வடக்கும் தெற்கும் ஒன்றென உணர வேண்டும்!

திமுக எம்.பி ஆ.ராசா ஆவேசம்

18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. இந்தத் தேர்தலில் வென்ற எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காரசாரமான விவாதத்தை வைத்தார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹுவா மொய்த்ராவும் கடுமையாகப் பேசினார்.

அடுத்துப் பேசிய திமுக எம்பி ஆ.ராசாவும் மத்திய அரசைக் கடுமையாகப் பேசினார்.

அப்போது, ”குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு திமுக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வது எனது கடமையாகும். இருப்பினும், பேச்சின் உண்மைத் தன்மையையும் உள்ளடக்கத்தையும் பற்றி நான் குறிப்பிட வேண்டும்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து உள்ள அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூற்று ஆதாரமற்றதாகவும் தவறாக வழிநடத்துவதாகவும் தோன்றுகிறது. பாசிச கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கிறது. சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை மத்திய அரசு ஒடுக்கப் பார்க்கிறது.

சிறுபான்மையினரையும், இந்துக்கள் அல்லாதோரையும் புறக்கணித்து, பெரும்பான்மை அரசை உருவாக்குவதிலேயே இந்த அரசாங்கம் குறியாக இருப்பதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தனித்து ’370 இடங்களில் வெல்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர்த்து 400 இடங்களை வெல்வோம்’ என்று கூறினார். ஆனால், இப்போது 240 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தேர்தல் முடிவுகள் மக்களிடம் இருந்து ஒரு தெளிவான செய்தியை காட்டுகின்றன. தீவிர பிரசாரம் இருந்தபோதிலும், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகள் உட்பட பல இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இது அரசியல் உணர்வின் மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த மாற்றம் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது.

நமது அரசியலமைப்பையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்கும் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் வடக்கு மற்றும் தெற்கில் ஒற்றுமை அதிகரித்து வருகிறது.

சிறுபான்மையினர், பட்டியலின வகுப்பினரைக் குறிவைக்கும் செயல்கள் நமது ஜனநாயக விழுமியங்களை அச்சுறுத்துகின்றன. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் நமது அரசியலமைப்பின் லட்சியங்களைக் காட்டிக் கொடுக்கின்றன.

பிரித்தாளும் கொள்கைகளால் ஒற்றுமையை அடைய முடியாது. நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளான சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் இந்துக்கள். அரசியலமைப்பில் உள்ள சட்டத்தின்படி நான் ஒரு இந்து. ஏனென்றால், நான் ஒரு முகமதியன் அல்ல, கிறிஸ்தவனும் அல்ல, பௌத்தரும் அல்ல, பார்சியும் அல்ல. சட்டம் இதை, இந்து என்று கூறுகிறது.

இந்துக்களின் ஒருங்கிணைப்பு குறித்து நீங்கள் உண்மையிலேயே கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

மத்திய பாஜக அரசு நினைப்பதை குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். பாஜக அரசின் அனைத்துச் செயல்பாடுகளும் சர்வாதிகாரம் கொண்டவை.

நான் பெரியார், திராவிட மண்ணிலிருந்து வந்துள்ளேன். 8 முறை தேர்தல் பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.

எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திரா காந்தி தெரிவித்த மன்னிப்பை மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர். அதன்பிறகு மக்கள் அவரை மீண்டும் பிரதமராக்கினார்கள்.

மோடியைக்கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ள தயார். ஆனால், அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பதுதான் பிரச்னை. அதனால்தான், அவரை அப்படி நம்ப முடியவில்லை.

ஒவ்வொருவரும் குலத்தொழிலையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை பாஜக வலியுறுத்துகிறது. அவரவர் தந்தை செய்த வேலையையே செய்ய வேண்டும் எனப் பாஜக நினைக்கிறது.

எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர். ஆனால், நான் இன்று ராகுலுடன் மக்களவையில் இருக்கிறேன். இதற்கு காரணம் தந்தை பெரியார். உலகம் முழுவதும் தொழில் பிரிவினை இருக்கிறது.

இந்தியாவில் மட்டும்தான் தொழிலாளர் பிரிவினை இருக்கிறது. இதைத்தான் பெரியாரும் அம்பேத்கரும் சொல்கின்றனர்.

இந்தப் பிரிவினையைத்தான் இந்து மதம் என்கிற பெயரில், நீங்கள் தொடர விரும்புகிறீர்கள்.

பொதுத்துறையில் லாபம் இல்லை என எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் சாதியினருக்கும் எப்படி அரசு வேலை கிடைக்கும்?

இடஒதுக்கீட்டை மறைமுகமாக அழிக்கவே நீங்கள் இதை செய்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் உயர்சாதிகள் நடத்தும் இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்.

தமிழ்நாட்டில் அனைவரும் சமமாக வாழவும், உயர்கல்வி பெறவும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரே காரணம். எனவே திராவிட கொள்கைகள் ஏன் நாட்டுக்கு தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.

நான் எனது கட்சிக்கு நன்றி கூறுகிறேன். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இது வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிவினை இல்லை என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி” எனப் பேசினார்.

You might also like