இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த ‘சுயம்வரம்’!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாயகர்கள், நாயகிகள் ஒரு திரைப்படத்தில் இணைவது குதிரைக்கொம்பாக இருந்துவரும் சூழலில், இருபத்து நான்கு மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் படமொன்றில் 14 நாயகர்கள், 12 நாயகிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நகைச்சுவை, குணசித்திர, வில்லன் நடிகர்கள் நடித்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் ஆச்சர்யமளிப்பதாகவே அமையும்.

1999ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று ‘சுயம்வரம்’ தியேட்டர்களில் வெளியானது. இன்றோடு இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன.

சுயம்வர நிகழ்ச்சி!

‘சுயம்வரம்’ படத்தின் கதை என்ன?

குசேலன் (விஜயகுமார்) எனும் செல்வந்தர், மனைவி சுசீலா (மஞ்சுளா) மற்றும் 3 மகன்கள், 6 மகள்கள் உடன் தனது அறுபதாம் கல்யாண நிகழ்வைக் கொண்டாடுகிறார். அந்த நிகழ்ச்சியின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, ’இன்னும் சில தினங்களே குசேலன் உயிரோடு இருப்பார்’ என்கின்றனர் மருத்துவர்கள். அதனால், உடனடியாகத் தனது மகன்களுக்கும் மகள்களுக்கும் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று குசேலன் விரும்புகிறார்.

குசேலன் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தினசரிகளில் ‘சுயம்வரம்’ விளம்பரம் வெளியாகிறது.

அதில் பங்கேற்கும் ஆண்கள், பெண்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அக்குடும்பத்தில் மாப்பிள்ளைகளாகவும் மணப்பெண்களாகவும் ஆவார்கள் என்று அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தினத்தில் அதற்கென நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கப் பலரும் முண்டியடிக்கின்றனர்.

அவர்களில் இருந்து சிறந்த வரன்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சிலரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களை நேர்காணல் செய்கின்றனர்.

அந்த நேர்காணலில் பங்கேற்று, குசேலன் குடும்பத்து சொத்துகளை அபகரிக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது. அவ்வாறு எந்தத் தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்று போலீசாரின் உதவியோடு, அக்குடும்பத்துக்கு வேண்டிய சிலர் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துகின்றனர்.

அதையும் மீறிச் சில தவறான நபர்கள் மணமகள்களாக, மணமகன்களாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். குசேலனின் மகன்கள், மகள்களில் சிலர் காதல் செய்ய, அந்த இணைகள் தேர்ந்தெடுக்கப்படாமல் விடுபடுவதும் நிகழ்கிறது.

இறுதியில் என்னவானது? சரியான வரன்கள் குசேலன் குடும்பத்தினருக்குக் கிடைத்தார்களா என்பதைச் சொல்வதோடு இப்படம் முடிவடைகிறது.

இந்தப் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டுமே குசேலன் குடும்பத்தினரை ஒரே இடத்தில் காட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கும். மற்றபடி, வெவ்வேறு ஜோடிகளின் தனிப்பட்ட சந்திப்புகளே திரைக்கதையை நிறைத்திருக்கும்.

இப்படத்தை 24 மணி நேரத்தில் உருவாக்குவதற்கு ஏற்ப, ஒட்டுமொத்தத் திரைக்கதையையும் சரியான முறையில் வடிவமைத்த பெருமை இயக்குனர் சிராஜையே சேரும்.

சில புள்ளிவிவரங்கள்!

1999ஆம் ஆண்டு, ஏப்ரல் 5ஆம் தேதியன்று வடபழனி ஏவிஎம் ஸ்டூடியொவில் உள்ள ஆறாவது தளத்தில் காலை ஏழு மணியளவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அடுத்த நாள் காலை 6.58 மணியளவில் படப்பிடிப்பு நிறைவுற்றது.

14 இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள், 4 படத்தொகுப்பாளர்கள், 4 இசையமைப்பாளர்கள், 19 இணை இயக்குனர்கள், 45 உதவி இயக்குனர்கள், 36 உதவி ஒளிப்பதிவாளர்கள் இதில் பணியாற்றினர்.

கலை இயக்குனர் ஜிகே இப்படத்திற்காக 21 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த செட்களை வடிவமைத்திருந்தார்.

படக்குழுவினர் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதைக் கண்காணிக்க, கின்னஸ் சாதனைப் புத்தகம் மற்றும் லிம்கா சாதனைப் புத்தக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் இப்படப்பிடிப்பில் பங்கேற்றனர். படக்குழு செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவர்களும் பயணித்தனர்.

இயக்குனர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நாயகர், நாயகி, இதர கலைஞர்களைக் கொண்டு காட்சிகளைப் படமாக்கும் வகையில் 11 பகுதிகளாகத் திரைக்கதை வசனம் பிரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இது தவிர பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் வேறு படத்தில் உண்டு.

அதிலும் பிரபுதேவா, ரோஜா ஆடும் ‘சிவ சிவ சங்கரா’ பாடல் மொத்தத்தையும் மிகச்சில ஷாட்களில் படமெடுத்ததாக, ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம்.

இது போக ‘மார்கழி மாசத்து’ பாடலில் இப்படத்தில் நடித்த நாயகர்கள், நாயகிகளில் பெரும்பாலானோர் ஆடியிருப்பார்கள்.

எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, வித்யாசாகர், தேவா இசையமைத்த பாடல்களுக்கு மு.மேத்தா, பழனிபாரதி பொன்னியின் செல்வன், இலக்கியன் ஆகியோர் பாடல் வரிகள் இயற்றினர். இப்படத்தைத் தயாரித்த கிரிதாரிலால் நாக்பால் இதன் கதையை எழுதியிருந்தார்.

‘சுயம்வரம்’ படத்தில் சத்யராஜ், கார்த்திக், பிரபு, அர்ஜுன் போன்றவர்கள் நடித்தாலும், முன்னணியில் இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களின் பங்களிப்பு இதில் இடம்பெறவில்லை.

அதேபோல சிம்ரன், தேவயானி, மீனா போன்ற முன்னணி நடிகைகள் கூட இதில் இடம்பெறும் வாய்ப்பைத் தவிர்த்ததாகச் செய்திகள் அப்போது வெளியாகின.

இந்தப் படம் வெளிவந்தபோது, தொலைக்காட்சிகளில் இப்படம் தயாரான விதம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. வெறுமனே தினசரிகள், பத்திரிகைகளில் மட்டும் ’24 மணி நேரத்தில் படம்பிடிக்கப்பட்ட திரைப்படம்’ என்ற வாசகங்களுடன் விளம்பரங்கள் வெளிவந்தன.

தயாரிப்பாளர் கிரிதாரிலால் இந்தச் சாதனை படத்தை எடுக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஒரு கனவாகத் தனக்குள் அடக்கிக் கொண்டிருந்ததோ, அதனைச் செயல்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒருநாள் முழுவதும் உழைத்ததோ, ரசிகர்களுக்கு முழுமையாகத் தெரிய வரவில்லை.

இன்றைய காலகட்ட்த்தில் இருப்பது போன்று சமூக ஊடகங்களின் பெருக்கமோ, ‘மேக்கிங் வீடியோக்கள்’ ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தும் தாக்கமோ அன்று இல்லை. அந்த விஷயங்கள் நிகழ்ந்திருந்தால், ‘சுயம்வரம்’ படம் அடைந்திருக்கும் உயரமே வேறு.

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ‘அப்பு’ வேடத்தில் கமல் எப்படி நடித்தார் என்பதற்கு இன்றுவரை எப்படி அதிகாரப்பூர்வ விளக்கம் வெளிவராமல் இருக்கிறதோ, அதேபோன்று ‘சுயம்வரம்’ உருவாக்கத்தில் இருந்த சவால்களை முறியடித்து சாதனையைச் செய்தது குறித்து அப்படக்குழுவினர் பெரிதாகச் சிலாகித்துப் பேசவில்லை.

‘சினிமாவுக்குள் சினிமா’ எனும் வகையில் சினிமா உருவாக்கம் குறித்த தகவல்கள் திரைக்கதையில் இடம்பெறுவது சகஜம் என்றாகியிருக்கிற இன்றைய சூழலில், ‘சுயம்வரம்’ சம்பந்தப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வது அத்துறையில் கோலோச்ச விரும்புபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதனைச் சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

‘என்னெப் பெத்த ராசா’, ‘தங்கத்தின் தங்கம்’ படங்களை இயக்கிய சிராஜ் போன்றவர்களின் அனுபவங்கள் வெளியாகும்போது நிச்சயம் கவனிப்பைப் பெறும்.

‘மேட்ரிமோனி’ விளம்பரங்கள் பெருகத்தொடங்கிய காலகட்டத்தில் ‘சுயம்வரம்’ எனும் அரதப்பழசான விஷயமொன்றைச் சொன்னது மட்டுமே இப்படத்தில் இருக்கும் மிகப்பெரிய மைனஸ். ஆனால், அது மட்டுமே அன்றைய சூழலில் இப்படம் மீதான கவன ஈர்ப்பைக் குலைத்தது.

இன்றோ, அதே படத்தைக் காணும்போது சுவாரஸ்யமானதொரு அனுபவம் நமக்குக் கிடைக்கிறது. 25 ஆண்டுகள் கடந்தபிறகும் அது வாய்ப்பது இன்னொரு சாதனை அல்லவா?!

– உதய் பாடகலிங்கம்

You might also like