கலைஞரின் மெய்ப்பட்ட கனவு – சமத்துவபுரம்!

- மணா

கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் சமூகநீதி சார்ந்த பல திட்டங்களையும், பொருளாதாரம் சார்ந்த பல திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறார் என்றாலும், நேரடியாக உணர்ந்த சில அனுபவங்கள் மட்டும் இங்கே:

தான் ஆட்சிக்கு வந்தபோது அவர் அமலுக்குக் கொண்டு வந்த கண்ணொளி வழங்கும் திட்டமும் பிச்சைக்கார‍ர் மறுவாழ்வுத் திட்டமும் சிலரது விமர்சனத்திற்கு உள்ளானாலும், அவை முக்கியமானவை.

பின்னாளில் பிரபலமான அரவிந்த் கண் மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர்களை, அப்போதே தான் அமல்படுத்திய கண்ணொளித் திட்டத்தில் பங்கேற்க வைத்திருந்தார். பிச்சைக்கார‍ர் மறுவழாவுத் திட்டம் குறித்த வசனத்தை ‘பராசக்தி’ படத்திலேயே அவர் எழுதியிருக்கிறார்.

பிறகு அவர் கவனப்படுத்திய திட்டங்களில் ஒன்று, பெரியாரின் பெயரில் அமைந்த சமத்துவபுரம்.

சாதியின் பெயரால் பிறப்பு முதல் இறப்பு வரை சாதீயத்தால் பிரிக்கப்பட்டுக் கிடக்கிற சமூக‍க் கட்டமைப்பில் சில முக்கியச் சந்தர்ப்பங்களில் சாதி பேதமற்று ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சமபந்திக்கே இங்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது.

பள்ளிகளிலேயே அப்போது சாதியப் பாகுபாடு எந்த அளவுக்குத் தீவிரமாக இருந்திருக்கிறது என்பதற்கு 1924-ல் சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யர் நடத்தி வந்த பார‍த்வாஜ் ஆசிரமத்தில் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமியின் மகன் படித்தபோது,

தனிச்சாப்பாடு, குடிக்கத் தனிப் பானை இருந்த பாகுபாட்டைத் தனது தந்தையிடம் எடுத்துப் போக, அவர் அப்போதைய காங்கிரஸ் காரியதரிசியாக இருந்த பெரியாரிடம் எடுத்துக் கொண்டு போனதும் கொந்தளித்துவிட்டார் அப்போது ராஜாஜி சொன்னார், ‘’தனிப்பந்தி முறை எல்லாம் நடைமுறையில் உள்ளது தான்’’

இருந்தும் நிலைமை தீவிரமாகி வ.வே.சு. அய்யர் அவர் நடத்தி வந்த ஆசிரமக் குருகுலப் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

பால்ய வயதில் கல்வியில் துவங்கி சாதிய ரீதியாக மயானம் பிரிக்கப்பட்ட நிலையில் ‘சமத்துவபுரம்’ என்ற கருத்தாக்கதில் ‘எல்லோரும் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று சமத்துவபுரத்திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர்.

‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பதற்கான செயல்முறைத்திட்டமான முதல் சமத்துவபுரம் மதுரை மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் 1997 ல் உருவாக்கப்பட்டபோது கலைஞர் அப்போது சொன்னார்.

‘’பெரியாரின் தொண்டராக சமத்துவபுரத்தை உருவாக்கியிருக்கிறேன்’’

தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், இதர சமூகத்தினர் அனைவரும் ஒரே வளாகத்தின் கீழ் ஒரே வளாகத்தின் கீழ் வசிப்பதற்கான ஏற்பாடு நடந்தது.

வீடு, சாலை, குடிநீர், கல்வி, பொது மயானம் என்று சமத்துவ நோக்கில் எல்லாமே ஒரே வளாகத்தில். மதுரை துவங்கி தமிழ்நாட்டில் அவரால் பல மாவட்டங்களில் அப்போது உருவாக்கப்பட்ட சமத்துவபுரங்கள் மட்டும் 237.

உள்ளாட்சி அமைப்புகளில் கூட தாழ்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சமூகத்தினரை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் பொறுப்பேற்க விடாமல் சில கிராமங்களில் சாதிய மோதல்கள் நடந்த நிலையில் தான் சமத்துவபுரத்தைத் துணிந்து கொண்டு வந்து செயல்படுத்தினார் கலைஞர்.

அந்தச் சமயத்தில் கலைஞரைப் பேட்டி எடுப்பதற்காகச் சென்றபோது சமத்துவபுரம் பற்றிப் பேச்சு வந்தபோது உணர்ச்சிகரமாகப் பேசினார் கலைஞர்.

‘’ சிலர் எதிர்த்தாலும் இதைச் செய்து தான் ஆகணும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற நாம செய்ய வேண்டாமா?’’ – பேச்சில் வேகம் தெரிந்தது.

பேச்சிற்கிடையே ‘’சமத்துவபுரம் பற்றி ஒரே விஷயம் சொல்லலாமா?’’ – என்று கேட்டேன்.

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க’’ என்றார் புன்சிரிப்புடன்.

“தைப் பொங்கல் திருநாளைச் சாதி, மதப் பேதம் இல்லாமக் கொண்டாடுற மாதிரி – சமத்துவபுரம் முதலில் துவக்கப்பட்ட நாளை சமத்துவ நாளா அறிவித்து அன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள எல்லாச் சமத்துவபுரங்களிலும் கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ உணர்வை வலுப்படுத்துற விழாவா நடத்தினால், இனிவரும் ஆண்டுகளிலும் சமத்துவநாளைத் தொடர்ந்து கொண்டாடுற மாதிரி இருக்குமே’’ என்று சொன்னதும் இன்னும் உற்சாகமானார் கலைஞர்.

“நல்ல கருத்துத் தான் சொல்லியிருக்கீங்க. அப்படி நடத்தினா நல்லாத் தான் இருக்கும். ஆனா இதை முன்னாடியே என்கிட்டே நீங்க சொல்லியிருக்கலாமே. ஆட்சி முடியற நேரத்தில் வந்துசொல்லியிருக்கீங்க.. பார்ப்போம்’’

அவர் சொன்னபோது காட்டிய முகபாவமும், உற்சாகமும் தற்போதும் நினைவில்.

2022-ல் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொழுவாரி ஊராட்சியில் இரண்டு கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நூறு வீடுகளுடன் கூடிய பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்துத் திறக்கப்பட்டபோது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார்.

“பெரியார் கண்ட கனவுப்படி தமிழ்நாடு எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கான ஓர் உதாரணம் இந்தச் சமத்துவ புரங்கள்’’ என்று சொன்னதோடு “தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்’’ என்றிருக்கிறார்.

“நீர் உயர வரப்புயரும்’’ என்கிற மாதிரி கலைஞரால் துவக்கப்பட்டு, அடுத்து வந்த ஆட்சியில் பாராமுகமாக விடப்பட்ட சமத்துவபுரத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இன்னும் கோவில், பொதுக் குடிநீர், கல்விக் கூடங்கள் என்று பல இடங்களில் சாதியப் பாகுபாடுகள் நீடிக்கும் நிலையில் – சமத்துவத்தை இயல்பான ஒன்றாக மாற்றும் முயற்சியான சமத்துவபுரங்கள் தழைக்க வேண்டும்.

பெரியார் துவங்கி கலைஞர் முன்னெடுத்த கனவுத் திட்டம் தொடர்ந்து மெய்ப்பட வேண்டும்.

You might also like