திரைத் தெறிப்புகள் – 4:
****
“சிரித்து வாழ வேண்டும் – பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் – பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே”.
இப்படியொரு ரத்தினச் சுருக்கமான வாழ்வியல் நெறியை வெகு அழகாக, சிறு குழந்தைக்கும் புரியக்கூடிய எளிமையான மொழியில் எழுதி இருப்பவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவருடைய பல படங்களுக்கு பாடல் எழுதி இருப்பவரான புலமைப் பித்தன்.
1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் இவை. இதில், “உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழந்திடாதே” என்கின்ற வரிகளைவிட உழைப்பின் மகத்துவத்தை வேறு விதமாகச் சொல்லிவிட முடியாது.
பிறரைச் சார்ந்து இருக்காமல் உன்னுடைய உழைப்பில் நீ வாழப் பழகு என்பதையும் பிறர் உன்னைப் பார்த்து கேவலப்படுத்திச் சிரிக்கும் வகையில் நீ நடந்துக்கொள்ளாதே என்பதையும் திருக்குறள் வரிகளைப் போல திரைப்பாடல்களுக்கிடையில் வாழும் நெறியைப் பற்றி புலமைப் பித்தன் பாடலை இயற்றி அதை தன்னுடைய வளமான குரலில் டி.எம். சௌந்தராஜன் பாடுவதை இப்பொழுதும் கேட்டுப் பாருங்கள் காது வழியாக உற்சாகம் உள்ளே புகுந்த மாதிரி இருக்கும்.