எத்தனை வலிமையானது தாயன்பு?

சிவப்பு மூக்கு ஆள்காட்டிப் பறவை (Red Wattled Lapwing) பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்.

ஏரிக்கரையிலோ குளக்கரையிலோ, தரையில் முட்டையிடும் பறவை இது. ஏரி, குளம்தான் என்றில்லை மழைநீர் தேங்கி நிற்கும் ஒரு சிறுபள்ளம் இருந்தாலும் போதும். அதன் பக்கத்தில் கூடு அமைக்க ஆள்காட்டி தயாராகிவிடும்.

ஈரமான சேற்று நிலத்தில் மாட்டின் கால்குளம்பு பதிந்த பள்ளச்சுவடு இருந்தால் போதும். அதையே ஆள்காட்டிப் பறவை கூடாக மாற்றிவிடும். சேற்றுக் கட்டிகள், கூழாங்கற்கள், சின்னச்சின்ன கிளிஞ்சல்கள், ஆட்டுப் புழுக்கைகள் இவற்றை கூட்டைச் சுற்றி அடுக்கி கூட்டை இது அழகுபடுத்தும்.

ஆள்காட்டிக் குருவியின் கூடு, நீர்நிலைக்கு மிக அருகில் இருந்தால் அந்த ஆண்டு பருவமழை குறைவாக இருக்கும் என்பதும், நீர்நிலையை விட்டு மிகவும் தள்ளி இருந்தால் பருவமழை அந்த ஆண்டு அதிகமாக விழும் என்பதும் நம்பிக்கை.

ஆள்காட்டியின் முட்டைகள் சாம்பல் பழுப்பு அல்லது மண்நிறமாக இருப்பதால் யாராவது உற்றுப் பார்த்தால் மட்டும்தான் இந்த முட்டைகள் தெரியும்.

வெட்டவெளி தரையில் ஆள்காட்டியின் கூடு இருப்பதால் மேய வரும் மாடுகள் மிதித்து முட்டைகள் உடைபடுவதுண்டு.

அதற்காக ஆள்காட்டி சலித்துக் கொள்ளாது. புதிய முட்டைகளை இந்தப் பறவை இட்டுக் கொள்ளும்.

வெய்யிலின் சூடு அதிகரித்தால் அருகில் உள்ள நீர்நிலைக்குப் போய் அடிவயிற்றை நனைத்துக் கொண்டு வந்து ஆள்காட்டிக் குருவி முட்டைகளை ஈரமாக்கும்.

மிகவும் எச்சரிக்கை நிறைந்த பறவை இது. மனிதர்களோ அல்லது விலங்குகளோ கூட்டின் அருகே வருவதைக் கண்டால், உடனே குரல் எழுப்பி ஊரைக்கூட்டும். அதனால்தான் இதன் பெயர் ஆள்காட்டிக்குருவி.

ஆபத்து நெருங்கினால் டிட் இ டூ இட், டிட் இ டூ இட் என்று குரல் எழுப்பி இதர பறவைகளையும் இது எச்சரிக்கும்.

ஆள்காட்டிக் குருவிக்கு ஆக்கணத்தான் என்ற பெயரும் இருக்கிறது. இதன் இன்னொரு பெயர் வானந்தாங்கிக் குருவி. அது என்ன வானந்தாங்கிக் குருவி?

தூங்கும்போது மல்லாந்து படுத்தபடி, கால்களை மேலே தூக்கிக் கொண்டு இந்தப்பறவை படுத்து உறங்கும்.

வானம் திடீரென கீழே விழுந்து விட்டால் அதைக் காலால் தாங்கிக் கொண்டு கூட்டையும், குஞ்சுகளையும் காப்பாற்றிவிடலாம் என்பது ஆள்காட்டிக் குருவியின் நம்பிக்கையாம்.

அதனால்தான் வானந்தாங்கிக் குருவி என இது அழைக்கப்படுகிறது.

சின்னப் பறவைதான். ஆனால், எத்தனை வலிமையான தாயன்பு? என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்.
 
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like