்ரியா #எஸ்_ஜே_சூர்யா #பிரியங்கா_மோகன் #ஜேக்ஸ்_பீஜாய்