டிமான்டி காலனி 2 – முதல் பாகத்தோடு பொருந்தி நிற்கிறதா?!

’காஞ்சனா’, ‘அரண்மனை’ சீரிஸ் படங்கள் ‘ஹாரர்’ அனுபவங்களோடு சிரிப்பையும் மூட்டிய காலத்தில், மிரட்சியடைய வைக்கும் பேய் படமாக அமைந்தது, அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான ‘டிமான்டி காலனி’. அத்திரைக்கதையின் பெரும்பகுதி மிகச்சிறிய வீட்டினுள் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டிருந்தது, அப்படத்தின் யுஎஸ்பி ஆக அமைந்தது.

பிறகு ‘இமைக்கா நொடிகள்’, ‘கோப்ரா’ என்று பிரமாண்டத் தயாரிப்புகளை இயக்கினார் அஜய் ஞானமுத்து. அப்படங்கள் முதல் படம் போன்று அமையவில்லை. இந்த நிலையில், தற்போது அவர் ‘டிமான்டி காலனி 2’ தந்திருக்கிறார்.

இந்தப் படம் தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?

எப்படிப் பிழைத்தார்?

முதல் பாகமான ‘டிமான்டி காலனி’யில் நாயகனாக வரும் சீனிவாசன் (அருள்நிதி) இறப்பதாக முடிவு இருந்தது. அப்படியிருக்க, அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியும்? இந்தக் கேள்விதான், இப்படத்தை ரசிகர்கள் காணச் செய்வதற்கான தூண்டுகோல். அதனைப் புரிந்துகொண்டு, சரியானதொரு இணைப்பை முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குத் தந்திருக்கிறார் இயக்குனர்.

சீனிவாசனின் சகோதரர் ரகுநந்தன் (அருள்நிதி) ஹைதராபாதில் வசிக்கிறார். சிறு வயதிலேயே தாயுடன் சீனிவாசன் சென்னைக்கு இடம்பெயர்ந்துவிட, தந்தையுடன் வாழ்கிறார் ரகுநந்தன்.

அவர்களது தந்தைக்கு இரண்டு மனைவிகள். சீனிவாசனும் ரகுநந்தனும் முதலாம் மனைவிக்குப் பிறந்தவர்கள். இரண்டாவது மனைவியும் (பிரியதர்ஷினி ராஜ்குமார்) அவரது மகள் ஐஸ்வர்யாவும் (அர்ச்சனா ரவிச்சந்திரன்) தனியே இருக்கின்றனர்.

தந்தை இறந்த அறுபதாம் நாள், அவரது எழுதிய உயிலை அவர்கள் முன்னிலையில் வாசிக்கிறார் சித்தப்பா தயாளன் (முத்துகுமார்). அந்த உயிலில் ரகுநந்தனுக்கு 20 சதவிகிதமும், ஐஸ்வர்யாவுக்கு 5 சதவிகிதமும், சீனிவாசனுக்கு 75 சதவிகிதமும் சொத்துகள் அளிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதனைக் கேட்டு கோபமுறும் ஐஸ்வர்யாவும் ரகுநந்தனும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்கின்றனர்.

அன்றிரவு, குடி போதையில் தந்தையை நினைத்துப் புலமும் ரகுநந்தனைத் தேற்றுகிறார் சித்தப்பா தயாளன். அப்போது, தவறி மாடியில் இருந்து கீழே விழுகிறார் ரகுநந்தன். ஆனால், கீழே விரிக்கப்பட்டிருந்த வலையில் விழுந்ததால் அவரது உயிர் பிழைக்கிறது. சரியாக, அதேநேரத்தில் தான் சென்னையில் சீனிவாசன் தனது அறையில் இருந்து கீழே குதிக்கிறார். அருகே கட்டப்படும் ஒரு கட்டடத்தின் கான்கிரீட் கம்பி அவரது உடலைக் குத்திக் கிழிக்கிறது.

ரகுநந்தனும் சீனிவாசனும் ஒன்றாக ஒரே கருவில் இருந்து உருவான இரட்டையர்கள் என்பதால், இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழப்பார்கள் என்பதுவே நியதி என்கின்றனர் மதத் துறவிகள் சிலர்.

சீனிவாசன் உயிர் பிழைத்தாலும் செயலற்றுக் கிடக்கிறார். அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அதனை அளிக்க வேண்டாம் என்று கோரி ரகுநந்தன் தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சென்னை மருத்துவமனையில் இருக்கும் சீனிவாசன் உடலைப் பெற ரகுநந்தனும் தயாளனும் ஆட்களை அழைத்துக்கொண்டு வருகின்றனர். ஆனால், அதற்குள் சீனிவாசனை வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறார் அம்மருத்துவமனையில் தலைவரான ரிச்சர்ட் (அருண் பாண்டியன்).

அவருக்கும் சீனிவாசனுக்கும் என்ன சம்பந்தம்?

ரிச்சர்ட்டின் ஒரே மகனான சாமுவேல் (சர்ஜனோ காலித்) புற்றுநோயில் இருந்து மீண்டவர். அந்நோய் இருக்கும்போதே, அவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் டெபி (பிரியா பவானி சங்கர்). துரதிர்ஷ்டவசமாக, புற்றுநோயில் இருந்து விடுபட்ட சாமுவேல் தனது பிளாட்டில் தூக்கிலிட்டு இறந்து போகிறார். அவரது நண்பர்கள் சிலரும் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.

சீனிவாசனும் அவரது நண்பர்களும் ‘டிமாண்டி காலனி’ பேயிடம் சிக்குவதற்குச் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறுகிறது அந்தச் சம்பவம்.

புத்த மதத் துறவியான தாவோஷி உதவியினால், கணவரின் ஆவியுடன் பேச முற்படுகிறார் டெபி. ஆனால், அப்போது சாமுவேலின் ஆன்மாவுக்குப் பதிலாக சீனிவாசன் மற்றும் ரகுநந்தனின் ஆன்மாக்களைக் காண்கிறார்.

கணவர் ஏதோவொரு இடத்தில், யாரோ ஒருவரது பிடியில் இருப்பதை அறியும் டெபி, அவரை விடுவிக்கச் சீனிவாசன் உயிரைப் பிழைக்க வைக்க வேண்டுமென்று உணர்கிறார். அதேபோல, உயிருக்குப் போராடும் சீனிவாசனை மருத்துவமனையில் சேர்க்கிறார்.

இந்த இரு வேறு கதைகளும், நிகழ்காலத்தில் சீனிவாசனை உயிர் பிழைக்க வைப்பதற்கான முயற்சியில் டெபியும் ரிச்சர்ட்டும் ஈடுபடுவதோடு இணைகின்றன.

அவர்களது முயற்சியில், மிகுந்த தயக்கத்துடன் தயாளனும் ரகுநந்தனும் இணைகின்றனர். சீனிவாசன் உயிர் பிழைத்த நாளில் இருந்து சரியாக ஆறு ஆண்டுகள் நிறைவுற்ற தினம் அது.

’டிமான்டி காலனி’க்குள் எவரும் நுழையாமல் தடுத்துவிட்டால் அந்த பேயின் கொட்டத்தை அடக்கிவிடலாம் என்று திட்டமிடுகிறார் தாவோஷி. அதற்கு ஏதுவாக, போலீசாரின் உதவியுடன் அந்த இடத்தைச் சுற்றிக் காவல் போடப்படுகிறது.

அங்கு ரகுநந்தன், தயாளன், டெபி, தாவோஷி நால்வரும் செல்கின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ’டிமான்டி காலனி’க்குள் சில பெண்கள் சிக்கியிருக்கும் சத்தம் கேட்கிறது. அவர்களது அலறல் வானைப் பிளக்கிறது. அவர்களைக் காப்பாற்ற போலீசாரோடு ரகுநந்தனும் தயாளனும் ஓடுகின்றனர்.

அங்கு சில இளம்பெண்கள் மயக்கமுற்ற நிலையில் கிடக்கின்றனர். ஒரு பெண் (மீனாட்சி கோவிந்தராஜன்) மட்டும் சுயநினைவோடு இருக்கிறார்.

மயக்கமுற்றவர்களையும் அப்பெண்ணையும் ஒரு வாகனத்தில் தயாளனோடு அனுப்பிவிட்டு, மீதமுள்ள ஒரு வாகனத்தில் டெபி, ரகுநந்தன், தாவோஷி மூவரும் ஏறுகின்றனர்.

டெபி தனது உணவகத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து கொண்டு, ’டிமான்டி காலனி’ பேயைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று திட்டமிடுகின்றனர். ஆனால், அவர்களது எண்ணத்திற்கு மாறாக அந்தப் பேயே அவர்களைத் தேடி வருகிறது.

அந்தப் பேய்க்குச் சொந்தமான சங்கிலியை வைத்திருப்பவர்களை மட்டுமே அது ஒருவழியாக்கும். அந்த வீட்டுக்குள் நுழைந்தவர் ரகு மட்டுமே. அவர் அதனை எடுக்கவில்லை. ஆனால், அந்தச் சங்கிலி அவரது கோட் பாக்கெட்டில் இருக்கிறது.

அது எப்படி அதனுள் வந்தது? அதனைச் சிந்திப்பதற்குள் அந்த பேய் அவர்களுக்கு நேரவிருக்கும் ஆபத்தை முன்னுணர்த்துகிறது. அந்த உணவகத்தில் இருந்து வெளியேற முடியாது என்ற உண்மையை உணர்த்துகிறது.

அப்படியானால், அந்த மூவரும் சாகத்தான் வேண்டுமா? அந்தக் கேள்விக்குப் பரபரப்பான திருப்பங்களின் வழியே பதிலளிக்கிறது ’டிமான்டி காலனி 2’ திரைக்கதை.

இந்தப் படத்தில், முதல் பாகத்தில் மரணமுற்றதாகக் காட்டப்பட்ட சீனிவாசன் எப்படி உயிர் பிழைத்திருப்பார் என்பதுவே படம் பார்க்க வந்த ரசிகர்களின் கேள்வியாக இருக்கும். அதற்குப் பதிலளித்த விதமும், முதல் பாகத்தோடு இரண்டாம் பாகத்தின் கதையை இணைத்த விதமும், இயக்குனர் அஜய் ஞானமுத்துவைக் கொண்டாடத் தூண்டுகிறது.

செறிவான திரைக்கதை!

அருள்நிதி, பிரியா பவானிசங்கர், முத்துகுமார், ஆன்ட்டி ஜாஸ்கெலனைன், ஷெரிங் டோர்ஜி ஆகியோர் இதில் முதன்மை பாத்திரங்களாக வருகின்றனர். தனித்தனியாகப் பாராட்டத் தேவையில்லாத அளவுக்கு, அவர்களது நடிப்பு நம்மைக் கதையோடு ஒன்ற வைக்கிறது.

அருண் பாண்டியன் நிறுத்தி நிதானமாக வசனம் பேசுமிடங்களில் ‘செயற்கைத்தனம்’ எட்டிப் பார்க்கிறது.

பிரியதர்ஷினி ராஜ்குமாரோடு அர்ச்சனா ரவிச்சந்திரன் வரும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. நல்ல வேளையாக நகைச்சுவைக்கென்று இதில் எந்தப் பாத்திரமும் சேர்க்கப்படவில்லை.

இவர்கள் தவிர்த்து, முதல் பாகத்தில் வந்த எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் ஆகியோரும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

‘ஹாரர் படம்’ என்பது வெறுமனே பயமுறுத்தினால் மட்டும் போதாது. அந்த வகைமை படங்களுக்கு என்றிருக்கும் லாஜிக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். முதல் பாகத்தோடு பொருந்தி நிற்க வேண்டும். முக்கியமாக, உள்ளடக்கத்தில் எவ்விதச் சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது. அனைத்தையும் சிரமேற்கொண்டு பின்பற்றியிருக்கிறது ’டிமான்டி காலனி 2’.

அதனை ரசிகர்கள் உணர்வதற்கு, திரைக்கதை செறிவானதாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான உழைப்பை இயக்குனர் அஜய் ஞானமுத்துவோடு இணைந்து, எழுத்தாக்கம் செய்த வெங்கி வேணுகோபால், ராஜவேல் தந்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன், இரண்டாம் பாகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாகத் தந்திருக்கிறார். விஎஃப்எக்ஸ், டிஐ பணிகளைக் கருத்தில் கொண்டு அவரது பணி அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் குமரேஷ், திரையில் விரியும் கதையைப் புரிந்துகொள்வதில் ரசிகர்கள் சிரமப்படக் கூடாது என்பதில் கவனம் காட்டியிருக்கிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் ரவி பாண்டியன், முந்தைய பாகம் போன்றில்லாமல் இதில் பல்வேறு வண்ணங்கள் திரையில் தெரிய வழி வகுத்திருக்கிறார். ஆனால், அவ்வாறு செய்திருப்பது கதையில் இருந்து நம்மைக் கொஞ்சம் கூட விலக்கவில்லை.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை இந்த படத்தின் மாபெரும் பலம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பரபரவென்று காட்சிகள் நகரத் துணை நிற்கிறது அவரது பங்களிப்பு.

அதேபோன்று சண்டை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு என்று ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சமும் இப்படத்தின் உள்ளடக்கத்தை மிகப்பெரியதாக ஆக்கியிருக்கின்றன.

இயக்குனர் அஜய் ஞானமுத்து முதல் பாகத்தைக் குறைந்த பட்ஜெட்டில் தந்திருந்தார். அது தந்த மிரட்சியை இப்பாகம் தரவில்லை என்பதே உண்மை. ஆனால், அந்த உண்மை நம்மைச் சட்டென்று பற்றாத அளவுக்குச் சிறப்பானதொரு கதை சொல்லலை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரமாண்டத்தை இக்கதையில் புகுத்தச் சரியான திட்டமிடல் வேண்டும். அதனைக் கனகச்சிதமாகச் செயல்படுத்தியிருக்கிறார். அதற்குத் தக்க பலன் திரையில் கிடைத்திருக்கிறது. அதனால், இன்னும் சில நாட்கள் இப்படம் ஓடும் தியேட்டர்களில் மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்திற்கு மூன்றாம், நான்காம் பாகங்கள் உண்டு என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கு ஏற்றவாறு இப்படத்தின் கிளைமேக்ஸ் உள்ளது. நிச்சயமாக, ஹாரர் பட விரும்பிகளுக்கு இப்படம் ஒரு பொக்கிஷமாக தெரியும். சாதாரண ரசிகர்களுக்கும் கூட, ‘டிமான்டி காலனி 2’ நல்லதொரு அனுபவத்தையே தரும்.
‘பேய்ப்படமா’ என்று அலறுபவர்களைத் தவிர மற்றனைவரும் இதனைக் கண்டு ரசிக்கலாம்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like