ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம்
யானைகள் எப்போதும் பிரமிப்பு தருபவை. குழந்தைப் பருவத்தில் அதன் உருவம் பார்த்து ஏற்பட்ட ஆச்சர்யம், ஆண்டுகள் வளர வளர அதன் வாழ்வு சார்ந்ததாக மாறியிருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் யானைகள் சார்ந்து ஏதோ ஒரு ஞாபகமிருக்கும். மிகப்பெரிய சாகசமாக இல்லாவிட்டாலும், அது நம் வாழ்வில் மறக்க முடியாத தடமாகப் பதிந்திருக்கும். குறைந்தபட்சம் யானையைப் பார்த்து பயப்பட்ட அனுபவமாவது இருக்கும்.
ஆனாலும், யானைகளைப் பற்றி புதிய விஷயங்கள் எதையாவது தெரிந்துகொள்ளும்போது மனதில் கண்ணை மூடிக்கொண்டு யானையைத் தடவிப் பார்த்த கதைதான் நினைவிலெழும்.
காரணம், கண்ணை மூடிக்கொண்டு யானையின் உருவத்தை விவரிப்பது போலவே எல்லா தகவல்களும் தெரியுமென்ற மமதையில் மனதுக்குள் யானையைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் பெருமைக்குரிய பிம்பம் வரைந்திருக்கிறோம்.
மாபெரும் குழந்தைகள்!
கொஞ்சம் பிரமாண்டமாக மணிச்சத்தம் கேட்டாலே, தெருவில் யானை வந்துவிட்டதென்று குழந்தைகள் குதூகலிக்கத் தொடங்கிவிடுவார்கள். ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ பழமொழி இப்போதுவரை அதனால் உயிர்ப்புடனும் இருக்கிறது.
பார்த்தவுடனே பயத்தை தரும் உயிரினங்களில் யானைகளும் ஒன்று. ஆனால், யானைகளின் நடையிலுள்ள நளினமும் தலையை அசைத்துப் பார்க்கும் பாங்கும், பாகன்கள் சொன்னவுடன் தலையாட்டும் குணமும், அதனை ஒரு வளர்ந்த குழந்தையாக்கும்.
வாழைப் பழமும் தென்னமட்டையும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் கொடுத்து, ‘ஆசி வாங்குவோமா’ என்று சொல்லியவாறே குழந்தைகளைத் தூக்கி நீட்டியவுடன் துதிக்கையால் கொஞ்சுவதுதான் யானைகளின் வழக்கம்.
அப்போது, அது ஒரு காட்டு விலங்கு என்பதே மறந்து போய்விடும். அதன் கண்ணில் இருந்து வடியும் நீரையும் அதில் தென்படும் ஏக்கத்தையும் பிரித்துப் பார்த்தால், கானுலா குறித்த பல கேள்விகள் தென்படலாம்.
அவற்றின் கால்களை உற்றுப்பார்த்து சிறிதாய் ஒரு புண் தென்பட்டாலும், அன்றைய தினம் உறக்கம் வராது.
காரணம், முள் குத்திய வலி பலநாட்களாய் தொடர்ந்தால் யானை சாணத்தில் மிதித்தால் சரியாகிவிடுமென்பது ஒரு நம்பிக்கை. அதிலிருக்கும் விதைகள் ஒரு பெருங்காட்டையே உருவாக்கும் வல்லமை படைத்தவை.
மற்றவர்களின் வலியைத் தன் கழிவுகளால் போக்கும் ஒரு உயிரினம் வாதையில் இருப்பதாக உணர்வதை எப்படி விளக்குவது?
நாம் பார்த்த யானைகள்!
ஒருகாலத்தில் கோயில்களில் பசுக்களும் காளைகளும் ஆடுகளும் கோழி சேவல்களும் கூட வளர்க்கப்பட்டன. ‘சாமிக்கு நேர்ந்துட்டேன்’ என்று சொல்லி கோயில்களில் விலங்குகளை விட்டுவிடும் வழக்கம் சங்கரன்கோவிலில் இன்றும் கூட உண்டு. கொஞ்சம் பெரிய கோயில்களில் யானைகளை வழங்குவார்கள்.
இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் தொடர்ந்த வழக்கம் இன்று வெகு அரிதாகிப் போய்விட்டது. அதனால், கோயில் யானைகளின் வயதும் அதிகமாகிவிட்டது.
சர்க்கஸில் போர்வையையே ஆடையாக அணிந்துவந்த யானைகளைப் பார்த்திருக்கிறோம். ஜோக்கர்களின் இன்னொரு அவதாரம் போல, அவற்றின் செல்லச் சேட்டைகள் குழந்தைமையை உயிர்ப்பித்திருக்கின்றன.
காட்டுக்குள் ‘சாகச சவாரி’ சென்று காட்டு யானைகள் ஊர்வலம் போவதை பார்க்க வசதியில்லாதவர்கள், அவ்வனுபவத்தின் மினியேச்சர் போல மிருகக்காட்சி சாலையில் யானைகளைப் பின்புறமாக பார்த்த காலமும் உண்டு. இவையனைத்துமே கொண்டாட்டத்தை தந்த அனுபவங்கள்.
இன்று, யானைகளைப் பார்க்கும் குழந்தைகளின் மனக்கண்ணில் ‘வைல்டு லைஃப்’ தொலைக்காட்சிகளின் காட்சிகளே விரிகின்றன.
பிளிறிக்கொண்டு எதிரே வரும் மிருகத்தைத் தாக்கும் ஆக்ரோஷத்தை எதிர்பார்த்தால், தும்பிக்கையை தூக்கவே யோசிக்கும் ஒரு உயிரினம் தான் அவர்கள் எதிரே நிற்கும்.
கொஞ்சம் கோளாறாக, மதம் பிடித்த யானை ஊரையே உலுக்கிய வீடியோக்களையும் சில குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தவிர, கல்யாண மண்டபங்களில் காற்றடைத்த கருப்பு நிற பலூனில் யானையை தரிசித்தவர்களும் கூட இருப்பார்கள்.
கொஞ்ச காலத்திற்கு முன்பு யானையிடம் மகிழ்ச்சியைப் பெற்றதற்கு மாறாக, இன்று ‘பேய்ப் படம்’ பார்த்த அனுபவத்தை எதிர்நோக்குவது பெருகியிருக்கிறது.
என்றும் பிரமிப்பு!
இந்தியாவில் தற்போது 30,000 யானைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில், கிட்டத்தட்ட 10% தமிழ்நாட்டில் இருக்கின்றன. கேரளம், கர்நாடகத்திலுள்ள யானைகளின் எண்ணிக்கை இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.
இதிலிருந்தே மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் யானைகளின் இருப்பு அதிகமென்பதை உணரலாம்.
யானை கட்டிப் போரடிக்கும் வழக்கம் அரிதாகிப் போன காலகட்டத்திலும் கூட, சுமார் 1,700 பேர் இன்றும் யானைகளை பராமரித்து வருகின்றனர்.
சர்க்கஸ், கோயில்களில் உள்ள யானைகள் கூட வனவிலங்கு பூங்காக்களிலும் காடுகளிலும் கொண்டுவிடப் படுகின்றன. ஆனாலும், யானைகளின் எண்ணிக்கை அருகி வருகிறது.
காடுகளை அழித்து விளைநிலங்களையும் தங்குமிடங்களையும் அதிகரித்தது, அவற்றின் பாதுகாப்புக்காக மின் வேலி அமைத்தது, அதீதமாக மரம் வெட்டியதால் நேரும் பசுமையிழப்பு, மழை குறைவு மற்றும் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் பெரு நிறுவனங்களின் சுரண்டல் என்று பல காரணங்கள் இன்று யானைகளைச் சிதறியோட வைத்திருக்கின்றன.
அதன் காரணமாக, ‘மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு’, ’ஊருக்குள் புகுந்த யானை’, ‘பயிர்களை நாசமாக்கிய யானைகளின் வெறி’ என்பது போன்ற செய்திகளை அடிக்கடி காண வேண்டியிருக்கிறது.
தங்கம் வாங்குவதே அடகு வைக்கத்தான் என்றாகிவிட்ட பொருளாதாரச் சூழலிலும், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுபவர்களின் அறிவை என்னவென்று வியப்பது? இவர்களை மீறி, யானைகளைக் காக்கும் அவசியமொன்று இருக்கிறது. அப்படிச் செய்தால், யானைகள் நம்மைக் காக்கும் என்பதே அது!
யானைகளின் தெருவுலா!
காட்டு யானைகள் வலசை போவதற்கு இடம் காட்ட, கைவசம் மிகப்பெரிய மலையோ அல்லது பெரும் வனப்பரப்போ இல்லை. இருக்கும் காடுகளின் அடர்த்தியைக் குறைக்காமலிருக்க முயற்சித்தால், கொஞ்சம் பெரிய கூண்டுக்குள் அடைத்த திருப்தியாவது கிடைக்கும்.
நீர்நிலைகளை வற்றச் செய்யாமலிருப்பதும், வனப்பகுதியையொட்டிய நிலப்பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுந்தால் எதிர்கொள்வதற்கான வழிகளைப் பயிற்றுவிப்பதும் மிகமிக அவசியம்.
மிக முக்கியமாக, அதீத வயதான யானைகளை கோயில் திருவிழா இடிபாடுகளிலும் வெடிச்சத்தங்களிலும் புரள வைப்பதைத் தவிர்க்கலாம்.
தெருவுலா தரும் எரிச்சல்களில் இருந்து அவற்றை விடுவிக்கலாம்.
மிகமிக முக்கியமாக, யானைகளை வேடிக்கைபொருளாகவோ, தெய்வங்களாகவோ பார்ப்பதைவிட, யானைகளை யானைகளாகப் பார்க்கும் மனப்பான்மையை நமக்கு நாமே வளர்த்துக்கொள்ளலாம்.
குறைந்தபட்சம் யானைகள் தெருவுலா வரும்போதாவது, ஒரு காட்டுப்பாதை போல நாம் இருக்கும் இடத்தை ஆக்க முயற்சிக்கலாம். வருவது யானை என்பதால், அதற்கான முயற்சிகளும் கூட ஊர் கூடி தேரிழுப்பது போன்றிருக்கும். அவ்வளவுதான்!
கண்களை மூடிக்கொண்டு யானையைத் தொட்டு பார்ப்பது போல, ‘உலக யானைகள் தினமான’ இன்று இன்னும் பல எண்ணங்கள் எழுகின்றன.
– உதய் பாடகலிங்கம்
#உலக_யானைகள்_தினம் #யானைகள் #Elephant #World_Elephant_Day #elephant #elephants #elephantlove #elephantlovers #elephantsofinstagram #elephantfamily #worldelephantday