கடந்த சில நாட்களாக ‘இன்ஸ்டாரீல்ஸ்’களில் ’தௌபா.. தௌபா..’ பாடலை அதிகம் பார்க்க, கேட்க முடிகிறது. அந்த மெட்டு மட்டுமல்லாமல், அதன் வீடியோ உள்ளடக்கமும் கூடச் சட்டென்று ஈர்க்கும் வகையில் உள்ளதே அதற்குக் காரணம்.
மிக முக்கியமாக, அந்த பாடலில் இடம்பெற்றுள்ள விக்கி கௌஷலின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம், கரண் ஜோகர் தயாரிப்பில், ஆனந்த் திவாரி இயக்கத்தில், அம்மி விர்க், ‘அனிமல்’ புகழ் ட்ரிப்தி டிம்ரி, நேகா தூபியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பேட் நியூஸ்’.
இரண்டு ஆண்களின் விந்தணுக்களில் இருந்து உருவான இரு வேறு கருக்களை ஒரே நேரத்தில் ஒரு பெண் சுமப்பதாகச் சொன்னது இப்படத்தின் ட்ரெய்லர். அதனாலேயே, சர்ச்சைக்குரிய திரைப்படமாகவும் தோற்றம் தந்தது.
உண்மையிலேயே இந்தப் படம் சர்ச்சைக்குரியதுதானா? இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எத்தகையது?
இதுவும் ஒரு பெண்ணின் கதையே..!
டெல்லியில் ஒரு ஹோட்டலில் செஃப் ஆக பணியாற்றி வரும் சலோனி பாகாவுக்கு (ட்ரிப்தி டிம்ரி) ஒரே ஒரு ஆசைதான். அது, சமையல் உலகின் உயரிய விருதான ‘மெராகி செஃப்’ எனும் பெருமையைப் பெறுவது.
அதனால், ‘கல்யாணமே வேண்டாம்’ எனும் மனநிலையில் இருக்கிறார் சலோனி. ஆனால், ஒரு திருமண நிகழ்வில் அகில் சத்தாவை (விக்கி கௌஷல்) பார்த்ததும், அவரது எண்ணம் தவிடுபொடியாகிறது.
‘பார்த்தவுடன் காதல்’ எனும் நிலையில், சட்டென்று திருமணம் நோக்கி நகர்கிறது அகில் – சலோனி உறவு. தொடக்கத்தில், ‘மெராகி செஃப்’ விருதைப் பெறத் துணை நிற்பேன் என்று சொல்கிறார் அகில்.
நாட்கள் செல்லச் செல்ல, குழந்தை பெற்றுக்கொண்டு ‘செட்டில்’ ஆவதில் மட்டுமே அவரது கவனம் இருக்கிறது. அது போதாதென்று, எந்நேரமும் தாயிடம் இருந்து வரும் மொபைல் அழைப்புகளுக்காக அவர் காத்திருப்பது சலோனியை எரிச்சல்படுத்துகிறது.
ஒருநாள் சலோனி வேலை செய்யும் ஹோட்டலுக்கு செல்கிறார் அகில். உடன், தனது நண்பர்களையும் அழைத்துப் போகிறார். ’பணி நேரத்தில் ஏன் இடையூறு செய்கிறாய்’ என்று அவரிடம் கடிந்து கொள்கிறார் சலோனி.
அந்த நேரத்தில், உணவுண்ண வந்த நபர் ஒருவர் சலோனியைக் கடுமையாகத் திட்டிவிடுகிறார். அதனைக் கண்டு பொறுக்க முடியாமல் அகில் அவரை அடிக்க, சலோனி அந்த நபரிடம் மன்னிப்பு கேட்கிறார். அந்த சம்பவத்தால், அகில் மீது அவர் கடுமையான ஆத்திரம் கொள்கிறார்.
வீட்டில் இதனால் இருவருக்கும் சண்டை வெடிக்கிறது. சமாதானம் செய்ய வந்த அகிலின் தாயைத் திட்டி விடுகிறார் சலோனி. அது, அகில் – சலோனி இடையேயான காதல் வாழ்வைச் சுக்குநூறாக்குகிறது. ‘வீட்டை விட்டு வெளியே போ’ என்று அவரை வெளியேற்றுகிறார் அகில்.
அடுத்த நாள், ‘மெராகி செஃப்’ தேர்வுக்காக ஒரு குழு சலோனி பணியாற்றும் ஹோட்டலுக்கு வருகிறது. நேர்முகத் தேர்வில், அக்குழுவினர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார் சலோனி. முடிவில், அவர் தோல்வியுற்றதாக அறிவிக்கப்படுகிறது. அந்த நொடியில், அந்த ஹோட்டலில் இருந்து அவரை நீக்கம் செய்வதாகச் சொல்கிறார் அதன் உரிமையாளர்.
அதையடுத்து, அகில் மற்றும் சலோனியைச் சேர்த்து வைக்க முயல்கின்றனர் அவர்களது குடும்பத்தினர். ஆனால், சலோனியின் மனதில் இருக்கும் கோபம் பூதாகரமான காரணத்தால், ‘எனக்கு விவாகரத்து வேண்டும்’ என்று அவர் சொல்கிறார்.
அதனைக் கேட்டு ஆத்திரமுறும் அகில், ‘சரி, தந்துவிடுகிறேன்’ என்று பதிலளிக்கிறார்.
மண முறிவுக்குப் பிறகு, முசௌரியிலுள்ள ஒரு ஹோட்டலுக்குப் பணியாற்றச் செல்கிறார் சலோனி. அங்கு, அதன் உரிமையாளர் குர்பீர் பன்னுவைச் (அம்மி விர்க்) சந்திக்கிறார்.
மெல்ல குர்பீர் உடன் சலோனிக்கு நல்லவிதமான நட்பு முளைக்கிறது. ஆனால், அது காதலாக மாறுவதற்கான சூழலே உருவாவதில்லை.
இந்த நிலையில், ஒருநாள் சமூகவலைதளத்தில் வேறு சில பெண்களுடன் அகில் நெருக்கமாக இருப்பதைக் காண்கிறார் சலோனி. மது அருந்திய நிலையில் இருக்கும் அவரை, அந்த புகைப்படங்கள் ரொம்பவே எரிச்சலூட்டுகின்றன.
அதற்கு வடிகால் வேண்டி, பார்ட்டி ஒன்றில் பங்கேற்றிருக்கும் குர்பீரை அழைத்துக்கொண்டு அவரது அறைக்குச் செல்கிறார் சலோனி. அங்கு, இருவரும் எல்லை மீறுகின்றனர்.
அகிலைப் பழி வாங்கிய மகிழ்ச்சியோடு, தனது அறைக்குத் திரும்புகிறார் சலோனி. அப்போது, மணி சரியாக இரவு பன்னிரண்டு. கதவைத் திறந்ததும், ‘ஹேப்பி பெர்த்டே’ என்று பூட்டிய அறைக்குள் இருந்து ஆச்சர்யம் தருகிறார் அகில். அது, சலோனிக்கு அதிர்ச்சியாக மட்டுமே தெரிகிறது.
குர்பீர் அறையில் இருந்து வந்தது ஒருபுறம் இருக்க, பூட்டிய அறைக்குள் அகில் நுழைந்தது எப்படி என்ற கேள்வி இன்னொரு புறம் அவரை வாட்டி வதைக்கிறது.
ஆனால், அக்கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, ‘உன்னை என்னால் மறக்க முடியவில்லை’ என்கிறார் அகில். அப்புறமென்ன, ‘பிரிந்த தம்பதிகள் கூடினால் வேறென்ன நடக்கும்’ என்பது போல இருவரும் கட்டியணைத்துக் கொள்கின்றனர்.
ஐந்தாறு வாரங்கள் கழித்து, மது போதையில் குர்பீர், அகில் உடன் மகிழ்ச்சியாக இருந்ததன் விளைவை எதிர்கொள்கிறார் சலோனி. அவர் இரட்டைக்கருக்களைச் சுமப்பதாக அறிவிக்கிறார் ஒரு மருத்துவர்.
கூடவே, சோதனைகளின் முடிவில் இன்னொரு குண்டையும் போடுகிறார். அதில் ஒரு கருவுக்கு குர்பீர் தந்தை என்றும், இன்னொரு கருவுக்கு அகில் தந்தை என்றும் சொல்கிறார்.
மயக்கம் வராத குறையாக அதனைக் கேட்கும் சலோனி, அக்கருக்களைக் கலைக்க ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக குர்பீர், அகில் துணையில்லாவிட்டாலும், அவற்றைப் பெற்றெடுப்பதில் உறுதியாக இருக்கிறார்.
இன்னொரு ஆணின் குழந்தையைச் சலோனி சுமப்பது ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், ‘தனது குழந்தையைச் சுமக்கிறாரே’ என்று குர்பீர், அகில் இருவருமே அவர் மீது பிரியம் காட்டுகின்றனர். அதேநேரத்தில், இருவரும் பூனையும் எலியுமாகச் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், ஒரு வீட்டில் சலோனி உடன் அகிலும் குர்பீரும் ஒன்றாகத் தங்க நேர்கிறது. அப்போது, இருவரும் ஒருவரது காலை மற்றொருவர் வாரிவிடப் பலமுறை முயற்சிக்கின்றனர். அது, ஒருகட்டத்தில் சலோனி கர்ப்பமுற்றிருப்பதை மூவரது குடும்பங்களும் அறிய வழி வகுக்கிறது.
அதன்பின் என்னவானது என்பதைச் சொல்கிறது ‘பேட் நியூஸ்’ திரைக்கதையின் மீதி. முழுக்க முழுக்கச் சலோனி எனும் பெண்ணின் பார்வையிலேயே இக்கதை சொல்லப்படுகிறது.
தனது நிலையை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தடுமாறும் அப்பாத்திரம், தாய்மை உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாகக் காட்டுகிறது இப்படம்.
அதேநேரத்தில், ஒரு பெண்ணால் எப்படி இரு ஆண்களோடு அடுத்தடுத்து உறவு கொள்ள முடிந்தது என்ற கேள்விக்கான பதில் இப்படத்தில் இல்லை. இப்படிப் பல மைனஸ்கள், ப்ளஸ்களை தாங்கி நிற்கிறது ‘பேட் நியூஸ்’.
அசத்தும் ‘மூவர்’ கூட்டணி!
இந்தப் படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் அகிலாக நடித்துள்ள விக்கி கௌஷல், சலோனியாக நடித்துள்ள ட்ரிப்தி டிம்ரி, குர்பீர் ஆக நடித்துள்ள அம்மி விர்க் ஆகிய மூவரைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப இந்த மூவர் கூட்டணி திரையில் ‘ப்ரெஷ்’ ஆக தென்படுகிறது.
படபடவென்ற பேச்சும், துறுதுறுவென்ற உடல்மொழியுமாகப் படம் முழுக்க ‘பட்டாசு’ போல அமைந்திருக்கிறது விக்கி கௌஷலின் நடிப்பு.
‘டாட்டூ போட்ட பொண்ணை நம்பக்கூடாதுன்னு சொல்வாங்க’ என்பது போன்ற வசனங்களை அவர் உதிர்க்கையில் இளம்பெண்கள், ஆண்களின் ‘ஹோ’வென்ற சத்தம் திரையரங்கை நிறைக்கிறது.
அனிமல் படத்தில் நாயகியான ராஷ்மிகாவை விடவும், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் மிகச்சில காட்சிகளில் ரன்பீர் கபூர் உடன் காதல் களியாட்டங்களில் ஈடுபடுபவராகக் காட்டப்பட்ட ட்ரிப்தி டிம்ரி.
அவரது கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டாடும்விதமாகச் சில காட்சிகள், பாடல்கள் இதிலும் உள்ளன.
அதேநேரத்தில், இரண்டு ஆண்களின் கருக்களைச் சுமக்கும் ஒரு பெண் பாத்திரத்தின் கனத்தைச் சுமக்க முடியாமல் ட்ரிப்தி தடுமாறியிருப்பது திரையில் நன்றாகவே தெரிகிறது.
‘நான் டி20 டைப் இல்ல, டெஸ்ட் மேட்ச் தான் எனக்கு பிடிக்கும்’ எனும் ரகத்தில் ட்ரிப்தி உடன் அம்மி விர்க் பேசும் வசனங்கள் தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளுகின்றன.
படத்தில் அம்மி விர்க்கும் விக்கி கௌஷலும் ஒருவரையொருவர் ‘மணிமேகலை யாருக்கு’ எனும் டைப்பில் சண்டையிட்டுக் கொள்வது நம்மைச் சிரிப்பலையில் மூழ்கடிக்கிறது.
ட்ரிப்தியின் உறவினராக வரும் நேகா தூபியாவுக்குப் படத்தில் இரண்டொரு காட்சிகளே தரப்பட்டுள்ளன. மருத்துவராக வரும் பைசல் ரஷீத் சில காட்சிகளில் வந்தாலும், நம் கவனத்தை ஈர்க்கிறார்.
இவர்கள் தவிர்த்து நாயகனின் தாய் ஆக வரும் ஷீபா சத்தா, குனீத் சிங் சோதியோடு கிளைமேக்ஸில் வந்து போகும் நேகா சர்மா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் தேபோஜித் ரே, படத்தொகுப்பாளர் ஷான் முகம்மது, தயாரிப்பு வடிவமைப்பாளர் மனினி மிஸ்ரா என்று இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் திரையில் ‘செறிவான’ உள்ளடக்கம் தென்படுவதற்காகக் கடுமையாக உழைத்துள்ளனர்.
‘ரப் வர்கா’, ‘ஜானம்’ பாடல்கள் மென்மையாக வருடும் மயிலிறகாக இருக்கின்றன; அதனை ஈடுகட்டும் வகையில் ‘மேரே மெஹ்பூப் மேரே சனம்’, ‘தௌபா.. தௌபா..’ பாடல்கள் கவர்ந்திழுக்கும் தாள லயத்துடன் அமைந்துள்ளன.
ரோசக் கோஹ்லி, விஷால் மிஸ்ரா, பிரேம் -ஹர்தீப், கரண் அவுஜ்லா, அபிஜித் ஸ்ரீவஸ்தவா, லிஜோ ஜார்ஜ் – டிஜே சேடாஸ் ஆகியோர் இப்படத்தில் வரும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
அமர் மொஹிலேவின் பின்னணி இசை, அப்பாடல்களைத் தாண்டிக் காட்சிகளுடன் நாம் ஒன்றிணைய வழி வகுக்கிறது.
முக்கியமாக, ‘டாம் அண்ட் ஜெர்ரி’ பாணியில் அம்மி விர்க், விக்கி கௌஷல் மோதிக்கொள்ளும் காட்சிகளில் பின்னணி இசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
இஷிதா மொயித்ரா, தருண் துடேஜா இருவரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கின்றனர்.
மருத்துவ உலகில் அரிதாக நிகழும் கர்ப்பம் ஒன்றை மையமாகக் கொண்டு கதையைப் புதிதாக அமைத்திருந்தாலும், அதற்கேற்ப திரைக்கதையைப் புதுமையானதாக ஆக்கவில்லை. ‘ரொம்பக் குழப்பியடிக்க வேண்டாம்’ என்று நினைத்திருக்கலாம்.
இயக்குனர் ஆனந்த் திவாரி, முடிந்தவரை இந்தக் கதையைச் சாதாரண ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்விதமாகத் திரையில் சொல்லியிருக்கிறார்.
கிளைமேக்ஸ் காட்சியைச் சொல்வதில் மட்டும் ‘அதிக நேரம்’ எடுத்திருக்கிறார். ‘பீல்குட்’டான படமாக இது தென்பட வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.
யாருக்கு ‘பேட் நியூஸ்’?
2019இல் வெளியான ‘குட் நியூஸ்’ படத்தில் ‘ஐவிஎஃப்’ முறையில் கருத்தருத்த இரு பெண்கள், இன்னொரு பெண்ணின் கணவரது விந்தணுவால் கருவுற்றிருப்பது சொல்லப்பட்டிருக்கும்.
அதனால் இருவரது கணவர்மார்களும் குழம்பித் தவிப்பதும் சண்டையிடுவதும் காட்டப்பட்டிருக்கும். அதே பாணியில் இப்படம் உருவான காரணத்தால், இதற்கு ‘பேட் நியூஸ்’ என்று டைட்டில் இடப்பட்டுள்ளது.
வழக்கமான காதல் கதையாக இப்படம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே இந்தியில் வெளியான சில காதல் திரைப்படங்களின் உள்ளடக்கத்தைக் கிண்டலடிக்கும் காட்சிகள் நிறைந்திருந்தாலும், இப்படமும் ஒரு வழக்கமான கமர்ஷியல் படமே. அதற்கேற்ப ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட் காட்சிகள் இதில் நிறைந்திருக்கின்றன.
அதே நேரத்தில், ‘ஒரு பெண் ஒரேநேரத்தில் இரு ஆண்களுடன் உறவு கொண்டு அவர்களது கருக்களை வயிற்றில் சுமக்கிறார்’ எனும் ஒருவரிக் கதையை ஏற்றாக வேண்டிய கட்டாயமும் பார்வையாளர்களுக்கு உண்டு.
அதனை ஏற்றுக்கொள்ளும் மனம் உண்டு என்றால், நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஆங்காங்கே சிரித்து மகிழலாம்.
அதுவும் போதாது என்பவர்களைத் திணறடிக்க, படம் முழுக்க அழகாகத் தோற்றமளிக்கிறார் ட்ரிப்தி டிம்ரி.
இவையனைத்தும் போதாது என்பவர்களுக்கு, இப்படம் ஒரு ‘பேட் நியூஸ்’ தான்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்