மீண்டும் ‘அண்ணா’ கேண்டீன்கள்!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தைப் போல், ஆந்திராவிலும் அண்ணா கேண்டீன்களை அமைக்க வேண்டுமென விரும்பிய சந்திரபாபு நாயுடு, கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் 203 இடங்களில் அண்ணா கேண்டீன்களைத் தொடங்கினார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், சில மாதங்களிலேயே தேர்தல் நடந்ததையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார். அவர் முதல்வரானதும் அண்ணா கேண்டீன்களை மூட உத்தரவிட்டார். அதையும் மீறி, யாராவது நடத்தினால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதனால், ஆந்திராவில் அண்ணா கேண்டீன்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் தான் ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களுக்குள் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் தொடங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.

அதன்படி, ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், குடிவாடாவில் அண்ணா கேண்டீனை முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் திறந்து வைத்தார்.

பின்னர், சந்திரபாபு நாயுடுவும், அவரது மனைவியும் ஏழைகளுக்கு உணவுப் பரிமாறினர். மேலும், அவர்களுடன் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் என அனைவரும் உணவருந்தினர்.

அப்போது, ஆந்திர மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 100 இடங்களில் அண்ணா கேண்டீன்கள் செயல்படும் என்றும், படிப்படியாக செப்டம்பர் இறுதிக்குள் ஆந்திராவில் 203 அண்ணா கேண்டீன்கள் செயல்படும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இதற்கு தொழிலதிபர்கள், சினிமா பிரமுகர்கள், தனியார் அறக்கட்டளையினர் உதவ முன்வர வேண்டுமெனவும் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். அண்ணா கேண்டீன்களில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஆகியவை ஒவ்வொரு வேளையும் ரூ.5-க்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like