கீரவாணி தந்த தமிழ் கீதங்கள்!

உலகமே உற்றுநோக்கும் வகையில் செயல்படும் சில இந்தியக் கலைஞர்களுக்கு உள்ளூரில் சரியான மதிப்பும் கௌரவமும் கிட்டாமல் போகும். ஒரு நாடோடி போல உலகை அவர்கள் வலம் வருவது கூட அதற்கொரு காரணமாக இருக்கலாம்.

அதேநேரத்தில், உள்ளூரில் இருந்துகொண்டே உலகின் கவனத்தைக் கவர்பவர்களுக்கு அந்தக் கவலை ஒருபோதும் இல்லை. அப்படியொரு கலைஞராகத் திரையுலகில் வலம் வருபவர், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி.

கொடூரி மரகதமணி கீரவாணி என்பது இவரது முழுப்பெயர். தமிழ் திரையிசை ரசிகர்களுக்கு, மரகதமணி என்று சொன்னால் இவரது பிரபல்யம் நன்றாகத் தெரியவரும்.

2021-ல் வெளியான ‘ஆர் ஆர் ஆர்’ படத்திற்காக இவர் தந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

அதன்பிறகு உலகம் முழுக்க விரும்பப்படுகிற இசைக்கலைஞராக உருவெடுத்திருக்கிறார் கீரவாணி.

முப்பதாண்டுகளுக்கு முன் அவர் இசையமைத்த பாடல்கள் கூட இன்றைய தலைமுறையினரால் புதிதாகக் கேட்டு ரசிப்புக்கு உள்ளாகின்றன. அதுவே, காலம் கடந்தும் அவரது படைப்புத்திறன் கொண்டாடப்படும் வகையில் உள்ளதை வெளிக்காட்டுகிறது.

ஏற்றமும் இறக்கமும்..!

தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த சக்ரவர்த்தி மற்றும் மலையாள இசையமைப்பாளர் சி.ராஜாமணியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கீரவாணி. அந்த அனுபவங்களுடன் தொண்ணூறுகளில் இசையமைப்பாளராக அவர் உருவெடுத்தார்.

கீரவாணி முதலில் இசையமைத்த படம் ‘கல்கி’. அது வெளிவரவே இல்லை. பிறகு மௌலி இயக்கிய ‘மனசு மமதா’ மூலமாக அவரது திரை அறிமுகம் நிகழ்ந்தது.

ராம்கோபால் வர்மாவின் ‘ஷணா ஷணம்’, மௌலியின் ‘அஸ்வினி’, கே.ராகவேந்திர ராவின் ‘கர்ண மொகுடு’, கோதண்டராம ரெட்டியின் ‘பிரசிடெண்ட் காரி பெல்லம்’, ரவிராஜா பினிசெட்டியின் ‘கொண்டபல்லி ராஜா’ படங்கள் மூலமாக அவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

மகேஷ் பட்டின் ‘கிரிமினல்’ படப் பாடல்கள் கீரவாணியை இந்தி ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு எம்.எம்.கீரவாணி, மரகதமணி, எம்.எம்.க்ரீம் என்ற பெயர்களில், அவர் தெலுங்கு, தமிழ், இந்தி ரசிகர்களை மகிழ்விக்கத் தொடங்கினார்.

தொண்ணூறுகளிலும், 2000-வது ஆண்டுக்குப் பிறகும் தொடர்ச்சியாக ஹிட் ஆல்பங்கள் தந்துவந்த கீரவாணி, 2005-க்குப் பிறகு சரிவைச் சந்தித்தார்.

படங்களின் எண்ணிக்கை குறைந்தது. வெற்றி சதவிகிதமும் சரிந்தது. ஒருகட்டத்தில் தன் மனதுக்குப் பிடித்தமான திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றுவது என்ற முடிவுக்கு அவர் வந்தார். அது, அவர் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்தது.

அந்த காலகட்டத்தில், தனது உறவினரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘விக்ரமார்குடு’, ‘யமதொங்கா’, ‘மகதீரா’, ‘மரியாதை ராமண்ணா’, ‘ஈகா’ என்று அவர் இசையமைத்த படங்கள் பெரும்புகழைத் தந்தன.

2015-ல் வெளியான ‘பாகுபலி பாகம் 1’ அதில் மைல்கல்லாக அமைந்தது. பிறகு ‘ஆர் ஆர் ஆர்’ மூலமாகச் சர்வதேச ரசிகர்களின் கவனத்தைக் குவித்தது தனிக்கதை.

இப்படி ஒரு இசைக்குறிப்பு போலவே ஏற்றமும் இறக்கமும் ஒருசேர நிரம்பியது கீரவாணியின் திரை வாழ்வு.

தமிழில் ‘மரகத’ பாடல்கள்!

1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அழகன்’ படம் வழியே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் கீரவாணி. அந்தப் படத்தில் அவரது பெயர் ‘மரகதமணி’ என்றே இடம்பெற்றது.

‘துடிக்கிறதே நெஞ்சம்’, ‘தத்தித்தோம்’, ‘சங்கீத ஸ்வரங்கள்’, ‘ஜாதிமல்லி பூச்சரமே’ போன்ற பாடல்கள் கண்களை மூடிக்கொண்டே ரசிக்க வைக்க, ‘கோழி கூவும் நேரமாச்சு’ ரசிகர்களிடத்தில் துள்ளலை உண்டாக்கியது.

பிறகு வசந்த் இயக்கிய ‘நீ பாதி நான் பாதி’யில் ‘நிவேதா’ பாடலை என்றென்றைக்குமானதாகத் தந்தார் கீரவாணி. கூடவே ‘காலம் உள்ளவரை நீ பாதி’, ‘யாரைக் கேட்டு ஈரக்காற்று பூவைக் கிள்ளும்’ , ’புதிய பூக்களைப் பார்த்து’, ‘தேவன் தீர்ப்பென்றும் புதிதானது’ பாடல்களையும் கொடுத்தார்.

தொடர்ந்து வி.சி.குகநாதனின் ‘பாட்டொன்று கேட்டேன்’, சசி மோகனின் ‘சிவந்த மலர்’, அர்ஜுன் இயக்கிய ‘சேவகன்’ மற்றும் ‘பிரதாப்’ படங்களில் தனது பங்களிப்பைத் தந்தார் கீரவாணி.

இந்தப் படங்களில் ’யார் எந்தன் ராகம் அறிந்தவன்’, ‘எதுவரை போகும் ஆகாயம்’, ‘நன்றி சொல்லிப் பாடுவேன்’, ‘என் கண்ணனுக்கு காதல் வந்ததும்’ பாடல்கள் வசீகரித்தன.

‘வானமே எல்லை’ படத்தில் வரும் ‘கம்பங்காடு’ பாடலும், ‘ஜாதிமல்லி’யில் இடம்பெற்ற ‘கம்பன் எங்கே போனான்’ பாடலும் நம்மை ஈர்த்தது.

தான் இசையமைக்க வந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் தமிழ் படங்களுக்கு இசையமைத்த கீரவாணி, பிறகு பெரிதாக இடைவெளி எடுத்துக் கொண்டார்.

1998-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அர்ஜுன், சிம்ரன் நடித்த ‘கொண்டாட்டம்’ படமே அவரை மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்த்து.

அதில் அவர் தந்த ‘மை விழி உன் இமைகளிலே’, ‘மின்னலடிக்கும் வெண்மை போகுது’, ‘உன்னோடுதான் கனாவிலே’ பாடல்கள் இன்றும் நம் மனதில் ரீங்காரம் எழுப்பவல்லவை.

பிறகு சிபிராஜ் அறிமுகமான ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ படத்தில் ‘விழாமலே இருக்க முடியுமா’ பாடலை கீரவாணி தந்திருந்தாலும் கூட, அது போன்ற பல பாடல்கள் தெலுங்கில் இருந்தே தமிழுக்குப் பெயர்க்கப்பட்டவையாக இருந்தன.

நீண்டகாலத்திற்குப் பிறகு பி.வாசு இயக்கத்தில் ராகவேந்திரா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்த ‘சந்திரமுகி2’வில் இசையமைத்திருந்தார் கீரவாணி.

தமிழில் கீரவாணி நேரடியாக இசையமைத்த படங்கள் குறைவென்றபோதும், தெலுங்கில் இருந்து ‘டப்’ செய்யப்பட்ட படங்களின் பாடல்களைக் கூட அவரது இனிமையான மெட்டுகளுக்காகத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மலையாளத்தில் பரதன் இயக்கத்தில் ஸ்ரீதேவி, அரவிந்த் சாமி நடித்த ‘தேவராகம்’ படப் பாடல்களும் அப்படிக் கொண்டாடப்பட்டவையே.

‘சின்னச் சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ’, ‘யா யாயா யாதவா’, ’தாழம்பூ தலை முடித்து’, ‘அழகிய கார்த்திகை தீபங்கள் ஆடும்’, ’கருவண்ண வண்டுகள்’ என்று அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் மரகதங்கள் என்றே சொல்ல வேண்டும்.

அப்படி ‘மரகதங்களாக’ பல பாடல்களைத் தந்த எம்.எம்.கீரவாணி எனும் மரகதமணிக்கு இன்று பிறந்தநாள். அறுபத்து மூன்று வயதைக் கடந்து, ரசிகர்களின் பேராதரவைப் பெறத் துடிக்கும் அவரது முயற்சியும் வேட்கையும் இனி வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும்..!

– உதய் பாடகலிங்கம்

You might also like