இலட்சிய மனிதராக மாற…!

பேரா.க.பழனித்துரை

இலட்சிய மனிதராக நாம் மாறத்தேவை இலட்சியங்களை வாழ்வு முறையாக ஆக்கிக் கொள்வது. என்ன இலட்சியங்கள்? சமூக மேம்பாட்டிற்கான பார்வையை தன்னகத்தே கொண்டு செயல்படுதல்.

சமூகத்துடன் இயைந்து வாழ்தல். பொதுநலன்தான் தனிமனித நலத்தையும் குடும்ப நலத்தையும் பாதுகாக்கும் அரண் என்ற சிந்தனை மற்றும் பார்வை கொள்ளுதல், சமூகத்தின் மீது மதிப்பு, ஊர்களின் மீது பரிவு, அன்பு, கருணை கொண்டு செயல்படுதல், சமூக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் உழைத்தல், சமூகத்தில் சமத்துவம் பேணல்.

இவைகளை இன்று கைக்கொண்டு செயல்பட்டாலே ஓர் லட்சிய வாழ்வை நாம் இருக்கும் இடத்தில் வாழ முடியும்.

இலட்சிய சமூகம்:

நாம் வசிக்கும் இடத்தில் எவரும் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல மாட்டார்கள். நாம் வாழும் இடத்தில் எவரும் அறியாமையில் வாழமாட்டார்கள்.

உடல் பற்றிய தெளிவு; உணவு பற்றிய புரிதல்; ஆன்மா பற்றிய தேடல்; மேம்பாடு, வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய இலக்கு, சமத்துவம் பற்றிய அறிவு பெற்று மதிக்கத்தக்க மனித வாழ்க்கையை எந்த ஆதிக்கமும் இன்றி சுதந்திரமாக வாழ்வார்கள்.

அங்கு யாரும் யாரையும் அவமானப் படுத்த மாட்டார்கள். யாரும் யாரையும் சுரண்டிவாழ மாட்டார்கள். அனைவரும் சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் எல்லா உரிமைகளுடனும் வாழ்வார்கள்.

குடிமக்கள் தயாரிப்பு:

“ஒரு கடைக்குச் செல்கிறோம் பொருள் வாங்க. நல்ல பொருள் வேண்டும் என பார்த்து பார்த்து அலசி ஆராய்ந்து பார்த்து வாங்குகின்றோம். எனவே எங்கு சென்றாலும் எனக்கு நல்லது வேண்டும் என்று கேட்கிறோம். எனக்கு நல்ல ஆட்சி வேண்டும் நல்ல அரசியல் வேண்டும். நல்ல நிர்வாகம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். தவறு ஒன்றுமில்லை.

இத்தனையும் நல்லதாக வேண்டும் என்று கேட்கும் நான் நல்லவராக இருக்கின்றேனா? (“நாம் பொறுப்புள்ள குடிமக்கள் தானா…?” என்று கேட்டு டாக்டர் அப்துல் கலாம் 25.01.2006ல் ஒரு உரை ஆற்றி இருப்பார்.  அதில் இங்கே ஆசிரியர் கேட்கும் கேள்வியைக் கேட்டு பேசியிருப்பார் – தினமணி – கலாம் சிறப்பு மலர்)

என் குடும்பம் நல்லதாக இருக்கிறதா? நான் வாழும் சமூகம் நல்லவையாக இருக்கின்றதா? என்று என்றாவது நமக்கு நாமே கேட்டுக் கொண்டோமா? ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் எப்படி ஒரு பொறுப்புமிக்க அரசியல், ஆட்சி. நிர்வாகம் என அனைத்தும் உருவாகும்.

ஒரு நல்ல ஆட்சிக்குத் தேவை நல்ல சமுகம் அந்தப் பொறுப்பு மிக்க சமூகத்தை கட்டமைத்து உருவாக்காவிட்டால் எக்காலத்தும் ஒரு நல்ல அரசு நம்மிடம் உருவாகாது.

எனவே நற்சமுதாயம் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தப்பணி இன்றியமையாத் தேவையாக இருக்கின்றது. இது ஒரு மக்கள் தயாரிப்பு பணி.
****
பொறுப்புள்ள குடிமக்களைத் தயாரிப்பதுக்கான அவசியத்தையும் வழிமுறைகளையும் சொல்வதே இந்த நூலின் நோக்கம்.

பேரா.க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தொடர்ந்து நல்ல குடிமக்களை உருவாக்க, பேசி எழுதி வருபவர்.

உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி பேசும்போது இவரைத் தவிர்த்து விட்டுப் பேச முடியாது. நல்ல உள்ளாட்சி அமைப்புகள் அமைவதற்காக பல நூல்களை படைத்திருக்கிறார்.

க.பழனித்துரை

பேராசிரியர், நாம் என்ன நோக்கத்திற்காக சுதந்திரம் பெற்றோமோ, சுதந்திரப் போராட்ட காலத்தில் தியாகத் தலைவர்கள் எதை விரும்பினார்களோ அதை நாம் இன்னும் அடையவில்லை.

அதற்கு நல்ல குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதை தொடர்ந்து தனது பேச்சிலும், எழுத்திலும் வலியுறுத்தி வருகிறார். “குடிமக்கள் தயாரிப்பு” நூலும் அந்த வகையைச் சேர்ந்ததே.

ரிக்ஷாக்காரர் ஞானி உரையாடல் வழியாகவும், பங்களாதேஷில் கிராமின் வங்கியை உருவாக்கிய முகமது யூனஸ் வழியாகவும் நெறிசார்ந்த மனிதனை உருவாக்குவது பற்றி ஆசிரியர் நிறைய பேசுகிறார் இந்நூலில்.

இறுதியாக சரியான குடிமக்களைத் தயாரிக்க அரசியலமைப்புச்சட்டத்தில் உள்ள மக்களுக்கான அடிப்படைக் கடமைகளே போதுமானது; அதைச்சரி யாகப் புரிய வைத்தாலே நல்ல குடிமக்கள் உருவாகி விடுவார்கள் என்பது ஆசிரியர் முடிவு.

இலட்சிய மனிதனையும், சமூகத்தையும் உருவாக்க நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.
 ***** 

குடிமக்கள் தயாரிப்பு

பேரா.க.பழனித்துரை

புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை.

விலை: ரூ. 65/-

தொடர்புக்கு – 90430 50666

You might also like