மறுக்க முடியாத தமிழ் சினிமா வரலாறாக மாறிய ‘மாமன்னன்’!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக உருவெடுத்திருக்கும் மாரி செல்வராஜ் சாதி அரசியலை, அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை தோலுரித்து காட்டும் வகையில் கடந்தாண்டு இதே நாளில் வெளியான படம் தான் ‘மாமன்னன்’. 

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

அடிமுறை சண்டைப் பயிற்சியாளராக உதயநிதி ஸ்டாலின் நடிக்க, அவரின் தந்தையாக வடிவேலு சட்டமன்ற உறுப்பினராக நடித்திருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சாதி மோதலில் தந்தை செய்த செயல் பிடிக்காததால் அப்பா மகன் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறது.

வேறு சாதியை சேர்ந்த பகத் பாசில், தந்தையை அவமரியாதை செய்ய, மகன் உதயநிதி கொந்தளிக்கிறார். இதனால் உதயநிதி – பாசில் இடையே மோதல் ஏற்படுகிறது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பகத் பாசில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொள்வதற்காக அடுத்த சட்டமன்ற தேர்தலில் எதிரெதிராக மோதிக்கொள்கிறார்கள். யார் வெற்றிவாகை சூடினார்கள் என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தின் தலைப்புக்குரிய நாயகனாக வடிவேலு வேறுவிதமான பரிணாமத்தை வெளிக்காட்டி இருந்தார்.

அவர் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையே மறந்து போகும் அளவுக்கு கோபம், பணிவு, பேச்சு என வித்தியாசமான ஒரு நடிகராக முழு படத்தின் திரைக்கதையும் தன் தோள் மீது சுமந்து இருந்தார்.

தந்தையின் உரிமைக்காக ஆவேசம் கொள்ளும் மகனாக உதயநிதி ஸ்டாலின் இறுக்கமான முகத்துடன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் திரை பயணத்தில் இது மிக முக்கியமான படமாக அமைந்தது. யாராக இருந்தாலும் அடக்கி ஆள வேண்டும் என்ற மனோபாவம் கொண்ட வில்லத்தனமான கதாபாத்திரமாகவே உருமாறி இருந்தார் பகத் பாசில்.

ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்காக கோச்சிங் கிளாஸ் எடுக்கும் கதாபாத்திரமாக கீர்த்தி சுரேஷ் மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் வழக்கமான மேக் அப், காஸ்டியூம் என எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் நார்மல் லுக்கில் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்து இருந்தார்.

படத்தின் திரைக்கதையை உள்வாங்கி ஒவ்வொரு காட்சிகளுக்கு தேவையான உணர்வுகளை தன்னுடைய பின்னணி இசை மூலம் கடத்தி சென்று விட்டார். ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர் கதைக்களத்துக்கு உயிர் கொடுத்து இருந்தார்.

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி காதல், ‘கர்ணன்’ படம் மூலம் சாதி வேறுபாட்டை காட்சிப்படுத்திய மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ படம் மூலம் சாதி அரசியலை துணிச்சலுடன் கையாண்டுள்ளார்.

மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் வெளியானபோது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தென்மாவட்டங்களில் வெளிப்படையாகவே நிலவும் சாதிவெறி, அந்த சாதிவெறியின் கொடுங்கரங்கள் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நீண்டிருப்பது, ஒடுக்கப்பட்டவர்களின் மீது மிக நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் எல்லா இடங்களிலும் நடத்தப்படும் வன்முறை, அந்த வன்முறையை ஒடுக்கப்பட்டவர்கள் நிராதரவாக எதிர்கொள்ளும் விதம் என சமகாலத்தின் ஒரு சரித்திர சாட்சியமாக அந்தப் படம் அமைந்திருந்தது.

அதற்கடுத்த படமான கர்ணன், கொடியங்குளத்தில் நிகழ்த்தப்பட்ட காவல்துறையின் அத்துமீறலைப் பின்னணியாகக் கொண்டிருந்தது.

பரியேறும் பெருமாள் படத்தில் சாத ரீதியாக ஒடுக்கப்படும் நாயகன், அத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் பணிந்து செல்வதாகவுமே காட்டப்பட்ட நிலையில், கர்ணன் படத்தின் நாயகன் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வாளை ஏந்தியிருப்பது போலக் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ்.

மாமன்னன், முந்தைய இரண்டு படங்களில் இருந்தும் முழுமையாக மாறுபட்டு அமைந்திருந்தது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், அரசியலுக்கு வந்து கீழ் மட்டத்திலிருந்து வளர்ந்து எம்.எல்.ஏ.வாக ஆன பிறகும் இடைநிலை ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுவதும், ஒரு கட்டத்தில் மகனுடன் சேர்ந்த அவர்களை எதிர்ப்பதும்தான் இந்தப் படத்தின் கதையாக அமைந்திருந்தது.

இந்தக் கதையின் ஊடாக, தமிழ்நாட்டின் சில அரசியல் நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தில் கதாநாயகனின் சாதி என்பது வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை என்றாலும் மேற்கு மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினரான அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவராகவே நாயகன் காட்டப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பாக வெகு சில படங்களில் மட்டுமே அருந்ததியர் கதாநாயகன், கதாநாயகியாக காட்டப்பட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான படம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரைவீரன்.

அதற்குப் பிறகு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தில் கதாநாயகன் அருந்ததியராகக் காட்டப்பட்டார். இந்தப் படம், காதலில் சாதி ஏற்படுத்தும் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

– நன்றி: பிபிசி தமிழ்

You might also like