பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், மற்றும் விசிக பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் ஆகியோர் தங்களது தொகுதி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று மக்களுக்குப் பயனளித்து வருகின்றனர்.

அதோடு, சமூக அக்கறையுள்ள பல்வேறு கேள்விகளையும் மக்களவையில் எழுப்பி, ஒன்றிய அரசிடமிருந்து பதில் பெற்று வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி அளிக்கப்பட்டுள்ளது, அதில், எஸ்.சி / எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர் என, துரை.ரவிக்குமார் எம்.பி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டர் பதிலளித்துள்ளார்.

அதன்படி, “தமிழ்நாட்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் கடந்த 2021-24 க்கு இடையே எஸ்சி பிரிவினருக்கு 29 ஆயிரம் வீடுகளும் ஓபிசி பிரிவினருக்கு சுமார் 63 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

அதில் எஸ்டி பிரிவினருக்கு சுமார் ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட 6,80,347 வீடுகளில் 1,94,546 வீடுகள் எஸ்சி பிரிவினருக்கும் 8,994 வீடுகள் எஸ்டி பிரிவினருக்கும் 3,27,898 வீடுகள் ஓபிசி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கென ஒன்றிய அரசால் 11,185 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் தமிழகத்திற்கு 10,134 கோடியே 96 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டர் பதிலளித்துள்ளார்.

You might also like