எதிர்பாராத வெற்றியை தனுஷுக்கு தந்த ‘வி.ஐ.பி’!

யதார்த்தத்தில் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாதபோதும், மலையையே புரட்டிப் போடும் அளவுக்கு ஆற்றல் இருக்கிறதோ என்று நம்மை நாமே ஐயப்பட்டுக்கொள்ளும் அளவுக்குச் சில நேரங்களில் கற்பனைச் சிறகுகள் முளைக்கும்.

காலத்தின் வெம்மையில் அது போன்ற தருணங்கள் பொசுங்கிப் போகும்போது, சில கமர்ஷியல் மசாலா சினிமாக்கள் அதிலிருக்கும் ஹீரோக்கள் வழியே நமக்கு அந்த சிறகுகளை மானசீகமாகப் பொருத்திப் பார்க்கும்.

பிறகு, தியேட்டருக்குள் இருக்கும் இரண்டரை சொச்ச மணி நேரமும் நம் மனம் கொள்ளும் திருப்திக்கு அளவே கிடையாது. அப்படிப்பட்ட மசாலா திரைப்படங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ உருவாக்கிவிட முடியாது என்பதே நிதர்சனம்.

ஏற்கனவே வெளியான சில படங்களைப் பிரதியெடுத்தாலும் கூடத் திரையில் கொஞ்சமாவது புத்துணர்வை எதிர்பார்ப்பது ரசிகர்களின் வழக்கம்.

அதற்காகவே, நிறைய விஷயங்களை அள்ளித் தெளித்து பிரமாண்டத்தைக் கொட்டுவது கமர்ஷியல் பட இயக்குனர்களில் பெரும்பாலானவர்களது வழக்கம். அரிதாக, மிகச்சிலர் மட்டுமே எளிமையான உள்ளடக்கத்தைக் கொண்ட படங்களின் வழியே அப்படிப்பட்ட வெற்றிகளை வசப்படுத்துவார்கள்.

அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெறுவது, தனுஷின் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’. ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய இந்தப் படத்தில் அனிருத்தின் இசையும் விவேக்கின் நகைச்சுவையும் யுஎஸ்பியாக அமைந்தன.

அனைத்துக்கும் மேலே, மிகச்சாதாரணமாகச் சாலைகள் நம் எதிரே வரும் நடுத்தர வர்க்கத்து இளைஞன் ஒருவனைப் போலத் திரையில் தனுஷ் நிறைந்து நின்றது இப்படத்தைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது.

வழக்கமான கதை!

‘ஒரு ஊர்ல ஒரு ஹீரோ இருந்தாராம். அவர் பார்த்துட்டு வந்த வேலைக்கு வில்லன் உலை வச்சானாம். அது தெரிஞ்ச பிறகு, அந்த ஹீரோ என்ன பண்ணார் தெரியுமா’ என்பது போன்ற கதைகளைப் ’பேசும் படம்’ காலம் தொட்டு நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால், இது போன்ற வழக்கமான கதைகளைச் சுவாரஸ்யம் ததும்பத் திரையில் சொல்லிவிட்டால் போதும்.

ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவதை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தொடர்ச்சியாகக் கொண்டாட்டங்களைத் தருபவர்கள் ‘சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தை எட்டுவார்கள்.

உலகின் எந்த மூலைக்கும் இந்த விதியைப் பொருத்திப் பார்க்க முடியும். ‘வேலையில்லா பட்டதாரி’ படமும் மேற்சொன்ன வகையில் வழக்கமான கதையொன்றைக் கொண்டிருந்தது.

ரகுவரன் என்ற பட்டதாரி இளைஞனாக இதில் தனுஷ் நடித்திருந்தார். அவரது அம்மாவாக சரண்யாவும், அப்பாவாக சமுத்திரக்கனியும், தம்பியாக ஹ்ருஷிகேஷும் நடித்திருந்தனர்.

வேலையில்லாமல் வெட்டியாக ஊர் சுற்றுகிற, வீட்டில் எந்நேரமும் டிவியே கதி என்று கிடக்கிற, பேசுவதற்கு அக்கம்பக்கத்தில் யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிற ஒரு சராசரி இளைஞராகத் தோன்றியிருந்தார் தனுஷ்.

‘கறியில கைய வை; கைய வெட்டிர்றேன்’ என்று ஞாயிற்றுக் கிழமையன்று கறிக்கடைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கிற தம்பியைப் பார்த்து கருவுவார் தனுஷ்.

‘ஆறு நாளும் அவன் வேலைக்குப் போறப்போ நீ வீட்டுலதானே இருக்க’ என்று தாய் அதற்குக் காரணம் சொல்வார். இது போன்ற சூழலைப் பல வீடுகளில் நாம் நேரில் காண முடியும்.

சகோதரனை நல்லதொரு பள்ளியில் சேர்த்ததாகவும், தன்னைச் சாதாரண பள்ளியொன்றில் படிக்க வைத்ததாகவும், பெற்றோரிடம் புலம்பும் காட்சியில் தனுஷின் பேச்சு நடுத்தர வயதினரைப் பின்னோக்கி நோக்கச் செய்தது.

சண்டைக்கு வந்தவர்களை ஹீரோ விரட்டியடிப்பது பல படங்களில் நாம் பார்த்தது. அப்படிச் சண்டையிட்ட தனுஷை அவரது தாயாக நடித்த சரண்யா விளக்குமாறால் அடிப்பதாகக் காட்சியொன்று இதிலுண்டு.

’டில்லிக்கே ராஜானாலும் தாய்க்கு மகன் தான்’ என்று கிராமப்புறங்களில் சொல்கிற பழமொழிக்கு நியாயம் சேர்க்கிற காட்சி அது.

அதேபோல, தாய் இறந்தபின்பு துக்கத்தில் தன்னையே மாய்த்துக் கொள்வதாக நாயகன் சொல்கையில், அதுநாள்வரை அவரை கரித்துக்கொட்டிய தந்தை பாத்திரம் ஆறுதல் வார்த்தைகளை அதட்டலுடன் வெளிப்படுத்துவதாகக் காட்சியொன்று உண்டு.

மிருதுவான மனம் கொண்டவர்களைக் கண்ணீரில் நனைத்தெடுப்பதாக, அது திரையில் வார்க்கப்பட்டிருக்கும்.

இப்படிச் சாதாரண மனிதர்கள் தமது வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கத்தக்க வகையில் இதில் பல காட்சிகளை உதாரணம் காட்ட முடியும்.

இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அதில் உச்சமாக அமைக்கப்பட்டிருக்கும். முதல்முறையாகப் படம் பார்க்கிறவர்களுக்கு, அந்தக் காட்சி தரும் ஆச்சர்யம் அளவிட முடியாதது.

இதில் நாயகன் தனுஷைப் போலவே, வில்லனாக வரும் அமிதாஷ் பிரதான் தனது தந்தையாக வரும் சஞ்சய் அஸ்ரானியோடு உரையாடும் காட்சிகளும் ரசிகர்களிடம் பிரபலம்.

தனுஷ் கூடவே இருந்து குழி பறிக்கும் பாத்திரத்தில் நடித்த நபர், இதில் இரண்டொரு காட்சிகளில் இடம்பெற்றாலும் அசத்தலான நடிப்பைத் தந்திருப்பார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்தப் படத்தின் திரைக்கதையாக்கத்திலும் காட்சியாக்கத்திலும் பங்கேற்றிருந்தார் என்பதைச் சொல்லும்விதமாக, இதில் ஒரு பாத்திரத்தில் அவர் தலைகாட்டியிருப்பார்.

நாயகி அமலா பால், அவரது தாய் ஆகியோரோடு தனுஷ் பேசிப் பழகும் காட்சிகளும் கூட, மிக இயல்பாகத் திரையில் வார்க்கப்பட்டிருக்கும்.

அமலா பால் – தனுஷ் இடையிலான காதல் காட்சிகள் கூட, மிகையான ‘ரொமாண்டிசைசேஷன்’னை கொண்டிருக்காது. கிட்டத்தட்ட இதேவிதமான சித்தரிப்பை, நட்பு கலந்த உறவை ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா மேனனிடத்தில் வெளிப்படுத்தியிருப்பார் தனுஷ்.

குறும்படம், தொலைக்காட்சித் தொடரை விட ஒரு படி மேலான காட்சிச் சித்தரிப்புகளைக் கொண்டிருந்தாலும், ‘வேலையில்லா பட்டதாரி’யில் வழக்கமான கமர்ஷியல் படத்திற்கான அழகியல் அம்சங்களை நம்மால் காண முடியாது. அந்த திரைக்கதை ட்ரீட்மெண்டே இப்படத்தின் பலமாகவும் மாறியது. ரசிகர்களைக் கொண்டாடச் செய்தது.

பொறியியல் மாணவர்களின் வலி!

’வேலையில்லா பட்டதாரி’யில் தனுஷின் பாத்திரப் பெயர் ரகுவரன். அவரது தம்பியாக வரும் ஹ்ரிஷிகேஷின் பாத்திரப் பெயர் கார்த்திக்.

எண்பதுகளில் ரசிகர்கள், ரசிகைகளிடத்தில் புகழ் பெற்றிருந்த அவ்விரு நாயகர்களை நினைவூட்டும்விதமாக அப்பாத்திரங்களும் திரையில் வெளிப்பட்டிருக்கும்.

அதுவே, அவர்கள் இருவரும் உண்மையிலேயே இப்பாத்திரங்களில் நடித்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கும்.

2010 வாக்கில் பொறியியல் கற்ற பல மாணவர்கள் வெவ்வேறு வேலைவாய்ப்புகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். சிலருக்கு அது நான்காண்டுகள் கற்ற கல்விக்கு நேரெதிர் திசையிலும் அமைந்தன.

அவர்களனைவரும் ‘வேலையில்லா பட்டதாரி’யில் இடம்பெற்ற ரகுவரன் பாத்திர வார்ப்பினை ரொம்பவே கொண்டாடினார்கள். பொறியியல் கல்லூரியில் கஷ்டப்பட்டு படித்தபிறகு உரிய வேலை கிடைக்காமல் திண்டாடும் வலிக்கான மருந்தாக, இப்படத்தில் தனுஷ் பாத்திரம் அமைந்தது.

அனிருத்தின் இசையில் ‘தீம்’ இசையும், சில காட்சிகளில் பின்னணி இசையும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன.

அது போதாதென்று ’வாட் எ கருவாட்’, ’ஊதுங்கடா சங்கு’, ‘வேலையில்லா பட்டதாரி’ பாடல்களின் தாளக் குவியலோடு ‘போ இன்று நீயாக’, ‘அம்மா.. அம்மா..’ ஆகிய மெலடி மெட்டுகளும் கூட ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டன.

அந்த வகையில் ‘3’, ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ போன்று அனிருத்தை ரசிகர்கள் சிகரத்திற்கு ஏற்றிய படங்களில் ஒன்றாக இதுவும் அமைந்தது.

ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, ராஞ்சனா, மரியான், நையாண்டி என்று வெவ்வேறுவிதமான கதையம்சங்களைக் கொண்ட படங்களை அதற்கு முன் தனுஷ் தந்திருந்தாலும், அவற்றில் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அந்தக் குறையைப் போக்கியது ‘வேலையில்லா பட்டதாரி’. எவரும் எதிர்பாராத வகையில் ‘பிளாக்பஸ்டர்’ ஆக அமைந்தது.

2014 ஜூலை 18 அன்று இப்படம் வெளியானது. சுமார் 8 கோடியில் தயாரான இப்படம் 55 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

இன்றும் தொலைக்காட்சியிலோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ இப்படத்தைக் காண நேர்கையில் இரண்டு, மூன்று காட்சிகளாவது தொடர்ந்து பார்த்து ரசிப்பதைத் தவிர்க்க முடியாமல் தவித்திருப்பார்கள்.

மிகச்சில ‘கமர்ஷியல்’ படங்கள் மட்டுமே அப்படிப்பட்ட ரசனைக்கு உள்ளாகும்.

ஒரு சாதாரண கதையைக் கொண்ட ‘கமர்ஷியல்’ திரைப்படத்தை பெருவெற்றி பெறச் செய்ய, பல காரணங்கள் தேவைப்படும். அந்தக் காரணங்களில் பல ‘வேலையில்லா பட்டதாரி’யில் காணக் கிடைக்கும்.

எத்தனை ஆண்டுகளானாலும் அந்த காட்சியனுபவத்தை ரசிகர்கள் பெறுவார்கள் என்ற உத்தரவாதத்தை ஒவ்வொரு முறை காணும்போதும் தருவதே ‘வேலையில்லா பட்ட்தாரி’யின் உண்மையான வெற்றி!

– உதய் பாடகலிங்கம்

Velaiyilla Pattathari vip movie danush amala paul vivek cell murugan saranya samuthrakani director velraj வேலையில்லா பட்டதாரி விஐபி தனுஷ் அமலா பால் விவேக் செல்முருகன் சரண்யா பொன்வண்ணன் சமுத்திரகனி இயக்குநர் வேல்ராஜ்  10 Years Of VIP

#Velaiyilla_Pattathari #vip_movie #danush #amala_paul #vivek #cell_murugan #saranya #samuthrakani #director_velraj #வேலையில்லா_பட்டதாரி #விஐபி #தனுஷ் #அமலா_பால் #விவேக் #செல்முருகன் #சரண்யா_பொன்வண்ணன் #சமுத்திரகனி #இயக்குநர்_வேல்ராஜ் #Velaiilla_Pattadhari #Dhanush #10Years_Of_VIP @dhanushkraja

You might also like