காணாமல்போன குறுங்காட்டை மீட்டெடுத்த இளைஞர்!

சக்சஸ் ஸ்டோரி – 12

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் காணாமல்போயிருந்த 25 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த காட்டை மீட்டெடுத்த பணிக்காக, தமிழக அரசின் சிறந்த இளைஞருக்கான விருது பெற்றிருக்கிறார் குடியாத்தம் ஸ்ரீகாந்த்.

மணல் குவாரியாக மாறிய காடு:

குடியாத்தம் அருகேயுள்ள உள்ளி பஞ்சாயத்தில் பாலாற்றங்கரையில் 25 ஏக்கரில் பசுமையான குறுங்காடு வளர்ந்திருந்தது.

பறவைகளும் மான்களும் உலவிய வனம் ஒரு நாள் வறண்ட வனாந்தரமாக மாறியது. மணல் சுரண்டும் குவாரியாக மாறிய காட்டை பெரும் முயற்சிகளுக்குப் பிறகு அவர் மீட்டெடுத்தார்.

வேலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வாத்தியார்பட்டியில் வசித்துவரும் ஸ்ரீகாந்த் விருது பெற்றதற்குப் பாராட்டுகள் குவிகின்றன.

சென்னையில் சினிமா உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், தன் அண்ணனின் திடீர் உயிரிழப்பால் சொந்த ஊருக்குத் திரும்பவேண்டியிருந்தது. அதுவே மரம் வளர்ப்பிற்கான ஒரு நல்ல தொடக்கமாகவும் அமைந்தது.

ஆயிரம் மரக்கன்றுகள்:

“என் அண்ணனின் நினைவாக உள்ளி பஞ்சாயத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டேன். அவற்றை அக்கறையுடன் பராமரித்தேன். அப்போது இருந்த பிடிஓ ரமேஷ் என்னைப் பாராட்டினார்.

‘உதவி ஏதும் வேண்டுமா’ என்று அவர் கேட்டதும், எங்க பகுதியில் ஒரு குறுங்காடு இருந்தது. காணாமல்போன அதை மீட்டெடுக்கவேண்டும் என்று சொன்னேன்” என்கிறார்.

முதலில் அவரிடம் 410 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆறு மாதங்களுக்குப் பிறகு உள்ளி பஞ்சாயத்துக்கு வருகைதந்த ஊரக வளர்ச்சித்துறை உயரதிகாரி மாலதி மரங்களைப் பார்வையிட்டார்.

அவரிடமும் பாலாற்றங்கரையில் செழித்திருந்த குறுங்காட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரினார். அடுத்து அவரை அழைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டினார்.

மாவட்ட ஆட்சியரின் உதவி:

என் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, “அந்தத் தம்பியை யாரும் தொந்தரவு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுங்கள்” என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் உதவியுடன் 25 ஏக்கர் பரப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. அங்கு முதலில் ஆயிரம் செடிகளை வைத்தேன்” என்கிறார் ஸ்ரீகாந்த்.

விருது பெற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

“பசுமையை மீட்டெடுக்கும் பணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டதற்காக இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளார்கள். இந்த விருதை எதிர்பார்த்து எந்தப் பணிகளையும் நான் செய்யவில்லை.

7 ஆயிரம் மரங்கள்:

எப்படியாவது இந்த மரங்களை வளர்த்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டேன். எனக்குக் கிடைத்த விருது என்பதைவிட, இங்கு வளரும் 7 ஆயிரம் மரங்களைக் காப்பாற்றும் என நம்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் ஸ்ரீகாந்த்.

எஸ். சாந்தி

You might also like