அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வரலாறு!

Unleash என ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. ’கட்டவிழ்த்து விடுதல்’ என மொழிபெயர்க்கலாம். பல நேரங்களில் இந்த வார்த்தையை ஒருவரின் கோபத்தை குறிக்க பயன்படுத்துவார்கள். எந்தவித கட்டுப்பாடுக்கும் தாழ்படிய விரும்பாத தன் கோபத்தை பா.ரஞ்சித் ‘தங்கலான்’ படத்தில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

’பூதம் காக்கும் புதையலை அடைவது’ என்கிற தொன்மக் கதைக்குள் இந்திய வரலாற்றையும் தலித்களின் விடுதலைக்கான அரசியலையும் தன்னுடைய திரை ஆக்க செறிவில் படைத்து அளித்திருக்கிறார் பா.ரஞ்சித்.

இந்திய வரலாற்றைப் பதிவு செய்தததில் இரு சிந்தனைப் போக்குகள் பிரதான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. மார்க்சிய போக்கு, இந்தியப் பரப்பின் மக்கள், உற்பத்தி, சாதி, சமூகம், உழைப்பு, அரசு உருவாக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தியது.

அம்பேத்கரிய, பெரியாரியப் போக்குகள் பிரதானமாக மானுடவியல், கருத்தியல், மதம், பண்பாடு முதலியவற்றில் கவனம் செலுத்தியது. இரு போக்குகளுமே ஒப்புக்கொண்ட முக்கியமான இடம், பார்ப்பன ஆதிக்கம்!

பா.ரஞ்சித், அம்பேத்கரின் சிந்தனைப் போக்கை எடுத்திருக்கிறார்.

பார்ப்பனியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு என்றவர் அம்பேத்கர். நாகர்கள்தான் பூர்வக்குடிகள் என்பார். பெளத்தம், பார்ப்பனியத்துக்கு முக்கியமான மாற்றுநெறி என அறிவித்தவர்.

தங்கலான் படத்தில் அம்பேத்கரின் சிந்தனைப் போக்கை கையாண்டிருக்கிறார் பா.ரஞ்சித். அம்பேத்கரின் யார் சூத்திரர்கள், புத்தரா, காரல் மார்க்ஸா? போன்ற புத்தகங்களை எடுத்து படத்தில் கையாண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் தங்கம் குறித்த மார்க்சின் ‘மஞ்சள் பிசாசு’ என்கிற சொல்லாடலை ’மஞ்சள் பேய்’ என எடுத்தாளுகிறார். மார்க்சியம் முன் வைக்கும் உற்பத்தி முறை மாற்றம் என்கிற உத்தியைக் கொண்டும் இந்திய அரசியல் மாற்றங்களை தலித் விடுதலை நோக்கி அவதானிக்கிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தை பொறுத்தவரை தன்னுடைய திரை ஆக்கங்களுக்கென நம்மை ஒரு வகையில் அவர் பழக்கப்படுத்தி விட்டார். அவரின் பெரும்பாலான படங்கள் வெளியானதும் அது சார்ந்த விவாதங்கள் முகநூலில் நடக்கும்.

அந்த விவாதங்கள் அரசியல் உரையாடலாக பரிணமிக்கும். போலவே அவருடைய படங்களில் குறியீடுகளாக என்னவெல்லாம் இடம்பெறும் என்பதையும் அவரின் அரசியல் அடிப்படையில் என்னவாக இருக்கும் என்பதையும் ஓரளவுக்கு நம்மை ஏற்க வைத்து விட்டாரென சொல்லலாம்.

இன்னொரு அற்புதமாக, மணிரத்தின பாணி கிசுகிசுப்பு பேச்சுகளை தாண்டி, உழைக்கும் வர்க்க மக்களின் சத்தமான பேச்சு பாணியையும் தமிழ்ச் சமூகம் ஏற்க வைத்திருக்கிறார். இவை யாவுமே பா.ரஞ்சித் என்கிற ஆளுமையின் வீச்சு என்றுதான் சொல்ல வேண்டும்.

தங்கலான் படத்தில் இவை எல்லாமுமே நேர்ந்திருக்கிறது. கூடுதலாக திரை ஆக்கத்தில் பா.ரஞ்சித்தின் பெரும் பாய்ச்சல் நேர்ந்திருக்கிறது.

நானும் தோழரும் முக்கியமாக ஒரு விஷயத்தை படம் முழுக்க வியந்து கொண்டே இருந்தோம். ஒரு செட் போட்டு அதற்குள் Mystic உணர்வை கொண்டு வருவது எளிது.

திறந்தவெளியில் பெரும் வெளிச்சத்தில் அதை இயக்குநர் நிகழ்த்திக் காட்டியிருந்ததை வியந்து கொண்டிருந்தோம்.

குறிப்பாக Indiana Jones, Mummy போன்ற expedition கதைக்குள் அரசியல், வரலாறை குறியீடாக்குவது சிக்கலாக மாறும் தன்மை இருக்கிறது எனத் தெரிந்தும் அதை செய்து, வென்று காட்டியிருக்கிறார்.

கூடுதலாக தமிழர் வாழ்வுக்குரிய தொன்மத்தை அதற்குள் உள்ளடக்கி Magical Realism பாணியை தமிழ்ப்படுத்தியிருப்பது ரசனைக்குரியது.

இருவேறு காலவெளிகளாக துண்டுகளாக காட்டப்பட்டு தொடங்கும் இறுதிக்காட்சி, படபடவென விரிந்து புத்தரை காண்பித்து பிறகு காலப்பெருவெளியினூடாக இந்திய வரலாற்றில் நேர்ந்த அரசியல் சூழ்ச்சிகளில் தலித்துகளும் உழைக்கும் மக்களும் அடிமையாகி உரிமை இழந்து தொடர்ந்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டிய விதம் புல்லரிக்க வைத்தது. கிட்டத்தட்ட Lucy பட இறுதிக்காட்சி போல, வரலாற்றினூடாக ஒரு wormhole போல் அக்காட்சி அமைந்திருந்தது.

மார்க்சிஸ்டுகளாக நிச்சயம் பா.ரஞ்சித் முன் வைக்கும் அரசியலில் நமக்கு முரண் உண்டு. அது பகை முரண் அல்ல, நேச முரண்தான்.

இப்படத்திலும் பா.ரஞ்சித் உருவாக்க முயலும் ‘கடந்தகால பெளத்த பொற்காலத்தில்’ நமக்கு விமர்சனம் இருந்தாலும் அவர் முன் வைக்கும் அரசியலுக்கான நியாயம் என்றாலும் அதைத் தாண்டி ஒரு நெருடல் படத்தின் முடிவில் இருந்தது.

தங்கத்தை சுரண்ட முனையும் ஏகாதிபத்தியம் மற்றும் அரசுகளுக்கு எதிராக அதைக் காவல் காத்து நிற்கும் ஆரத்தியிடம் தங்கலான், ‘தொடர்ந்து வீழ்த்தப்படும் எங்களின் மேம்பாட்டுக்காக மட்டும் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்கிறோம்’ எனக் கேட்பது சரியாக இருக்குமா என்பதுதான்.

அந்தக் ‘கொஞ்சம்’ என்பது எப்போதும் முடிவுறாது என்பதை குறிக்க புத்தர் சொன்னதுதானே ‘பற்றறு’ என்பதும் மார்க்ஸ் சொன்ன தனியுடமை என்பதும்?

இது அரசியல் உரையாடல். இது இப்படிதான் நடக்கும். நடக்கட்டும். அதுவே ஆரோக்கியம்!

மற்றபடி தங்கலான் படத்தில் பெரும் பாய்ச்சலை ஆக்கமாவும் உள்ளடக்கமாகவும் பா.ரஞ்சித் நிகழ்த்தியிருக்கிறார். விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்கள் நின்றாடியிருந்தாலும் என்னுடய pick ஆதித்தாய், ஆரத்திதான்!

– நன்றி: ராஜா சங்கீதன்

You might also like