ஹோட்டல் உரிமையாளர் பெயரைக் குறிப்பிட வேண்டுமா?

வட மாநிலங்களில் நடந்து வரும் கன்வார் யாத்திரையின் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்களில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களின் பெயர்களும், அதில் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்களும், அவர்களின் செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று மிகவும் வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது உத்திரப்பிரதேச அரசு.

உத்தரகாண்ட் மாநிலத்திலும் இதைப் போன்ற உத்தரவை அந்த மாநில அரசு பிறப்பித்திருக்கிறது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்று வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இத்தகைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தற்போதும் அந்தத் தடை நீடித்திருக்கிறது.

இந்தச் சமயத்தில் ஒரு நேரடி அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது தேவையாக இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து, அது சம்பந்தமாக விசாரிப்பதற்காக நானும் போட்டோகிராபரான என்னுடைய இஸ்லாமிய நண்பரும் சென்றிருந்தோம்.

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஒரு வடக்கத்தியக் குடும்பம் நின்று கொண்டிருந்தது. அதில் வயதான ஒரு முதியவர், எங்களை நோக்கி வந்தார். அவர் ஹிந்தியில் கேள்வியை எழுப்பியபோது, என்னுடைய இஸ்லாமிய நண்பர் அவருக்கு ஹிந்தியில் பதிலளித்தார்.

அப்போது, அந்த வடக்கத்திய சுற்றுலாப் பயணிக் கேட்ட முக்கியமான கேள்வி, “நாங்கள் இங்கு காலை உணவை சாப்பிட வேண்டும். எந்தக் கடையில் சாப்பிடலாம்?” என்றார்.

என்னுடைய நண்பர் அருகில் இருக்கும் சில ஹோட்டல்களின் பெயர்களைச் சொல்லி, “அங்கு போனால் நல்ல உணவுக் கிடைக்கும்” என்றார்.

“சைவ உணவு தானே..” என்று அந்த வட மாநிலத்தவர் கேட்க, “ஆம்” சைவ உணவு தான் என்று பதில் அளித்தார் என்னுடைய நண்பர்.

அதையடுத்து அவர் எழுப்பிய கேள்விதான் வினோதமானது.

“அந்த ஓட்டல் எந்த முஸ்லீமுக்கும் சொந்தமானது இல்லை இல்லையா? அந்த ஓட்டல்களில் வேலை செய்பவர் யாரும் முஸ்லீம்கள் இல்லை தானே? என்பதை குறிப்பாகக் கேட்டதும் நண்பர் நிதானமாகச் சொன்னார்.

“அந்த விவரம் எல்லாம் எனக்கு தெரியாது. இங்கு உள்ள ஒவ்வொரு ஹோட்டல்களிலும் யார் யார் வேலை செய்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து, இங்கு நாங்கள் யாரும் ஹோட்டல்களை சாப்பிடுவதில்லை. அந்த விவரம் எல்லாம் தெரியாது. இதை ஏன் கேட்கிறீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அந்த வடக்கத்தியப் பயணி சொன்னார்.

“இல்லை, நாங்கள் முஸ்லீம்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களிலோ அல்லது அவர்கள் ஊழியர்களாக வேலை செய்யும் ஹோட்டல்களிலோ சாப்பிடுவதில்லை” என்ற முடிவில் இருக்கிறோம்” என்று பதிலளித்தவுடன் என்னுடைய நண்பர் சொன்னார், “ஐயா நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறீர்களே நானும் ஒரு முஸ்லீம்தான்” என்றார்.

அதற்கு பிறகு அந்த வடக்கத்தியப் பயணியின் முகம் போனபோக்கு அவ்வளவு தெளிவானதாக இல்லை.

– யூகி

You might also like