பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டைப் பார்வையிட நேற்று மாலை 7 மணியளவில் காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கிய அவர், நண்பா்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் நடந்து சென்றுள்ளார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 போ் கொண்ட கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. உணவு டெலிவரி செய்யும் ஆடையில் வந்த அந்த மர்ம கும்பல் இந்த படுகொலையை செய்துள்ளனர். இதைப் பார்த்த அவரது நண்பா்கள் தடுக்க முயன்றனா்.
படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் கீழே விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை:
இந்த படுகொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளைக் கண்டறிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டது.
குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை தரும் வரை அவரது உடலைப் பெற மாட்டோம் என, பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இறுதி ஊர்வலம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அவரது கட்சியினர் அனுமதி கேட்டுள்ளனர்.
தலைவர்கள் கண்டனம்:
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாளை அவர் சென்னை வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.