7G – ஈர்ப்பைத் தருகிறதா சோனியா அகர்வால் நடிப்பு?!

செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும்புகழைச் சம்பாதித்த திரைப்படம். அதில் நடித்தபிறகே சோனியா அகர்வாலின் நடிப்பு திறமை பெரிதாகச் சிலாகிக்கப்பட்டது. தற்போது அவர் அரிதாகச் சில படங்களில் நடித்தாலும் கூட, அந்த ஒரு படம் தந்த அடையாளம் இன்றுவரை மாறாததாக உள்ளது.

அதனாலோ என்னவோ, சோனியா அகர்வால் நடிப்பில் ‘7ஜி’ என்ற திரைப்படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியானபிறகு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. செல்வராகவன் தற்போது இயக்கிவரும் ‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகத்தில் சோனியா இல்லை என்ற தகவல் அதன் வீரியத்தை இரட்டிப்பாக்கியது. தற்போது அப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ரோஷன் பஷீர், ஸ்ம்ருதி வெங்கட், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹாரூண் இயக்கியுள்ளார்.

சரி, ‘7ஜி’ எப்படி இருக்கிறது?

ஒரு வீட்டின் கதை!

ஒரு குடியிருப்பு. அங்கு ஏழாவது மாடியில் இருக்கும் ‘7ஜி’யை விலைக்கு வாங்கி புதிதாகக் குடி வருகின்றனர் ராஜிவ் (ரோஷன் மேத்யூ) – வர்ஷா (ஸ்மிருதி வெங்கட்) தம்பதியர். அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன்.

வீட்டுக்குக் குடி வந்தவுடன் அவர்கள் தங்களது தோழர், தோழியர்க்கு விருந்து தருகின்றனர். நிஷா (சினேகா குப்தா) என்ற பெண்ணும் அதில் பங்கேற்கிறார்.

ராஜிவ்வின் முன்னாள் காதலி நிஷா. தற்போது ராஜிவ் தன் மனைவி மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்வது அவருக்கு எரிச்சலைத் தருகிறது.

அதனால், பில்லிசூனியம் வழியே ராஜிவ்வை தன்வசப்படுத்த அவர் எண்ணுகிறார். விருந்தில் அனைவரும் இருக்க, ராஜிவ் மகனைக் கொண்டு சில விஷயங்களைச் சோதித்துப் பார்க்கிறார்.

அந்த சிறுவன் அமைதியாக இருப்பதைக் கண்டு, ‘இனி தான் நினைத்தது நடக்கும்’ என்று கொக்கரிக்கிறார் நிஷா. அந்த நேரத்தில் அங்கு வரும் வர்ஷாவுக்கு, நிஷாவின் செயல் வினோதமானதாகத் தெரிகிறது.

சில நாட்கள் கழித்து, தனக்கு புரோமோஷன் கிடைத்திருப்பதாகவும், பயிற்சிக்காகச் சில நாட்கள் பெங்களூரு செல்ல வேண்டுமெனவும் வர்ஷாவிடம் சொல்கிறார் ராஜிவ். அதனால், அவரை வழியனுப்பிவிட்டு வீட்டில் மகனுடன் தனியாக இருக்கிறார் வர்ஷா.

அப்போது, வினோதமாகச் சில நிகழ்வுகள் நடக்கின்றன. தனது மகன் யாரோ ஒருவரோடு பேசுவதாக உணர்கிறார் வர்ஷா. விற்பனையாளர் ஒருவர் வந்தபோது, யாரோ ஒரு பெண் தனக்குப் பதிலாகப் பொருள் வாங்கியதை அறிகிறார். இரவில் வினோதமாகச் சத்தம் கேட்பதும் உருவம் தோன்றுவதும் அவரைப் பயத்தில் ஆழ்த்துகிறது.

கடன் வாங்கி வீட்டை சொந்தமாக்கிய ராஜிவ், தான் சொல்லும் தகவலால் திகிலடைந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார் வர்ஷா. தானே அதனைச் சமாளிப்பது என்று முடிவு செய்கிறார்.

ஒருகட்டத்தில், ஒரு அமானுஷ்ய சக்தி அந்த வீட்டில் இருப்பதை அறிகிறார் வர்ஷா. அதனை நேருக்கு நேராகச் சந்திக்க முடிவெடுக்கிறார். ’வா’ என்றழைக்கிறார்.

அப்போது, வர்ஷாவின் கண் முன்னே மஞ்சுளா (சோனியா அகர்வால்) என்ற பெண்ணும் அவரது மகனும் தோன்றுகின்றனர். அவர்கள், அதற்கு முன்பாக அந்த வீட்டில் குடியிருந்தவர்கள். அகால மரணத்தை அடைந்து ஆன்மதிருப்தி இல்லாமல் அங்கிருக்கின்றனர்.

ஏன் அவர்கள் அந்த வீட்டில் பேயாக இருக்கின்றனர்? எதற்காக வர்ஷாவின் குடும்பத்தைப் பழி வாங்க முனைகின்றனர்? அதுபோன்ற சில கேள்விகளுக்கான பதிலாக அமைகிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.

படத்தின் தலைப்பும் சரி, திரைக்கதையின் தொடக்கத்தில் வரும் காட்சிகளும் சரி, இது ஒரு வீட்டின் கதை என்பதைச் சொல்லிவிடுகிறது. ஆனால், நாம் எதிர்பார்ப்பது போலவே திரைக்கதை அமைந்திருப்பதும், காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதும் நம்மை அயர்வுற வைக்கிறது.

மீண்டும் சோனியா அகர்வால்!

மலையாள நடிகர் ரோஷன் பஷீர் இதில் நாயகனாக வருகிறார். சில படங்களில் நாயகி வெறுமனே வந்து போவது போல, இதில் அவரது பாத்திரம் அமைந்துள்ளது.

ஸ்மிருதி வெங்கட் பெரும்பாலான காட்சிகளில் வருகிறார். உடலும் முகமும் பூரிப்புடன் பெருத்திருப்பதைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார். பயத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு ஈர்க்கிறது.

சோனியா அகர்வால் இதில் இன்னொரு நாயகியாக வருகிறார். மீண்டும் அவர் திரையில் தோன்றுவது நல்லனுபவத்தைத் தருகிறது. அவர் வரும் காட்சிகள் எளிதாக ஈர்க்கும் விதத்தில் இருந்தாலும், அவற்றில் புதுமை இல்லாதது ஒரு குறை.

சித்தார்த் விபின் தொடக்கத்தில் ஒரு காட்சியில் வருகிறார். இரண்டாம் பாதியில் பல காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார். இந்தக் கதையில் அவரே வில்லன். ஆனால், அவர் திரையில் காட்டும் வில்லத்தனம் நம்மை மிரட்சியடைய வைப்பதாக இல்லை.

சினேகா குப்தா இதில் வில்லி போன்று தோன்றியிருக்கிறார். ஆனால், பின்பாதியில் அவரது இருப்பை ‘காமெடி’யாக மாற்றியிருக்கிறார் இயக்குனர்.

தன் பங்குக்கு ரோஷன் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு அவர் ஆடியிருக்கிறார். பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருந்தால், அப்பாடல் ‘மிட்நைட் மசாலா’வில் இடம்பெற்றிருக்கும். இப்போதைக்கு சில நாட்கள் ஃபேஸ்புக்கிலும் யூடியூப் ஷார்ட்ஸிலும் அது பகிரப்படும். அவ்வளவுதான்!

இவர்கள் தவிர்த்து சுப்பிரமணியம் சிவா, கல்கி ராஜா உட்பட சுமார் ஒரு டஜன் பேர் படத்தில் வந்து போயிருக்கின்றனர். அவர்களையும் இயக்குனர் சரிவரப் பயன்படுத்தவில்லை.

சித்தார்த் விபின் இதற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையில் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறார்.

கண்ணாவின் ஒளிப்பதிவு முன்பாதியில் நம்மை மிரட்சியில் ஆழ்த்த முனைந்திருக்கிறது. படத்தொகுப்பாளர் பிஜு டான்பாஸ்கோ தெளிவாகத் திரையில் ஒரு கதையைச் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனால், சில காட்சிகளைச் சேர்க்க மறந்திருக்கிறார்.

ஹாரூண் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு வீட்டை மையமாக வைத்து பேய்க்கதையைச் சொல்ல விரும்பியிருக்கிறார். அதில் புதுமை இல்லாத காரணத்தால், இப்படத்தில் க்ளிஷேக்கள் அதிகம். அதனைச் சரி செய்திருந்தால் பார்க்க சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

இந்தப் படத்தில் ஸ்மிருதியின் மகனாக நடித்தவரைச் சரிவரப் பயன்படுத்தவில்லை. போலவே செக்யூரிட்டியாக வரும் கல்கி ராஜா, பக்கத்து வீட்டுக்காரராக வரும் சுப்பிரமணிய சிவா, அவரது மனைவியாக நடித்தவரையும் கொண்டு திரைக்கதையில் மேலும் பல திருப்பங்களைப் புகுத்தத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

அவற்றைச் செய்யத் தவறியதால், இரண்டாம் பாதியில் சோனியா, ஸ்மிருதி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

’பழிக்குப் பழி’ என்பதையே பெரும்பாலான ஹாரர் படங்கள் இதுவரை முன்வைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட அனுபவங்களையே பார்த்துப் பழகியதால், ‘7ஜி’யில் புதிதாக ஏதும் காணக் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் ஒரு சீரியல் பார்ப்பது போல, பழைய திரைப்படமொன்றை டிவியில் பார்த்து மகிழ்வது போல ஏதோ ஒன்றைக் காணலாமே என்பவர்களுக்கு இப்படம் ஆசுவாசம் தரலாம்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like