நுனக்குழி – பசில் ஜோசப் ரசிகர்களுக்கான விருந்து!

மலையாளத் திரையுலகில் ‘த்ரில்லர் பட ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்லுமளவுக்கு, அதில் பல கிளைகளைக் காட்டும் திரைப்படங்களை தந்து வருபவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். ‘த்ருஷ்யம்’, ‘மெமரீஸ்’, ‘நெரு’, ‘கூமன்’ போன்ற படங்கள் அதற்கான உதாரணம். தமிழிலும் ‘பாபநாசம்’, ‘தம்பி’ படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

திலீப்பை வைத்து ‘மை பாஸ்’ எனும் முழுமையான நகைச்சுவை படத்தை இயக்கியவர் இவர். அதன்பிறகு, அப்படிப்பட்ட ஒரு படத்தைத் தரவில்லை என்பது ரசிகர்களின் குறையாக இருந்தது. அதனை ஈடு செய்யும் என்ற நம்பிக்கையைத் தந்தது ‘நுனக்குழி’ படம் குறித்த விளம்பரங்கள். தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படம் எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது?

துரத்தும் பொய்கள்!

பூழிக்குன்னல் நிறுவனக் குழுமத் தலைவரின் மகன் அபி ஜக்காரியா (பசில் ஜோசப்). தந்தையின் மறைவை அடுத்து அவர் அப்பதவிக்கு வருகிறார். ஆனால், தந்தை நடத்தி வந்த நிறுவனங்களைக் கவனிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், மனைவி ரிமியை (நிகிலா விமல்) சுற்றியே அவரது கவனம் இருக்கிறது.

ரிமி உடன் தான் இருக்கும் அந்தரங்கத் தருணங்களைப் பதிவு செய்து, ஒரு லேப்டாப்பில் வைத்திருக்கிறார் அபி. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் அந்த லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்படுகிறது. அதிலிருக்கும் வீடியோ வெளியுலகுக்குத் தெரிய வந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று புலம்புகிறார் ரிமி.

மனைவியை சாந்தப்படுத்தவும், தனது சமூக அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், அந்த லேப்டாப்பை எப்படியாவது எடுத்துக்கொண்டு வருவது என்று வீட்டை விட்டுக் கிளம்புகிறார் அபி.

வருமான வரித்துறை அதிகாரி பாமகிருஷ்ணன் (சித்திக்) வசம் அந்த லேப்டாப் இருக்கிறது. அவரது உறவினர் நவீன் (அல்தாப் சலீம்) சினிமா இயக்கும் கனவில் இருக்கிறார். அவரும் அதேபோன்றதொரு லேப்டாப் வைத்திருக்கிறார்.

அவசரத்தில் அபியின் வீட்டிலிருந்த லேப்டாப் உடன் நவீனும் பாமகிருஷ்ணனும் சினிமா நடிகர் சுந்தர்நாத்தைச் (மனோஜ் கே ஜெயன்) சந்திக்கச் செல்கின்றனர்.

சுந்தர்நாத், பாமகிருஷ்ணன், பைனான்சியர் சாகரன் (பினு பாப்பு) மூவருக்கும் கதை சொல்லத் தொடங்குகிறார் நவீன்.

இன்னொரு புறம், குடும்ப நீதிமன்றத்தில் தனக்கெதிராகச் சாட்சி சொல்லி விவாகரத்துக்குக் காரணமான பல் மருத்துவர் ஜெயதேவனை அடித்து துவைக்கச் செல்கிறார் ராஷ்மிதா (கிரேஸி ஆண்டனி). அவரது கணவர் ரஞ்சித்தின் (அஜு வர்கீஸ்) நண்பர் தான் ஜெயதேவன்.

அந்த நேரத்தில், கிளினிக்கில் சுந்தர்நாத்தின் மனைவி மாயா (சுவாசிகா) உடன் ரகசிய சந்திப்பு நடத்துகிறார் ஜெயதேவன். ராஷ்மிதா வந்ததும், அவரை ஒரு அறையில் பூட்டி வைக்கிறார்.

கொலைவெறியோடு அங்கு வரும் ராஷ்மிதா ஜெயதேவனைத் தாக்க, அவர் கீழே விழுந்து சரிகிறார். அவரது பின்தலையில் இருந்து ரத்தம் வர, பயத்தில் வீட்டுக்குத் திரும்புகிறார்.

பாமகிருஷ்ணன் வசிக்கும் குடியிருப்பில் வேறொரு பிளாட்டில் இருக்கிறார் ராஷ்மிதா. நள்ளிரவில் அங்கு செல்லும் அபி ஜக்காரியாவை ‘திருடன்’ என்று நினைத்து சிலர் துரத்துகின்றனர். அப்போது, திறந்து கிடக்கும் ராஷ்மிதா வீட்டுக்குள் அவர் நுழைகிறார்.

ஜெயதேவனைக் கொலை செய்துவிட்ட குற்றவுணர்ச்சியில், மதுவில் விஷம் கலந்து வைத்திருக்கிறார் ராஷ்மிதா. அதனை எடுத்துக் குடிக்கிறார் அபி ஜக்காரியா.

வீட்டுக்குள் நுழைந்ததுமே ரஞ்சித்துக்கு போன் செய்து, தான் ஜெயதேவனைக் கொலை செய்துவிட்டதாகவும், போலீசுக்கு விஷயம் தெரிவதற்குள் விஷம் குடித்து தற்கொலை செய்யப் போவதாகவும் சொல்கிறார். அந்த விஷம் கலந்த மதுவைக் குடித்தது அறிந்ததும், உயிர் பயத்தில் ராஷ்மிதா முன்னே வந்து நிற்கிறார் அபி ஜக்காரியா.

அதன்பின் என்னவானது? இந்தக் கதையில் போலீசாரின் பங்கு எந்தளவுக்கு இருந்தது என்று சொல்கிறது இதன் இரண்டாம் பாதி.

இதில் வரும் எல்லா பாத்திரங்களுமே தவறு செய்தவர்கள்; அதனை மறைக்கப் பொய்களைச் சொன்னவர்கள்; அதேநேரத்தில், தாங்கள் செய்தது வெளியுலகுக்குத் தெரியக்கூடாது என்று நினைத்து சில முட்டாள்தனங்களில் சிக்கியவர்கள். அதனால், திரையில் கதை சீரியசாக சென்றாலும், அவர்களது செய்கைகள் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகின்றன.

கிச்சுகிச்சு மூட்டும் ஜீத்து ஜோசப்!

இன்றைய தேதியில் மலையாளத் திரையுலகில் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் சேர்ந்த கலவையாகத் திரையில் தோன்றி வருபவர் பசில் ஜோசப்.

‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’, ‘குருவாயூர் அம்பலநடையில்’ போன்ற படங்களில் அப்பாவித்தனமான பாத்திரங்களை எப்படி ‘அல்வா’ சாப்பிடுவது போன்று திரையில் வெளிப்படுத்தியிருந்தாரோ, அது போன்றதொரு அனுபவத்தினை இதிலும் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார். அது சிரிப்பு விருந்தாகத் திரையில் வெளிப்பட்டிருக்கிறது.

ராஷ்மிதாவாக வரும் கிரேஸி ஆண்டனியின் நடிப்பு நமக்கு ஊர்வசியை நினைவூட்டுகிறது. திரைக்கதையில் டென்ஷன் உச்சத்தில் அவர் பொய்களை அள்ளிவிடும் காட்சி, நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

இவர்களுக்கு அடுத்தபடியாக இன்ஸ்பெக்டராக வரும் பைஜு சந்தோஷ் பேசும் வசனங்கள், ‘காமெடி ஒன்லைனர்களாக’ இருக்கின்றன. பசில் ஜோசப்பை குற்றவாளியாக்கும் நோக்கில் விசாரிப்பவர், அவரிடம் பணம் பேரம் பேசிய பிறகு விசாரணை மேற்கொள்ளும் விதம் நம் வயிறை நோக வைக்கிறது.

இவர்கள் தவிர்த்து மனோஜ் கே ஜெயன், பினு பாப்பு, சித்திக், அல்தாப் சலீம், சைஜு குரூப், சுவாசிகா, அஜு வர்கீஸ், அஜீஸ் நெடுமங்காடு உட்பட ஒரு டஜன் கலைஞர்கள் இதில் வந்து போயிருக்கின்றனர்.

இது போக லேனா, நிகிலா விமலும் இந்தப் படத்தில் உண்டு.

ஒரு க்ரைம் படத்தில் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றால், கதைக்கும் காட்சிக்குமான பிளவைச் சரி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது விஷ்ணு ஷ்யாமின் பின்னணி இசை.

ஒளிப்பதிவாளர் சதீஷ் குரூப், படத்தொகுப்பாளர் விநாயக் வி.எஸ்., தயாரிப்பு வடிவமைப்பாளர் பிரசாந்த் மாதவ், ஒலி இயக்குனர் சினு ஜோசப், ஆடை வடிவமைப்பாளர் லிண்டா ஜீத்து உட்பட இதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பினை இயக்குனர் ஜீத்து ஜோசப் ஒருங்கிணைத்திருக்கும் விதம் அபாரமாகத் திரையில் வெளிப்பட்டுள்ளது.

‘நுனக்குழி’ என்றால் கன்னக்குழி என்று அர்த்தமாம். டைட்டிலில் தொடங்கும் ஜீத்து ஜோசப்பின் குசும்பு இறுதி வரை நீள்வது இப்படத்தின் பளஸ்.

அதேநேரத்தில், ‘க்ரைம் கதை பின்னணியில யாராவது காமெடி படம் எடுப்பாங்களா’ என்று ‘டார்க் ஹ்யூமருக்கு’ எதிரான ரசனையைக் கொண்டவர்களுக்கு இப்படம் பிடிக்காது.

இது போன்ற கதைகளைக் காட்சியாக்கம் செய்வது, ‘கரணம் தப்பினால் மரணம்’ என்றிருக்கும் சாகச விளையாட்டுகளுக்கு ஒப்பானது. அந்த அபாயத்தைச் சர்வசாதாரணமாகக் கடந்து நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.

பத்துக்கும் மேற்பட்ட பாத்திரங்கள்; அவற்றைச் சுற்றி நிகழும் சம்பவங்கள்; அவற்றுக்கு இடையே இருக்கும் தொடர்பு என்று நீள்கிறது முன்பாதி. அதனைக் காணும்போது ‘என்ன சொல்ல வர்றாரு டைரக்டரு’ என்ற எண்ணம் எழலாம்.

பசில் ஜோசப், கிரேஸி ஆண்டனி பாத்திரங்களின் சந்திப்புக்குப் பிறகு திரைக்கதை வேகம் எடுக்கிறது. பின்பாதியில் பைஜு சந்தோஷ், அஜீஸ் நெடுமங்காடு அவர்களைத் துரத்தும் காட்சிகள் ‘ஜெட்’ விமானத்தில் ஏறிய அனுபவத்தைத் தருகின்றன.

கதாபாத்திரங்களை க்ளோஸ்அப்பிலும், மிட்ஷாட்டிலும் காட்டினாலும், காட்சிகள் நிகழும் களங்களை நமக்குத் திரையில் தெளிவாகக் காட்டியிருக்கிறார் ஜீத்து ஜோசப். அந்த காட்சியாக்கத்தின் வழியே திரையோடு ஒன்றச் செய்கிறார். ஒரு படத்தைக் காண, இதை விட வேறென்ன வேண்டும்? அந்த வகையில், நமக்கு நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது ‘நுனக்குழி’.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like