இந்திய சினிமா சரித்திரத்திலேயே 1931-ம் ஆண்டு புரட்சிகரமான ஆண்டாகும். அந்த ஆண்டு மத்தியில்தான் முதல் இந்திய (ஹிந்தி) பேசும் படமான ஆலம் அராவும் முதல் தமிழ் (தெலுங்கு) பேசும் படமான காளிதாஸும் (இம்பீரியல் பில்ம் கம்பெனியரால் தயாரிக்கப்பட்டு) வெளிவந்தன.
இப்படங்கள் வெளிவந்த மறுகணமே மௌனப் படங்கள் விடைபெற்றுக் கொள்ளாமலே மறைந்துவிட்டன. பேசும் படங்கள் அந்த ஸ்தானத்தை விரைவில் கைப்பற்றிக் கொண்டன.
முதல் தமிழ்ப் படமான காளிதாஸ் வெளிவரும் படங்களுள் மோசமானதைக் காட்டிலும் அநேக மடங்கு மோசமானதாய் இருந்தது உண்மைதான். உதட்டசைப்புக்கும் த்வனிக்கும் சம்பந்தம் சொற்பம்தான்.
ஒருவர் பேசிக் கொண்டிருப்பார்; த்வனி கேட்காது! இன்னொருவர் பேசாமல் இருப்பார்; த்வனி கேட்கும்! ராஜகுமாரி தமிழில் கேட்பாள்; காளிதாஸனோ தெலுங்கில் பதில் கூறுவான்!
கதை துண்டுத் துண்டாகவும் தொடர்ச்சியின்றியும் இருந்தது. ஆடை, ஆபரணங்களைப் பற்றியோ, காட்சி ஜோடனைகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் இதையெல்லாம் பொதுஜனங்கள் பொருட்படுத்தினார்களா?
இல்லை, முதலாவதாக, மௌனப் படங்களைப் பற்றிய ஆச்சரியமே அவர்களுக்குத் தீராமலிருந்த சமயத்தில், காளிதாஸ் பேசவும் செய்தது என்றால் அவர்களது ஆச்சரியம் விவரிக்கக் கூடியதா என்ன?
படம் எப்படித்தான் பேசுகிறதென்பதைப் பார்த்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் திருவிழாக் கூட்டம் போல் ஜனங்கள் மொய்த்துக்கொண்டனர்.
அந்த ஆவல் நல்ல வேளையாக, ஏமாற்றமாய் முடியவில்லை. இப்படத்தின் முதற் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களின் வாயிலிருந்து,
மன்மத பாணமடா,
மாரினில் பாயுதடா…. என்ற பாட்டு ஒலித்தது.
குறத்தி டான்ஸ் பிரமாதம்! ஆமாம் குறத்தியாக நடிக்கிறாளே; அவள் யாருடா? என்று ஒரு ரசிகன் கேட்கிறான்.
அட, தெரியாதா, உனக்கு! டி.பி. ராஜலக்ஷ்மிடா! என்று பதிலளிக்கிறாள் மற்றவன்.
இப்படியாக பொதுஜனங்களை மிக ஆகர்ஷித்த அந்த டான்ஸைப் பற்றி நினைத்தாலே எனக்குச் சிரிப்பு வருகிறது.
அதைப்பற்றி நான் கூறுவதற்குப் பதில் ராஜலக்ஷ்மி கூறுவதையே கேளுங்கள்; “நான் ஆடினதை டான்ஸ் என்றா கூறுகிறார்கள்! எனக்கு டான்ஸும் தெரியாது, மண்ணும் தெரியாது. ஏதோ கை, கால்களை வீசிக்கொண்டு குதிக்கச் சொன்னார்கள்; செய்தேன், அவ்வளவுதான்”
எது எப்படியானால் என்ன? அந்த முதல் தமிழ்ப் படத்திற்கு வசூலை ஏற்படுத்தி வைத்ததும், முக்கியமாகப் பாராட்டப்பட்டதுமான அம்சம், இந்தக் குறத்தி டான்ஸ் தான்! அதை ஆடிய டி.பி. ராஜலக்ஷ்மியோ பொதுஜனங்கனின் அபிமான நக்ஷத்திரம் ஆகிவிட்டார்.
டி.பி. ராஜலக்ஷ்மிக்கு, இந்த முதல் தமிழ்ப் படத்தில் நடித்து, முதல் தமிழ்ப்பட நக்ஷத்திரம் ஆகும் படத்தில் திடீரென்று எப்படி ஏற்பட்டது? என்று அறிய ஆவல் கொள்ளுகிறீர்கள் அல்லவா? உண்மையில், இந்தப் பாக்கியல் அப்படியொன்றும் விடவில்லை. அவருக்குத் திடீரென்று ஏற்பட்டு விடவில்லை.
ராஜலக்ஷ்மி ஒரு உயர்தர அஷ்ட சகஸ்ரபிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரது சொந்த ஊர் திருவையாறு என்றாலும் அவரது தகப்பனாரான பஞ்சாபகேச சாஸ்திரிகள் சாலியமங்கலத்தில் கர்ணம் வேலை பார்த்து வந்ததால் குடும்பம் தஞ்சையிலேயே வசித்துவந்தது.
விரோதிகிருது (1911-ம்) ஆண்டு ஐப்பசி மாதம், 13-ம் தேதி வியாழக்கிழமை புனர்வசு நஷத்திரத்தில் பிறந்த ராஜலஷ்மி மிக சூடிகையோடு காணப்பட்டார்.
எந்தப் பாட்டைக் கேட்டாலும் உடனே அப்படியே பாடி விடுவார். நாடகங்களைப் பார்த்தபின் அப்படியே நடித்துப் பார்ப்பார். அவர் பள்ளியில் சேர்ந்து ஐந்தாவது வரையில் படித்தார்.
ராஜலக்ஷ்மியின் வாழ்க்கையில் அவரது ஏழாவது வயதில், ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் அவரது விவாஹம்… அநேகருக்கும் திருமணம் சந்தோஷத்தையே அளிக்கிறது.
ஆனால் ராஜலக்ஷ்மிக்கோ இதே விஷயம் மாறுதலான பலனை அளித்தது. விவாஹம் ஆனது முதலே சம்பந்திகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு வளர ஆரம்பித்தது. இந்த மனஸ்தாபங்கள் முற்றி முடிவில் ராஜலக்ஷ்மி புக்ககம் போக முடியாதபடி ஆகிவிட்டது.
இப்படியிருக்கையில் அவரது தகப்பனார் காலமானார். குடும்பத்தை ரக்ஷிக்கும் பொறுப்பு ராஜலக்ஷ்மியின் தாயாரான மீனாக்ஷி அம்மாளுக்கு ஏற்பட்டது.
தஞ்சையில் அவர்களுக்கு ஆதரவு இல்லாததால், திருச்சிக்குச் சென்று மலைக்கோட்டையில் வசிக்கலாயினர்.
குடும்பத்தைக் காப்பதற்கு மீனாக்ஷி அம்மாள் பல கஷ்டங்களைப்பட வேண்டியிருந்தது. முன்போ நாடகம் பார்ப்பதிலும், நடித்துப் பார்ப்பதிலும் பிரியம் கொண்டிருந்த ராஜலக்ஷ்மி திருச்சி வந்ததும் அடிக்கடி நாடகங்களைப் பார்க்கத் தொடங்கினார்.
அதன் விளைவாக நாமும் ஏன் நாடகங்களில் நடிக்கக் கூடாது? என்ற கேள்வி மனத்தில் தோன்றியது. இக்கேள்விக்குப் பதிலைத் தம் தாயாரிடம் அறிய முயன்றார்.
ராஜலக்ஷ்மி புக்ககம் போக முடியாதிருந்த சந்தர்ப்பங்கள், அப்போதைய குடும்ப நிலைமை, இவைகளையெல்லாம், அனுசரித்து, மீனாக்ஷி அம்மாள், ராஜலக்ஷ்மி நாடகக் கம்பெனியில் சேருவதற்குச் சம்மதித்தார். அப்போது ராஜலக்ஷ்மிக்குப் பதினாறே வயதுதான் ஆகியிருந்தது.
இந்தச் சமயத்தில் பிரபல ஸி.எஸ். சாமண்ணா ஐயரின் நாடகக் கம்பெனி மதுரையில் நடந்து வந்தது. அக்கம்பெனியில் சேருவதற்காகத் தாயும் மகளும் மதுரைக்குச் சென்றனர். இவர்கள் முதலாளியைப் பேட்டி காணச் சென்றபோது அங்கு டி.டி. சங்கரதாஸ் ஸ்வாமிகள் இருந்தார்.
அவர் ராஜலக்ஷ்மியைப் பார்த்ததும், “பெண் களையாக இருக்கிறாள், சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று சிபாரிசு செய்தார். ராஜலக்ஷ்மி மாதத்திற்கு ரூ.30 சம்பளத்தில் அமர்த்திக் கொள்ளப்பட்டார்.
முதன்முதலாக, பவளக்கொடி நாடகத்தில் புலந்திரன் வேஷத்தில் அவர் மேடை மீது தோன்றினார். அதன் பிறகு அவர் அந்தக் கம்பெனியில் பலதரப்பட்ட வேஷங்களை ஏற்று நடித்து வந்தார்.
ராஜலக்ஷ்மி சேர்ந்த ஒன்றரை மாதக் காலத்திற்கெல்லாம் சாமண்ணா ஐயர் கம்பெனி காரைக்குடிக்குச் சென்றது. இந்த இடமாற்றம் ஏற்பட்ட அதேச்சமயத்தில் ராஜலக்ஷ்மிக்கு மனமாற்றம் ஏற்பட்டது.
அந்தக் கம்பெனியில் அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஆதலால் மதுரைக்குத் திரும்பிவந்தது. கே.எஸ். செல்லப்பாவின் கம்பெனியில் 75 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். இவர் சேர்ந்த இரண்டு மாதங்களுக்கெல்லாம் கம்பெனியே கலைக்கப்பட்டுவிட்டது.
இதன்பிறகு கல்லிடைக்குறிச்சியில் நாடகங்களை நடத்தி வந்த கே.பி. மொய்தீன் சாயபுவின் கம்பெனியில் சேர்ந்தார். இந்தக் கம்பெனியில் அவருக்குப் பிரதம பாகங்களே அளிக்கப்பட்டன.
இக்கம்பெனி ரங்கூனுக்குச் சென்றபோது ராஜலக்ஷ்மியும் கூடவே சென்று மிக நல்ல பெயருடன் இந்தியா திரும்பினார்.
இக்கம்பெனியில் அவர் மூன்று ஆண்டுகாலம் இருந்து வந்தார். அவர் அதிக காலம் இருந்த நாடகக் கம்பெனி இதுதான்.
ரங்கூனிலிருந்து திரும்பியதும் ராஜலக்ஷ்மி மொய்தீன் கம்பெனியிலிருந்து விலகினார் பிரபல கன்னையா கம்பெனியில் முதன் முதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஸ்திரீ நடிகை ராஜலக்ஷ்மிதான் என்பது கவனிக்கத்தக்கது. இக்கம்பெனியில் ராமராக நடித்த கிட்டப்பாவுடன் ராஜலக்ஷ்மி சீதையாக நடித்திருக்கிறார்.
சிறிது காலத்திற்கெல்லாம் ராஜலக்ஷ்மி இக்கம்பெனியிலிருந்து விலகி ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க முற்பட்டார்.
வேலுநாயர், எஸ்.ஜி.கிட்டப்பா, கே.எஸ். செல்லப்பா, சுப்பையா பாகவதர், எம்.ஆர். கோவிந்தசாமி ஆகியோருடன் ராஜலக்ஷ்மி நடித்ததை நேயர்களே பார்த்திருக்கக் கூடும்.
திருச்சி டி.எஸ். நடராஜ பிள்ளையின் காண்டராக்டில் எம்.கே. தியாகராஜ பாகவதர் சென்னை வாசிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
பவளக்கொடி, கோவலன் ஆகிய ஆரம்ப நாடகங்களில் அவருடன் ஸ்திரீ பார்ட்டாக நடிப்பதற்கு அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
ராஜலக்ஷ்மிக்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்களும் சினிமாவும் மிகமிகப் பிடிக்குமாம். ஒரு மௌனப்படம் விடாமல் அவர் பார்த்து வந்ததின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் வேரூன்றி வந்தது.
இந்த எண்ணம் ஈடேறுவதற்கு உதவினார் காலஞ்சென்ற டைரெக்டர் படமுதலாளி ஏ. நாராயணன். 1929ஆம் வருஷத்தில் ராஜலக்ஷ்மி சென்னையில் நடந்து வந்த ஜெனரல் பிக்சர்ஸ் கார்பரேஷனில் சேர்ந்தார். கோவலன் (மௌனப்) படத்தில் மாதவியாக நடித்து அவர் முதன்முதலாகச் சினிமாப் பிரவேசம் செய்தார்.
இப்படம் முடிந்ததும் கே. சுப்ரமணியம், ராஜா சாண்டோ முதலியவர்கள் சம்பந்தப்பட்டிருந்த அசோஸியேட்டட் ஃபிலிம் கம்பெனியில் சேர்ந்தார் ராஜலக்ஷ்மி. உஷா சுந்தரி என்ற படத்தில் சித்திர லேகாவாகவும், ராஜேஸ்வரி என்ற படத்தில் கதாநாயகியாகவும் அவர் நடித்தார்.
ராஜேஸ்வரியின் கதை நல்லதங்காள் கதையைத் தழுவிய சமூகக் கதையாகும். இவ்விரு படங்களிலும் காலஞ்சென்ற ராஜா சாண்டோ பிரதம பாகத்தில் நடித்திருக்கிறார். இம்மூன்று படங்களில் நடித்தபடியே ராஜலக்ஷ்மி ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்து வந்தார்.
எனினும் அவருக்குச் சினிமாத் துறையிலேயே அதிகப்பற்று இருந்தது!
1931-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் பேசும் படங்களைத் தயாரிப்பதற்கான பரீக்ஷார்த்த வேலைகளைப் பம்பாய் இம்பீரியல் ஃபிலிம் கம்பெனியார் நடத்தினார்கள். அவர்கள் முதலில் சில பாட்டுகளையும் நடனங்களையும் துண்டுப்படமாகத் தயாரித்துப் பரிக்ஷிக்க நினைத்தனர்.
இதற்காக அவர்களுக்கு ஒரு தமிழ் நடிகை தேவையாயிருந்தது. அவர்கள் கே. சுப்ரமணியத்தின் உதவியை நாடினார்கள். சுப்பிரமணியம் ராஜலக்ஷ்மியை சிபார்சு செய்தார்.
இரண்டு கீர்த்தனைகளையும் இரண்டு தேசியப் பாட்டுக்களையும் மட்டும் பாடுவதற்காக என்று ராஜலக்ஷ்மி பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குச் சென்ற பின் குறத்தி டான்ஸ்ஸையும் ஆடச் சொன்னார்களாம்.
இவை எல்லாம் திருப்திகரமாய் பதிவானதால், ஒரு சிறிய கதையையே பேசும் படமாகத் தயாரித்தும் பார்க்கலாம் என்ற தைரியம் கம்பெனியாருக்கு ஏற்பட்டதாகும். இதற்கென காளிதாஸ் கதை தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆனால், எல்லாப் பாத்திரங்களுக்கும் தமிழ் நடிகர், நடிகைகளைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆந்திராவிலிருந்து வந்திருந்த ஒருவரைக் காளிதாஸனாக நடிக்கச் செய்துவிட்டனர். காளிதாஸனும் ராஜகுமாரியும் முறையே தெலுங்கு தமிழ் பாஷைகளில் பேசிய விசித்திர சம்பாஷணையுடன் ஒரு துண்டுப்படம் தயாராகியது.
பரிக்ஷார்த்தமாகத் தயாரிக்கப்பட்ட இத்துண்டுப் படங்களைக் காட்சிக்கு அனுப்பும்போது இம்பீரியல் கம்பெனியாருக்கு முதலில் இருக்கவில்லை. ஆனால், பிறகோ இவைகளையெல்லாம் ஒன்றுசேர்த்துக் கதம்பப் படமாக்கிக் காட்சிக்கும் அனுப்பிவிட்டார்கள்.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்றபடி இந்த முதல் தமிழ்ப் படத்திற்கு ஏராளமான வசூலும் ஏற்பட்டுவிட்டது! பேசும் படங்களுக்கு ரசிகர்கள் அதிகமான ஆதரவை அளிப்பார்கள் என்பது, காளிதாஸ் ஆல்அமாரா ஆகிய படங்கள் மூலம் நிரூபணம் ஆனதும் வங்காளிகளும் இம்முயற்சியில் ஈடுபடலாயினர்.
ஈஸ்ட் இந்தியா ஃபிலிம் கம்பெனியார் ராஜலக்ஷ்மி முதலான பல தமிழ் நடிகர், நடிகைகளைக் சென்னையிலிருந்து அழைத்துப்போய், ராமாயணம் தமிழ்ப் படத்தைத் தயாரித்தார்கள்.
மதன் கம்பெனியார் ராஜலக்ஷ்மியைக் கொண்டு சாவித்திரி படத்தைத் தயாரித்தனர். இவ்விரு படங்களும் சாதாரணமாகவே இருந்தபோதிலும் பணவசூல் நிறைய ஏற்பட்டது.
1933ஆம் ஆண்டில் கோவையைச் சேர்ந்த (காலஞ்சென்ற) எஸ். வின்ஸென்ட் ராஜலக்ஷ்மியை வள்ளியாகவும் ஸி.எம். துரையை சுப்ரமணியராகவும், டி.வி. சுந்தரத்தை நாரதராகவும் நடிக்கச் செய்து, வள்ளித் திருமணம் படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
படங்களுள் பண வசூலில் முதல் ஸ்தானத்தை வகித்தது. ஜனங்களுக்குப் பேசும் படங்கள் மீது அளவில்லாத மோகம் ஏற்பட்டது. வள்ளித்திருமணம் படம் வெளிவந்த சில தினங்கள் வரை ஒரு ரீல் இல்லாமலேயே ஓடியதாம்.
ரசிகர்கள் அதை ஒரு குறையாகவே எண்ணாமல் படத்தைப் பார்த்து வந்தார்களாம்.
வள்ளியில் நடித்தவுடன் ராஜலக்ஷ்மி மீது பொது ஜனங்களின் அபிமானம் அளவு கடந்து விட்டது. அவருக்குச் சினிமா ராணி என்ற பட்டத்தை வலுவில் சேர்த்துவிட்டனர்.
பட உலகிலோ அவருக்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டது. அவர் கல்கத்தாவிலேயே தங்கி மளமளவென்று நியூ தியேட்டர்ஸ் கோவலன், திரெளபதி வஸ்திராபஹரணம், ஹரிச்சந்திரா, குலேபகாவலி, லலிதாங்கி ஆகிய படங்களில் நடித்து முடித்தார். இப்படங்களிலெல்லாம் அவருடன் வி.ஏ. செல்லப்பா பிரதம பாகங்களில் நடித்திருக்கிறார்.
இப்படங்கள் முடிந்ததும் ராஜலக்ஷ்மி சென்னைக்கு வந்தார். சீமந்தனி, பாமா பரிணயம் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு கல்கத்தாவுக்குச் சென்று வீர அபிமன்யுவில் நடித்தார்.
இவ்வளவு படங்களில் நடித்து அனுபவம் பெறவே அவர் சொந்தத்திலேயே ராஜம் டாக்கீஸ் என்ற படக்கம்பெனியை ஆரம்பித்தார். இக்கம்பெனி மூலம் அவர். மிஸ் கமலா என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
மிஸ் கமலாவின் கதை ராஜலக்ஷ்மியாலேயே எழுதப்பட்டது. அப்படத்தை டைரெக்ட் செய்தவரும் அவர்தான். தென்னிந்தியாவின் முதல் பட முதலாளினி – ஸ்திரீ டைரெக்டர் என்ற தனிப்பெருமையை ராஜலக்ஷ்மியே வகிக்கிறார்.
மிஸ் கமலா சுமாரான வசூலையே அளித்தது. அதன் பின்னர் ராஜலக்ஷ்மி (மஹாலிங்கம் நடித்த) நந்தகுமார் படத்தில் யசோதையாக நடித்தார். பின்னர் சுகுணசரலபா படத்தில் கிருஷ்ணன் வேஷத்தில் தோன்றினார்.
இவை முடிந்தபின், அவர் ராஜீபிலிம்ஸ் கூட்டுறவில் மதுரை வீரன் தமிழ்ப் படத்தைத் தயாரித்தார். வெகு காலத்திற்குப் பிறகு வி.ஏ. செல்லப்பா இப்படத்தில் அவருடன் மீண்டும் சேர்ந்து நடித்தார்.
இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. பிறகு இந்த ஜோடி, பக்த குமணன் படத்திலும் நடித்தது. இதற்கு அடுத்தபடியாக, ராஜலக்ஷ்மி சொந்தத்தில் இந்தியத் தாய் என்ற தமிழ்ச் சமூகப் படத்தைத் தயாரித்தார்.
ஆனால் இப்படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பிறகு உத்தமி, பரஞ்சோதி ஆகிய படங்களில் நடித்தார்.
ராஜலக்ஷ்மி நடித்துக் கடைசியாக வெளிவந்துள்ள படம் ஜீவஜோதி யாகும். இப்படத்தில் அவரது வேஷமும் நடிப்பும் உன்னதமாய் இருந்தது.
ராஜலக்ஷ்மி சென்ற 19 ஆண்டுக் காலத்தில் மொத்தம் 22 படங்களிலேயே நடித்திருப்பதும் முதல் தமிழ்ப்பட நாள் முதல் இன்றுவரை அவர் சினிமா உலகிலேயே இருந்து வருவதும் ஆச்சரியத்தை அளிக்கும் விஷயங்கள் தாம்.
ராஜலக்ஷ்மி கிறமையுள்ள நடிகை: ஒரு தமக்கு அளிக்கப்படும் பாத்திரத்தை நன்குணர்ந்து நகாஸுடன் நடிக்கக்கூடியவர். அவர் நடித்த முதல் படக் காலத்திலிருந்து இன்றைய தமிழ்ப்பட உலகம் எவ்வளவோ புரட்சிகரமான மாறுதல்களை அடைந்துவிட்டது.
ஆனால், ராஜலக்ஷ்மியும் இந்த மாறுதல்களுக்கு ஏற்றபடி மாறிடவில்லை. தம் கொள்கைப்படி யே தான் அவர் இருந்து வருகின்றார். அவர் குறைந்த எண்ணிக்கைப் படங்களில் தோன்றியிருப்பதற்கு இதுதான் காரணமாகும்.
அதே சமயத்தில், அவர் நீண்ட காலமாகச் சினிமா உலகில் நல்ல மதிப்புடன் விளங்கி வருவதற்கும் இதையே தான் காரணமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
வள்ளி படம் முடிந்த சில வருஷங்களுக்குப் பிறகு (தம் முதல் கல்யாணத்தை ரத்து செய்துகொண்டு) அப்படத்தில் நாரதராக நடித்த டி.வி. சுந்தரத்தைச் சட்ட முறைப்படி விவாஹம் செய்துகொண்டார்.
சுந்தரம் நன்கு பாடக் கூடியவர். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மதுரைவீரன் வரையில் ராஜலக்ஷ்மி நடித்த படங்களில் எல்லாம் சுந்தரமும் நடித்திருக்கிறார். இவர்களுக்கு ஒரே ஒரு பெண் மட்டும் பிறந்திருக்கிறாள். கமலா என்ற பெயருடைய இப்பெண்ணிற்குத் தற்போது சுமார் 12 வயது இருக்கும்.
தமக்குச் சொந்தமாகக் குழந்தை பிறப்பதற்கு முன்பாக ராஜலக்ஷ்மி மல்லிகா என்ற பெயருடைய பெண்ணை வளர்த்து வந்தார். வயது வந்தவுடன் அப்பெண்ணை முறைப்படி விவாஹம் செய்து கொடுத்துவிட்டார்.
ராஜலக்ஷ்மிக்கு உடன்பிறந்தவர்கள் – ராஜகோபால், ராஜசேகரன் ஆகிய இருதம்பிகள் மட்டுமே.
ராஜகோபால் ஹார்மோன்யத்திலும், சங்கீதத்திலும் தேர்ச்சி உடையவர். ராஜலக்ஷ்மியின் சொந்தப் படங்களுக்கு இவர்தான் சங்கீத டைரெக்டராக இருந்திருக்கிறார்.
ராஜலக்ஷ்மி தஞ்சையிலிருந்து திருச்சிக்கு வந்து நாடகங்களில் சேர்ந்து பின்னர், தென்னிந்திய ரயில்வேயில் டிரைவராக இருந்த டி.வி. பாலகிருஷ்ண நாயுடு இவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய முற்பட்டார்.
பிறகு அவர் தம் வேலையை விட்டுவிட்டு ராஜலக்ஷ்மி குடும்பத்தில் ஒருவராய் இருந்து காரியங்களைக் கவனித்துவந்தார். ராஜலக்ஷ்மியின் தாயாரும் சாமர்த்தியம் உடையவர். அவர்கள் இருவருடைய திறன்மிக்க கண்காணிப்பின் மூலம்தான் ராஜலக்ஷ்மி இன்றைய நல்ல நிலைமையில் இருந்து வருகிறார்.
உறவு விஷயத்தில் கடைசியாக ஒரு தமாஷான விஷயம் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ராஜலக்ஷ்மியின் குடும்பத்திற்கும், ராஜ என்ற பெயருக்கும் நெருங்கிய உறவு காணப்படுகின்றது பாருங்களேன்.
ராஜலக்ஷ்மி இருக்கும் தெருப் பெயர் ராஜரத்தினம் தெரு, வீட்டின் பெயர் ராஜ மஹால், படக்கம்பெனியின் பெயர். ராஜம் டாக்கீஸ். இவர்களுடன் கூட்டாகப் படம் தயாரித்த கம்பெனியின் பெயர் ராஜீ பிலிம்ஸ்; தம்பிகளின் பெயர்கள் – ராஜகோபால், ராஜசேகரன். இப்படியாக ராஜ என்ற பதம் இவர்களது குடும்பத்தின் முத்திரையாக விளங்குகின்றது.
-நன்றி: (குண்டூசி – ஜுலை, 1950-ம் ஆண்டு வெளிவந்த கட்டுரை)