சட்னி சாம்பார்- சிரிக்கச் சிரிக்க ஒரு வெப்சீரிஸ்!

தற்போது தமிழ்த் திரையுலகில் இருந்துவரும் நகைச்சுவைக் கலைஞர்கள் யார் என்ற கேள்வியைக் கேட்டவுடன், ‘யோகிபாபு’ என்ற பதிலே பெரும்பாலானவர்களிடம் இருந்து வெளிவரும்.

அந்தளவுக்குச் சமீபகாலமாக நகைச்சுவை நடிகராகத் தொடர்ந்து பல படங்களில் அவர் இடம்பெற்று வருகிறார். அவரது நகைச்சுவை வசனங்கள் கிண்டலாக இருக்கும் அளவுக்குச் சிரிப்பை வரவழைக்கவில்லை என்ற விமர்சனமும் தொடர்ந்து வருகிறது. 

அதேநேரத்தில் கோமாளி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இடம்பெற்றது போன்று குணசித்திர நடிப்பில் அவர் வெளுத்துக் கட்டலாம் என்று சொல்வோரும் உண்டு. அதையும் மீறி, அவரது வெற்றிக்கொடி தமிழ் திரையுலகில் தொடர்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட யோகிபாபு ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார் எனும்போது எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகும்?

அழகிய தீயே, மொழி, அபியும் நானும் என்று வித்தியாசமான திரைப்படங்களைத் தந்து நம்மைச் சிரிக்க வைத்த ராதாமோகன் அதனை இயக்குகிறார் என்று கேள்விப்படும்போது என்ன உணர்வோம்?

அந்தக் கேள்விகளுக்கு விடையாக அமைந்துள்ளது ‘சட்னி சாம்பார்’ தரும் காட்சியனுபவம்.

ஆறு எபிசோடுகளாக அமைந்துள்ள இந்த வெப்சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

யார் அந்த அமுதா?

‘அமுதா கபே’ என்ற பெயரில் ஒரு உணவகத்தை ஊட்டியில் நடத்தி வருகிறார் ரத்தினசாமி (நிழல்கள் ரவி).

ஒரு யூடியூப் சேனலுக்காக, அதன் அருமை பெருமைகளை அவர் மக்களிடம் விளக்குகிறார்.

அவரது உணவகத்தைப் படம்பிடித்த கையோடு, வீட்டுக்கு வருகிறது அந்த படப்பிடிப்புக் குழு. வீட்டிலும் ‘அமுதா இல்லம்’ என்ற பலகை தொங்குகிறது.

உணவு மேஜையில் அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் (ஏஞ்சலின்) தனது குடும்பத்தினரை அறிமுகப்படுத்துகிறார் ரத்தினசாமி.

மனைவி ஜெயலட்சுமி (மீரா கிருஷ்ணா), மகன் கார்த்திக் (சந்திரமௌலி), மகள் அமுதா (மைனா நந்தினி), மாப்பிள்ளை இளங்கோ (நிதின் சத்யா) என்று ஒவ்வொருவரையும் அவரிடத்தில் காட்டுகிறார்.

அப்போது, பேரன் அப்பு (ஆர்யன்) ஒரு வாளியை எடுத்துவந்து நடுவீட்டில் சிறுநீர் கழிக்கிறான். அவனை அமுதா அதட்ட, ‘குழந்தைய அது போக்குல இருக்க விடும்மா’ என்று கூறுகிறார் ரத்தினசாமி.

அடுத்த சில நிமிடங்களில், அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மருத்துவமனைப் பரிசோதனைகளின் முடிவில், அவருக்குக் கணையப் புற்றுநோய் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பது தெரிய வருகிறது.

வெவ்வேறு மருத்துவமனைகளை நாடினாலும், ’இனி ரத்தினசாமி சில நாட்களே உயிரோடு இருப்பார்’ என்ற தகவலே மருத்துவர்களின் பதிலாக உள்ளது.

படுத்த படுக்கையாக இருக்கும் ரத்தினசாமி, ஒருநாள் கார்த்திக்கை தனியே அழைத்துப் பேசுகிறார். அப்போது, ஜெயலட்சுமியுடன் திருமணமாவதற்கு முன்னர் தான் ஒரு பெண்ணோடு சென்னையில் வாழ்ந்ததாகக் கூறுகிறார். அதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைகிறார் கார்த்திக்.

அந்தப் பெண் இறந்துவிட்டதாகச் சொல்பவர், அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும், அவர் சென்னையில் இருப்பதாகவும் கூறுகிறார். ’அவரை எப்படியாவது கண்டுபிடித்து இங்கு அழைத்து வருவதோடு, குடும்பத்தில் ஒருவராகவும் அவரை ஏற்க வேண்டும்’ என்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் அமுதா. அது கார்த்திக்கை இன்னும் மிரள வைக்கிறது.

தனக்கும் சகோதரிக்கும் தந்தை என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று யோசிக்கும் கார்த்திக், எப்படியாவது அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.

மச்சான் இளங்கோ, டிரைவர் பீட்டர் (இளங்கோ குமரவேல்) உடன் சென்னைக்குப் புறப்படுகிறார். அங்கு பல கட்ட தேடுதலுக்குப் பிறகு, அமுதாவின் மகன் சச்சின் என்கிற விக்னேஷ் பாபுவை அவர்கள் சந்திக்கின்றனர். அவரும் தாய் அமுதா பெயரில் ஒரு தள்ளுவண்டி உணவகத்தை நடத்தி வருகிறார்.

எப்படி ஊட்டியிலுள்ள அமுதா கஃபேவில் சாம்பார் புகழ் வாய்ந்ததாகத் திகழ்கிறதோ, அதேபோல சச்சின் வைக்கும் சட்டினிக்காகவே பலர் வரிசையில் நிற்பதைக் காண்கிறார் கார்த்திக்.

சாம்பாரின் ருசிக்கு எப்படி ரத்தினசாமி ஒரு ரகசிய பார்முலா வைத்திருக்கிறாரோ, அப்படி சச்சினும் ஒரு பார்முலா வைத்திருக்கிறார்.

தோற்றத்தில் பெரியளவுக்கு ஒற்றுமை இல்லாவிட்டாலும், தந்தையின் குணாதிசயங்கள் சச்சினிடம் இருப்பதை உணர்கிறார் கார்த்திக். அவரை எப்படியாவது தந்தையிடம் அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவெடுக்கிறார். ஆனால் சச்சின் அதற்கு ஒப்புக்கொள்வதாக இல்லை.

அதனால், சச்சினை ஏமாற்றி ஊட்டிக்கு அழைத்துச் செல்ல மூவரும் முடிவெடுக்கின்றனர். அதனைச் செயல்படுத்துகின்றனர். அதனை அறிந்ததும் கொதித்தெழுகிறார் சச்சின். மெல்ல இயல்பு நிலைக்கு வருபவர், அவரை அழைத்துச் சென்று ரத்தினசாமியிடம் அறிமுகப்படுத்துகிறார் கார்த்திக்.

அப்போது, ‘இருந்து எல்லா காரியத்தையும் முடிச்சுட்டுப் போ’ என்கிறார் ரத்தினசாமி. அடுத்த நொடியே அவர் இறந்து போகிறார். அந்தச் சூழலில், தாயை ஏமாற்றிச் சென்ற தந்தையை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் சச்சின்.

‘அப்பாகிட்ட சத்தியம் பண்ணியிருக்க’ என்று சொல்லி, பதிமூன்று நாட்கள் அங்கு தங்க வேண்டுமென்று மன்றாடுகிறார் கார்த்திக். ஏதேதோ சாக்கு சொன்னாலும், ஒருகட்டத்தில் அங்கு தங்கச் சம்மதிக்கிறார் சச்சின்.

அந்த காலகட்டத்தில், ரத்தினசாமியின் இன்னொரு முகம் சச்சினுக்குத் தெரிய வருகிறது. பீட்டர், அவரது உறவினர் சோபி (வாணி போஜன்), கார்த்திக்கின் காதலி ஜென்சி (சம்யுக்தா விஸ்வநாதன்) உட்படப் பலரைச் சந்திக்கிறார்.

அதன்பிறகாவது தந்தை மீது சச்சின் கொண்டிருக்கும் அபிப்ராயம் மாறியதா? கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரை மனதாரா அவர் ஏற்றுக்கொண்டாரா என்று பதிலளிக்கிறது ‘சட்னி சாம்பார்’ வெப்சீரிஸின் மீதி.

முதல் ஷாட் பார்த்தவுடனேயே, நமக்குள் ‘யார் இந்த அமுதா’ என்ற கேள்வி தோன்றும். அதற்குப் பதிலளிக்கும்விதமாக முதல் எபிசோடு நகர்ந்தாலும், அடுத்துவரும் எபிசோடுகள் சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து, தொடர்ந்து நம்மை திரையில் இருந்து விழிகளை அகற்ற விடாமல் உள்ளிழுத்துக் கொள்கின்றன.

ஒரு வெப்சீரிஸ் என்றால் நிறைய கிளைக்கதைகள் இருக்கும். இதிலும் அப்படியே. ஆனால், அந்த கதைகள் அனைத்தும் துண்டுகளாகத் தென்படுவதுதான் இதன் பலவீனம். அதனை மறக்கடிக்கும் அளவுக்கு, இதில் நகைச்சுவை நிறைந்திருப்பது பலம்.

சிரிக்கலாம்.. ரசிக்கலாம்..!

ரொம்ப நாட்களுக்குப் பிறகு யோகிபாபு இதில் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதேநேரத்தில், சென்டிமெண்ட் காட்சிகளில் அழ வைத்திருக்கிறார். அவற்றைப் பார்க்கையில், ‘இது தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருந்தா எப்படியிருந்திருக்கும்’ என்ற எண்ணம் தலைதூக்குகிறது.

யோகிபாபுவுக்கு அடுத்தபடியாக, இதில் கயல் சந்திரமௌலியின் நடிப்பு இடம்பெற்றுள்ளது. இறுக்கமான முகத்துடன் அவர் வந்தாலும், ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் மாற்றங்களைப் படிப்படியாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

நகைச்சுவைக் காட்சியில் ‘கவுண்டர்’ என்பது மிக முக்கியம். நிதின் சத்யா, இளங்கோ குமரவேல் இருவரும் இதில் யோகிபாபுவுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளனர்.

சுப்பையா என்ற பாத்திரத்தில் இதில் சார்லி நடித்திருக்கிறார். பிறரைத் தன் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிற, சுயநலம் மிகுந்த, எதையும் செய்யத் துணிகிற ஒரு அலட்டல் பேர்வழியாகத் தோன்றியிருக்கிறார்.

அவரை இது போன்று நாம் பார்த்ததில்லை என்பதோடு அவரது ஈர்ப்புமிக்க நடிப்பும் சேர்ந்து அப்பாத்திரத்தை உயிர்ப்புமிக்கதாக மாற்றியிருக்கிறது.

இக்கதையின் தொடக்கமாக வரும் நிழல்கள் ரவிக்கும், மோகன் ராமுக்கும் இதில் காட்சிகள் குறைவு. ஆனால், இப்படைப்பு நிறைவடையும்போது நம் மனதில் அது ஒரு குறையாகப் படுவதில்லை. அந்த அளவுக்கு இதர பாத்திரங்கள் அவர்களது புகழ் பாடுகின்றன.

சோபியாக நடித்துள்ள வாணி போஜனுக்கு இதில் ஒரு கிளைக்கதை உண்டு. அதில் ஒருவராக பிரியதர்ஷினி ராஜ்குமார் இடம்பெறுவது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியைத் தருகிறது.

மைனா நந்தினி ஆங்காங்கே சிரிப்பு மூட்ட, மீரா கிருஷ்ணனும் தீபா சங்கரும் சீரியசாக நடித்து நம்மை ஈர்க்கின்றனர்.

இதில் சந்திரமௌலியின் ஜோடியாக வருகிறார் சம்யுக்தா விஸ்வநாதன். அவருக்குக் காட்சிகள் குறைவென்றபோதும், காதல் காட்சிகளில் கவர்ந்திழுக்கிறார். இவர்தான் ’கட்சி சேரா’ இடம்பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.

அப்புவாக வரும் ஆர்யன் டாய்லெட் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க, அவரது பயத்தைப் போக்க யோகிபாபு ஒரு முயற்சியினை மேற்கொள்வதாக வரும் காட்சி, அக்மார்க் ‘ராதாமோகன்’ ரகம்.

‘அமுதா ஹோட்டல் சட்னியும் அமுதா கஃபே சாம்பாரும் ஒரே இடத்துல கிடைக்கற மாதிரி செஞ்சா எப்படியிருக்கும்’ என்ற நிதின் சத்யாவின் யோசனைக்கு சந்திரமௌலி தெரிவிக்கும் பதிலும் அதே ரகமே!

ராதா மோகன் படங்களில் வசனம் சில இடங்களில் கூர்மையாக இருக்கும். சில சிரிக்கும்படியாகவும், சில நெகிழும் படியாகவும் இருக்கும். இதிலும் அது போன்றதொரு அனுபவத்தைத் தருகிறார் பொன். பார்த்திபன்.

யோகிபாபு உடனான காட்சிகளில் இளங்கோ குமரவேல் சிரித்துக்கொண்டே நடிக்கிற அளவுக்குச் சில வசனங்கள் அமைந்திருக்கின்றன.

ஊட்டியில் நாம் காணாத சாதாரண மக்களின் வாழ்விடங்களை இதில் காட்டியிருக்கிறது பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு.

மொத்தக் கதையில் 85 சதவிகிதக் காட்சிகள் ஊட்டியில் எடுக்கப்பட்டிருப்பதால் கண்ணுக்குக் குளுமையான காட்சியாக்கம் இதிலுள்ளது.

படத்தொகுப்பாளர் ஜிஜேந்திரன் வேண்டாத ஷாட்களை அகற்றிவிட்டு, அடுத்தடுத்த காட்சிகளை அடுக்கியிருக்கிறார்.

சில எபிசோடுகளில் வேகம் மட்டுப்படுவதைக் கவனிக்க மறந்திருக்கிறார்.

வெகுநாட்களுக்குப் பிறகு மொழி, அபியும் நானும் படங்களில் கிடைத்த அனுபவத்தை இதில் தந்திருக்கிறார் ராதா மோகன். ஒரு இயக்குநராக, ஓடிடி தளத்தில் முதல் வெப்சீரிஸை தருபவராக, அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

வழக்கமான கதை என்றபோதும், கூடுமானவரை அருவெருக்கத்தக்க சித்தரிப்புகள், இழிவு வார்த்தைகள் நிறைந்த வசனங்கள் இல்லாமல் ஒரு படைப்பைத் தந்திருக்கிறார்.

அதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், அவற்றைத் தவிர்த்திருக்கிறார். அதுவே ‘சட்னி சாம்பார்’ரின் சிறப்பு.

உண்மையைச் சொன்னால், இதனை ஒரு திரைப்படமாகவே ராதாமோகன் தந்திருக்கலாம். அதற்கான அத்தனை தகுதிகளும் இக்கதைக்கு உண்டு.

ஒரு பிரச்சனையில் தொடங்கி, பிறகு சின்னச்சின்னதாக நிறைய பிரச்சனைகளை உணர வைத்து, ஒவ்வொன்றுக்குமான தீர்வின் வழியாக இறுதித் தீர்வைக் காட்டி, முடிவில் நம் நெஞ்சில் திருப்தியும் நெகிழ்ச்சியும் நிறையச் செய்கிறர் இயக்குநர் ராதாமோகன். இதைவிட வேறென்ன வேண்டும்?!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like