சில திரைப்படங்களின் டைட்டில், எதிர்மறையான கருத்துகளை முன்வைக்கும். அதுவே, அப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் தூண்டும். அதேநேரத்தில், அதெற்கு நேரெதிரான அம்சங்கள் அப்படத்தில் நிறைந்து நிற்கும். மிக அரிதாக, அந்த டைட்டிலுக்கேற்ப அப்படங்களின் உள்ளடக்கம் இருக்கும்.
அந்த வகையில், ‘அதர்மக் கதைகள்’ எனும் டைட்டில் நம் கவனத்தைச் சட்டென்று ஈர்க்கும்விதமாக இருந்தது. இப்படத்தின் ட்ரெய்லரில் பல்வேறு பாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. பல்வேறு பிரச்சனைகள் அதில் இருப்பதாகவும் உணர வைத்தது.
காமராஜ் வேல் இயக்கியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, வளவன், வெற்றி, சாக்ஷி அகர்வால், டிஎஸ்ஆர்.சீனிவாசன், பூ ராமு, கருப்பு நம்பியார், திவ்யா துரைசாமி, சுனில் ரெட்டி, பூஜா, ஸ்ரீதேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எப்படியிருக்கிறது ‘அதர்மக் கதைகள்’?
ஆந்தாலஜி திரைப்படம்!
பழிவாங்குதலை மையப்படுத்திய கதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ஆம், இது ஒரு ஆந்தாலஜி வகைமை திரைப்படம்.
முதல் கதையில் பாரதி நகர் எனும் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரை (வளவன்) சிலர் கொல்ல முயற்சிக்கின்றனர். படுகாயங்களோடு தப்பிக்கும் அவர் மருத்துவமனையொன்றில் ‘அட்மிட்’ செய்யப்படுகிறார். தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்படுகிறது. அந்த ரவுடிக்குச் சிகிச்சையளிக்க நர்ஸ்கள் தயங்க, ஒருவர் (அம்மு அபிராமி) மட்டும் தானாக முன்வந்து பணியாற்றுகிறார்.
அந்த ரவுடியை வெட்டிய ஆட்கள், அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் செல்கின்றனர். அந்த நபரைக் கொன்றுவிடுமாறு கூறிப் பணம் தர முன்வருகின்றனர். ஆனால், அப்பெண் அவர்களை வெளியே சென்றுவிடுமாறு கூறுகிறார். தொடர்ந்து அந்த ரவுடிக்குச் சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
அந்த ரவுடி ஓரளவு குணமடைந்து கண் விழித்ததும், இதர நர்ஸ்கள் சொன்னது போலவே நிகழ்கிறது. சிகிச்சையளிக்கும் அந்த நர்ஸை தவறாகப் பார்க்கத் தொடங்குகிறார். அப்போது, அவர் யார் என்று விசாரிக்கிறார். அப்போது, தன்னைப் பற்றிய விவரங்களை அப்பெண் கூறுவதோடு அக்கதை முடிவடைகிறது. அக்கதையின் முடிவில், ‘பழிவாங்குதல் ஒரு கலையா’ என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அடுத்த கதை, ஒரு இளம் தம்பதியரைப் பற்றியது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட அந்த ஆணும் (வெற்றி) பெண்ணும் (சாக்ஷி அகர்வால்) தங்கள் ஒரு வயது மகனோடு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆனால், அந்த மகிழ்ச்சியினூடே மொபைல் வழியே இணைய சீட்டாட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொள்கிறார் அந்த ஆண். அதன் மூலமாக நிறைய சம்பாதிப்பவர், ஒருகட்டத்தில் பணத்தை இழக்கத் தொடங்குகிறார்.
அங்குமிங்குமாகக் கடன் வாங்கத் தொடங்கி சுமார் 30 லட்ச ரூபாய் வரை கடன் சுமை அவரது தலையில் ஏறுகிறது. அதனை எதிர்கொள்ள முடியாமல், ஒரு குற்றத்தில் ஈடுபட முயல்கிறார். அதற்காக, மகனையும் மனைவியையும் ஒரு திருமண விழாவுக்கு அனுப்பி வைக்கிறார்.
வெளியூர் சென்ற இருவரும் அடுத்த நாள் இரவு வீடு திரும்புகின்றனர். அவர்களைக் கண்டதும் அந்த ஆண் திகைக்கிறார். அதன்பின் என்னவானது என்று சொல்கிறது அக்கதை. அதன் முடிவில், தன்னைத்தானே பழிவாங்குதல் தவறானது என்று சொல்லப்படுகிறது.
மூன்றாவது கதையில், குற்றச் செயல்களில் ஈடுபடும் மூன்று இளைஞர்களை ஒவ்வொருவராகக் கொலை செய்கிறார் ஒரு முதியவர் (பூ ராமு). அவர் யார் என்று போலீசார் தேடியலைவதாக உள்ளது அப்பகுதி. அதன் முடிவில், பிறருக்காகப் பழி வாங்குவது தவறல்ல எனும் தொனியில் நீதியொன்று சொல்லப்படுகிறது.
நான்காவது கதையில், ஒரு பணக்காரத் தம்பதி (சுனில் ரெட்டி, பூஜா) தரும் பணத்திற்காக வாடகைத்தாயாகச் சம்மதிக்கிறார் ஒரு இளம்பெண் (திவ்யா துரைசாமி).
அவருக்கென்று அபார்ட்மெண்டில் ஒரு வீடு தரப்படுகிறது. அங்கு தனது தாயுடன் தங்கியிருக்கிறார். மாதாமாதம் பணம், வேண்டிய வசதிகள் என்று அந்த தம்பதியர் அப்பெண்ணைக் கவனித்துக் கொள்கின்றனர்.
திடீரென்று அந்த தம்பதியின் வரவு நின்றுபோகிறது. அவர்கள் பணம் அனுப்பவில்லை. தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளர் அதனைக் காலி செய்யச் சொல்கிறார்.
என்னவென்று அறிய முயலும்போது, அந்த தம்பதி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பது தெரிய வருகிறது. கணவரும் சரி, மனைவியும் சரி, அந்த குழந்தையை ஏற்கத் தயாராக இல்லை.
அந்த நிலையில், அவர்களைப் பழி வாங்க நினைக்கிறார் அந்த இளம்பெண். அவர் என்ன செய்தார்? பிறகு என்ன நடந்தது என்று சொல்கிறது அந்தக் கதை. இயக்குனர் இக்கதையின் முடிவைச் சொன்ன விதம் நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது.
பழிவாங்குதல் குறித்துப் பேசினாலும், நான்குமே தர்மத்தின் வழியைக் காண்பிப்பவை. அதனால், ‘அதர்மக் கதைகள்’ என்ற தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் நேரடித் தொடர்பில்லை.
கொஞ்சம் சீர்படுத்தியிருக்கலாம்!
சதுரங்க வேட்டை படத்தில் தமிழ் பேசும் ரவுடியாக வந்த வளவன், இதிலும் அதே போன்றதொரு தொனியில் உலாவியிருக்கிறார். அவருக்குச் சிகிச்சையளிக்கும் நர்ஸ் ஆக அம்மு அபிராமி தோன்றியிருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் படமொன்றின் சில காட்சிகளைப் பார்ப்பது போன்றிருக்கிறது அவர்களது இருப்பு.
இரண்டாவது கதையில் வெற்றி இயல்பாக நடித்திருக்கும் அளவுக்குத் திரையில் சாக்ஷி அகர்வாலின் நடிப்பு நம்மைக் கவரவில்லை.
மூன்றாவது கதையில் பூ ராமு மிக இயல்பாக வந்து போயிருக்கிறார். இதர பாத்திரங்கள் நாடகத்தன்மையோடு உலாவுகின்றன.
நான்காவது கதையின் உயிர்ப்புத்தன்மையை உணர்ந்து, அதில் இடம்பெற்ற அனைவரும் நடித்துள்ளனர். வாடகைத்தாயாக வரும் திவ்யா துரைசாமி, அவரது தாயாக நடித்தவர், தம்பதியராக வரும் சுனில், பூஜா, இதர பாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருமே காட்சிகளோடு ஒன்றும் வகையில் தோன்றியிருக்கின்றனர்.
நான்கு கதைகளுக்கும் தலா நான்கு ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் தங்களது பங்களிப்பினைத் தந்துள்ளனர்.
அந்த வகையில் ஒளிப்பதிவாளர்கள் கே.கே., பரணி, ராஜிவ் ராஜேந்திரன், ஜெபின் ரெஜினால்டு, படத்தொகுப்பாளர்கள் நாகூரான் ராமச்சந்திரன், சதீஷ் குரசோவா, மகேந்திரன் கணேசன், கோபாலகிருஷ்ணன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரெய்ஹானா, எஸ்.என்.அருணகிரி, ஹரீஷ் அர்ஜுன், சரண்குமார் இதில் பணியாற்றியிருக்கின்றனர்.
பாடல்களில் ‘எனதுயிரே நீயடி’ மற்றும் ‘யாரடா நீ நீ’ உடனடியாகக் கவர்கின்றன. நான்கு கதைகளுக்குத் தக்கவாறு பின்னணி இசை அமைக்கப்பட்டிருந்தாலும், அவை காட்சிகளின் தன்மையை ஒருபடி மேலுயர்த்துவதாக அமையவில்லை.
இவர்கள் தவிர்த்து கலை இயக்குனர் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட சில தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் தமது பங்களிப்பைத் தந்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார் காமராஜ் வேல்.
யூடியூப்பில் நான்கு குறும்படங்களை ஒரே வரிசையில் கோர்த்ததற்கு நிகரானதொரு காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கிறது ‘அதர்மக்கதைகள்’. போதுமான பட்ஜெட் இல்லாத காரணத்தால், சில இடங்களில் சீரியல் பார்க்கும் உணர்வு எழுகிறது.
ஆனாலும், அறத்தின் வழி கதை சொல்ல வேண்டுமென்ற இயக்குனரின் மெனக்கெடல் பாராட்டுக்குரியது. அதற்கேற்ப நான்காவது கதை அமைந்த அளவுக்கு இதர கதைகளின் உள்ளடக்கம் அமையவில்லை.
அதனைச் சீர்படுத்தியிருந்தால், காமராஜ் வேலின் ‘அதர்மக் கதைகள்’ இன்னும் உயரத்தை எட்டியிருக்கும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்