பயணத் திரைப்படங்கள் என்பது தீவிர சினிமா ரசிகர்களுக்கான ஆகப்பெரிய விருந்து. ஒரு பயணத்தின்போது நிகழும் சம்பவங்களும், இறுதியாகச் சம்பந்தப்பட்ட பாத்திரங்களிடம் நிகழ்ந்த மாற்றங்களுமாக அப்படங்கள் முடிவடையும். கதையின் மையப்பிரச்சனைக்கான தீர்வுகளையும் தரும்.
அந்த வகைமையில், புதியதொரு திரையனுபவத்தைத் தந்தது ‘கூழாங்கல்’. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய முதல் படம் அது.
கணவருடன் சண்டையிட்டு கைக்குழந்தையோடு தாய்வீட்டுக்குச் செல்வார் அவரது மனைவி. பள்ளியில் இருக்கும் மகனை அழைத்துக் கொண்டு அப்பெண்ணைத் தேடி அந்த ஆண் செல்வதும் மாமியார் வீட்டில் சண்டையிட்டு வெறுங்கையோடு திரும்புவதுமாக அக்கதை நகரும்.
அந்த ஆணிடத்தில் மகன் வம்பிழுக்க, அவனை அவர் விரட்டிச் செல்வதாகத் தொடரும் அக்கதை; அந்தப் பயணத்தின்போது கூழாங்கல் ஒன்றை எடுத்து வரும் அச்சிறுவன், மாலையில் வீடு வந்து சேர்வதோடு முடிவடையும்.
அப்போது, அவனது தந்தை வீட்டில் மது போதையில் உறங்கிக் கொண்டிருப்பார். தாயும் தங்கையும் வீடு திரும்பியிருப்பார்கள்.
தன் கையில் இருக்கும் கூழாங்கல்லை அலமாரியில் அச்சிறுவன் வைக்கும்போது தான், அதில் கூழாங்கற்கள் குவியலாகக் கிடப்பது நமக்குத் தெரிய வரும். அது, அப்பாத்திரங்களின் தினசரி வாழ்வு எப்படிப்பட்டது என்பதை நமக்குணர்த்தும்.
பல வாகனங்களில், பல வழிகளில் நிகழும் அந்தப் பயணத்தில், அப்பாத்திரங்கள் எதிர்கொள்ளும் விஷயங்களின் வழியே, இயக்குநர் சொல்லும் பல்வேறு கருத்துகளைப் புரிந்துகொண்டார்கள் ரசிகர்கள்.
அதேபாணியில் இன்னொரு பயணப்படமொன்றைத் தந்திருக்கிறார் அதே இயக்குநர். அதன் பெயர் ‘கொட்டுக்காளி’.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, அன்னா பென், ஜவஹர் சக்தி, பூபாளம் ஜெகதீஷ்வரன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
சரி, ‘கொட்டுக்காளி’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
பிடிவாதமான மங்கை!
‘கொட்டுக்காளி’யை ஆங்கிலத்தில் ‘பிடிவாதமான பெண்’ என்றே குறிப்பிடுகிறது படக்குழு. அதற்கேற்ப, இப்படத்தின் கதையும் அமைந்துள்ளது.
பாண்டியின் (சூரி) அத்தை மகள் மீனா (அன்னா பென்). இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்கின்றனர்.
மீனா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில் பாண்டியின் வீட்டில் பெண் கேட்கின்றனர். ‘காலேஜ் முடிக்கட்டும்’ என்கிறார் பாண்டியின் அத்தை.
கல்லூரியில் வேறொரு சாதியைச் சேர்ந்த இளைஞனை மீனா காதலிக்கிறார். இந்த விஷயம் முதலில் அவரது வீட்டினருக்கும் பிறகு உறவினர்களுக்கும் தெரிய வருகிறது.
வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பாண்டி, விஷயம் கேள்விப்பட்டு உடனடியாகத் திரும்பி வருகிறார். மீனாவின் காதலன் அவரை ஏதோ மாய மந்திரத்தின் வழியே வசியம் செய்துவிட்டதாக உறவினர்கள் எண்ணுகின்றனர்.
மீனாவையும் பாண்டியையும் அழைத்துக்கொண்டு குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து பேயோட்டும் சாமியாரிடம் சென்று வசியத்தைக் கலைக்க மருந்து வாங்குவதென்று முடிவு செய்கின்றனர் உறவினர்கள்.
அந்தப் புள்ளியில் இருந்து திரைக்கதை நகரத் தொடங்குகிறது.
குலதெய்வம் கோயிலுக்கு ஒரு ஆட்டோ, மூன்று பைக்குகளில் ஆண்களும் பெண்களுமாகச் செல்கின்றனர். அந்தப் பயணத்தின்போது அவர்கள் எப்படிப்பட்ட அனுபவங்களை எதிர்கொள்கின்றனர் என்று சொல்கிறது ‘கொட்டுக்காளி’.
‘இது ஒரு படமா’ என்று கேட்கலாம். அப்படிக் கேட்பவர்களுக்கு ‘இதுதான் படம்’ என்று பார்வைக்கு முன்வைத்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ்.
விருது பெறும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டது ‘கூழாங்கல்’. இப்படமும் அதேபோன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதனால், இப்படத்தைச் சூரி நடித்த கமர்ஷியல் படமாக நோக்கக் கூடாது. அதுவே, இப்படத்தைப் பார்ப்பதற்கான முதல் நிபந்தனை. அதனை மறந்துவிட்டு தியேட்டருக்குள் சென்றால், தொடக்கக் காட்சியில் இருந்தே ‘ஜெர்க்’ அடிக்கத் தொடங்கிவிடும்.
வித்தியாசமான ஆக்கம்!
மொத்தமாகப் பத்துக்கும் மேற்பட்ட பாத்திரங்கள். ஆங்காங்கே கடந்து போகும் சில மனிதர்கள். காடு, தோப்பு, மேடும் பள்ளமுமான சாலை என்று நகரும் பயணம். அதன் வழியே மெதுவாக உணரப்படும் கதை, பாத்திரங்களின் தன்மை என்று செல்கிறது ‘கொட்டுக்காளி’.
ஒளிப்பதிவாளர் பா. சக்திவேல் இந்தப் படத்தில் ஒரு ‘உலக சினிமா’ பார்க்கும் அனுபவத்தைத் தருகிறார். அவர் வைத்திருக்கும் பிரேம்கள் அனைத்தும் அப்படி.
அதற்கான ஒரு சோறு பதமாக இருக்கிறது, ஆட்டோவுக்குள் புகுந்து இரண்டு பெண்களைச் சூரி தாக்குகிற காட்சி.
அதில், சூரி பாத்திரத்தின் வேகத்திற்கு இணையாக ஆட்டோவுக்குள் புகுந்து வெளியேறுகிறது கேமிரா. கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், அவர்கள் பயணிக்கும் வாகனங்களைக் காட்டும் வகையில் ‘மூவிங் ஷாட்’கள் அமைந்திருப்பது அழகு.
ஒரே நாளில் மிகச்சில மணி நேரங்கள் நடைபெறுவதாக உள்ள இக்கதையினை மிக எளிதாக நமக்குச் சொல்கிறது கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு.
பெரும்பாலான காட்சிகளில் பாத்திரங்களின் பாவனைகளும், வாகனங்கள் செல்லும் சாலையுமே பிரதானமாகக் காட்டப்படுகிறது.
அவை உருவாக்கும் வெறுமையை இசையால் மட்டுப்படுத்த இயக்குநர் முயற்சிக்கவில்லை. மாறாக, அது அப்படியே உணரப்பட வேண்டுமென்று விட்டிருக்கிறார்.
அதனால், இப்படத்திற்கு இசை கிடையாது. அதேபோல இதில் வசனங்களும் அதிகமில்லை.
அதற்குப் பதிலாக, சுரேன் ஜி மற்றும் எஸ்.அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பே காட்சிகள் நிகழும் சூழலின் தகிப்பைத் தணிக்கிறது.
பறவைப் பார்வையில் இதில் ஷாட்கள் இடம்பெற்றுள்ளன. கதாபாத்திரங்கள் செல்லும் சாலையில் சில விலங்குகள் எதிர்ப்படுகின்றன.
படம் முழுக்க ஒரேவிதமான வண்ணத்தொனி தென்பட, டிஐ பணிகள் கைகொடுத்திருக்கின்றன.
இது தவிர ஒப்பனை, ஆடை வடிவமைப்பு மற்றும் இதர தொழில்நுட்பப் பணி பணியாளர்கள் இப்படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கின்றனர்.
சூரி இதில் பாண்டியாகவும், மீனாவாக அன்னா பென்னும் நடித்துள்ளனர். சூரியன் தந்தையாக பூபாளம் ஜெகதீஸ்வரன் நடித்துள்ளார்.
ஆத்திரத்தின் உச்சத்தில் அடிக்கக் கை ஓங்குமிடத்தில் சூரியின் நடிப்பு அருமை. போலவே, தன் மனதில் உள்ளதைத் தீர்மானமாகக் கொண்டிருக்கும் பெண்ணாகத் தோன்றி அசத்தியிருக்கிறார் அன்னா பென்.
சூரியின் சகோதரிகளாக வருபவர் பேசி நடித்திருக்கின்றனர் என்றால், அன்னாவின் தாயாக வருபவர் மௌனத்தின் வழியே நடித்திருக்கிறார். இந்த படத்தில் இதர பாத்திரங்களில் நடித்தவர்கள் தொடங்கி பத்து வயதுச் சிறுவனாக வருபவர் வரை அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
இயக்குனர் வினோத்ராஜ், காட்சியாக்கத்தில் காட்டிய மெனக்கெடலை எழுத்தாக்கத்தில் காட்டவில்லை. அதனால், ‘வித்தியாசமான ஆக்கம்’ என்ற புள்ளியில் நின்றுவிடுகிறது இப்படம்.
‘கூழாங்கல்’ போல் இருக்கிறதா?
வெறுமனே வெறுமையை நிரப்பியிருக்கும் விருது பட உள்ளடக்கம் ‘கூழாங்கல்’லில் காணக் கிடைக்காது. அதையும் மீறி, மையப்பாத்திரங்களின் வாழ்க்கை அதில் இழையோடியிருக்கும். அது எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைப்பதாக, அப்படத்தின் முடிவு அமைக்கப்பட்டிருக்கும்.
இடையிடையே நிலத்தில் பொந்து அமைத்து வாழும் எலியைப் பிடித்து சுட்டு சாப்பிடும் ஒரு குடும்பம், ஆசிரியை தனது கணவரோடு டிவிஎஸ்50யில் வருவது, மினி பஸ்ஸில் பழனி சென்றுவிட்டுத் திரும்பும் பயணிகள் என்று அந்நிலத்தில் வாழும் மனிதர்களின் வேறுபட்ட இயல்புகளைக் காட்டும் காட்சியமைப்பு இருக்கும்.
அதனைப் பிரதியெடுத்தாற்போல அமைந்திருக்கும் இத்திரைக்கதையில் அத்தகைய சுவாரஸ்யம் கிடைக்கப் பெறவில்லை. அதுவே ‘கொட்டுக்காளி’ படத்தின் ஆகப்பெரிய மைனஸ்.
ஒரு காட்சியில், சூரியின் பாத்திரம் ஏன் அப்பெண்களைத் தாக்குகிறது? அந்த மனநிலைக்கு அவரைத் தள்ளுவதற்கான காரணமாக, அப்பெண்களில் ஒருவர் சினிமா பாடலை முனுமுனுப்பது காட்டப்படும்.
கிளைமேக்ஸ் நெருங்குகையில், அடிபட்ட பெண் ‘அடிக்க மட்டும் செய்யலை’ என்று நடந்ததை ஒற்றை வரியில் விளக்குவார். அப்படியானால் சூரியின் பாத்திரம் என்ன செய்தது?
அதற்கான பதிலாக, பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்ணைத் தொட்டு சில செயல்களைச் சாமியார் செய்வதாகக் காட்டப்படும். அதனைக் கண்டதும் சூரியின் முகத்தில் தெரியும் மாற்றங்களே, நமது கேள்விகளுக்கான பதில்கள்.
போலவே, அந்தக் குடும்பத்தினரின் பயணத்தைத் தடை செய்யும் வகையில் ஒரு காளை சாலையை மறித்து நிற்கும். அதனை அவர்களால் விரட்டவே முடியாது.
ஆனால், அதனை வளர்க்கும் ஒரு இளஞ்சிறுமி ‘வா’ என்றவுடன், அந்தக் காளை அவர் பின்னாலேயே நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கும்.
’பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்ணைச் சரியாக்கவும் அப்படிப்பட்ட அன்பே தேவை’ என நாமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரோ இயக்குநர்? தெரியவில்லை.
சில ஆண் பாத்திரங்கள் டாஸ்மாக் கடையைத் தேடுகையில், தெருவைக் காட்டும் இடுக்கொன்றில் வட இந்தியர் ஒருவர் ஒரு வாகனத்தைத் தள்ளிச் செல்லும் ஷாட் வந்து போகிறது. அதனைக் கண்டதும், ஒரு குழந்தை ‘அம்மா ஐஸ் வேணும்’ என்கிறது. இப்படிச் சின்ன சின்னதாய் பல விஷயங்கள் படத்தில் உண்டு.
இரண்டாம், மூன்றாம் முறை இப்படத்தைப் பார்த்தால் மட்டுமே அவை பிடிபடும்.
ஆனால், ஒருமுறை பார்ப்பதற்குள் நுரை தள்ளும் அளவுக்குத் திரைக்கதை ‘ரோடு ரோலராய்’ நகர்கிறது. அதிலும் சில காட்சிகளில் பாத்திரங்கள், வாகனங்கள் நகர்ந்தபின்னும் ‘பிரேம்’ நிலைத்து நிற்கிறது. அந்த நொடிகளின்போது ‘ப்பா.. முடியலைடா சாமி’ என்று துள்ளிக் குதித்து தியேட்டரை விட்டு ஓட எத்தனிக்கிறது மனம்.
போலவே சிறுநீர் கழிப்பது, மாதவிடாய் காலத்தில் நாப்கின் மாற்றுவது போன்றவையும் திரைக்கதையில் வந்து போகின்றன. அதற்காக, அவற்றைக் காட்டக் கூடாது என்றும் சொல்லவில்லை. ஆனால் ‘கூழாங்கல்’ படத்தின் அடுத்த படி இது என்று இயக்குநர் நினைத்தாரானால், அவரிடத்தில் ‘ஸாரி’ தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
போலவே, இப்படத்தின் ஓபன் கிளைமேக்ஸும் நம்மை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.
மற்றபடி பிளாஸ்டிக் மற்றும் பாலீத்தின் பயன்பாடு, ஆணவக்கொலைக்கு ஈடாகப் பெண்களின் காதலை உருக்குலைக்க முயற்சிக்கும் சாதீய வேட்கை, அதற்காகச் சில சாமியார்களைத் தேடிச் செல்லுதல், குடும்ப உறவினர்கள் முன்பே அந்த நபர் செய்யும் பாலியல் அத்துமீறல்கள் போன்றவற்றைப் பேசுகிறது இப்படம்.
‘கொட்டுக்காளி’யை ‘கூழாங்கல்’ உடன் ஒப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்த இரு படங்களை மறக்கும் அளவுக்கு, அடுத்த படத்தில் புதியதொரு திரையனுபவத்தை இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தர வேண்டும்.
இந்த புகழாரங்களை மறந்து, தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதற்காகவே இந்த ஒப்பீடு.
மற்றபடி, சூரியின் ஆக்ரோஷத்தை ட்ரெய்லரில் பார்த்துவிட்டு ‘மிகப்பெரிய கமர்ஷியல் படம் இது’ என்ற நினைப்பில் தியேட்டருக்குள் நுழைபவர்களுக்கு பெரிதாக ஒரு ‘ஸாரி’ சொல்ல வேண்டியிருக்கிறது.
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், அதையும் ‘டைட்டிலில்’ ஒரு கார்டாக இணைத்திருக்கலாம்.
– உதயசங்கரன் பாடகலிங்கம்