விஜய் 50: மலைக்க வைக்கும் பயணம்!

திரை வானில் நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள் அனைவரும் மறுக்காமல் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் உண்டு. ‘திரைப்படங்களால் கிடைக்கும் புகழும் செல்வமும் என்றும் ஒரேமாதிரியாக இருக்காது’ என்பதே அது.

அதேநேரத்தில், என்றென்றும் அவை கிடைக்கும்படியான வேட்கையையும் முயற்சியையும் மிகச்சிலர் தன்னகத்தே கொண்டிருப்பார்கள். அதன் வழியே தனக்கான இடத்தைத் திரையுலகில் உருவாக்குவார்கள். அப்படியொரு நட்சத்திரமாகத் திகழ்பவர், நடிகர் விஜய்.

1992-ம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ மூலமாக நாயகனாக அறிமுகமானவர், கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிகரம் நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இளமையிலேயே கேமிராவுக்கு முகம் காட்டிய அவர், இன்று 50வது வயதை நிறைவு செய்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொலிவும் நடிப்புத்திறனும் நாளுக்கு நாள் கூடுகிறதே தவிரக் குறையவில்லை. அது பல நடிகர்களுக்கு, நாயகர்களுக்கு, நட்சத்திரங்களுக்கு வாய்க்காத ஒரு வரம்.

கடந்த பாதை!

திரைத்துறையில் விஜய் கடந்து வந்த பாதை மிகப்பெரியது. அதில் நிறைந்திருந்த சிக்கல்கள், தடைகள் குறித்து அவரும் அவரைச் சார்ந்தவர்களும் மட்டுமே அறிவார்கள். ஆனால், அது குறித்து அவர் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததில்லை.

பல நேரங்களில் அவர் பேசாமல் மௌனித்திருப்பதே, அவரைக் குறித்த அபிப்ராயங்களுக்கும் பேதங்களுக்கும் இடமில்லாமல் செய்திருக்கிறது.

அந்த வகையில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியாக நின்றுகொண்டும், ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டும் இருப்பதென்பது அவரது பாணியாக இன்றுவரை இருந்து வருகிறது.

இதனைத் திட்டமிட்டு நிகழ்த்த முடியாது. அதுவே அவரது இயல்பு. அதனால்தான், கேமிரா ‘ஆன்’ ஆனவுடன் அவர் காட்டும் வேறு முகங்கள் அப்படத்தின் இயக்குனர் முதல் அத்தளத்தில் இருக்கும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வந்திருக்கிறது.

அந்த மௌனமே ஒரு ‘காப்பாக’ மாறி அவரைச் சுற்றி ‘அரண்’ போல இருந்திருக்கிறது.

தோற்றம் சார்ந்து பல கிண்டல் பேச்சுகளை, அலட்சியக் கருத்துகளை விஜய் நிறையவே எதிர்கொண்டிருக்கிறார்.

ஆனால், அவற்றுக்குப் பதிலடி தருவதற்குப் பதிலாக, அதே நபர்கள், நிறுவனங்கள் தன்னைப் புகழும்படியான இடத்தை மிகச்சில ஆண்டுகளில் அவர் அடைந்தார். உள்ளூரப் பொறி கனன்று கொண்டிருந்தால் மட்டுமே, அதனை நிகழ்த்த முடியும்.

ஆரம்பகாலத்தில் சமகால நாயகர்களைப் போல நடனம் ஆடிய விஜய், ஐந்தாறு படங்களைத் தாண்டுவதற்குள்ளாகவே தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டார்.

‘பூவே உனக்காக’, ‘நினைத்தேன் வந்தாய்’ படங்களின்போது அவரது நடனத்தில் துள்ளல் அதிகம் தெரிந்தது.

2000க்குப் பிறகு வெளியான பகவதி, திருமலை, கில்லி படங்களில் அவருக்கென்று தனி ‘ஸ்டைல்’ உருவாகிவிட்டது.

அதனால் ரசிகர்களிடம் ஏற்பட்ட எதிர்பார்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ‘வாரிசு’, ‘லியோ’விலும் அளப்பரிய உழைப்பை நடனக் காட்சிகளில் தந்து வருகிறார் விஜய். அந்த உழைப்பை எல்லா நட்சத்திரங்களிடமும் நம்மால் எதிர்பார்க்க முடியாது.

விஜய்யின் நடிப்பு பற்றிய விமர்சனங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு மாதிரியானதாக இருந்திருக்கின்றன. சில நேரங்களில் அவை மிக மோசமானதாகவும் அமைந்திருக்கின்றன. ரசிகர்களால் ‘மாஸ்’ ஹீரோக்களாக கொண்டாடப்பட்டவர்களில் பலர் மீது அந்த சிலுவைகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

குறை சொல்லப்பட்ட படமும் பாணியும் பிற்காலத்தில் கொண்டாடப்பட்டதையும் தமிழ் திரையுலகம் கண்டிருக்கிறது. விஜய்க்கும் அது நேர்ந்திருக்கிறது என்பதனை அவர் நடித்த ‘சச்சின்’, ‘காவலன்’, ‘கத்தி’ போன்ற பல படங்களில் உணரலாம்.

இன்றுவரை விஜய்யின் நடிப்பில் மாஸ்டர் பீஸாக நான் கருதுவது ‘மாஸ்டர்’ படத்தைத்தான். அதில், அவர் அந்த பாத்திரமாக மட்டுமே தெரிவார். அவர் காட்டும் ஹீரோயிசம் என்பது அப்பாத்திரத்திற்கானதாகவே இருக்கும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து அப்படம் பெரிதாகச் சிலாகிக்கப்படலாம்.

இப்படி, தான் கடந்து வந்த பாதையில் இருந்த முட்களையும் மலர்களாகத் தோற்றமளிக்கச் செய்த பெருமை விஜய்க்கு உண்டு.

பலரது பங்களிப்பு!

ஆரம்பகாலத்தில் விஜய்யின் நடிப்பு வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருந்தவர்கள் அவரது பெற்றோரான ஷோபா – எஸ்.ஏ.சந்திரசேகர் தம்பதி. ‘நாளைய தீர்ப்பு’, ‘ரசிகன்’, ‘விஷ்ணு’, ‘தேவா’, ‘மாண்புமிகு மாணவன்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘நெஞ்சினிலே’ வரை விஜய்யை வளர்க்கும் நோக்கில் தனது கேரியரை அமைத்துக்கொண்டார் எஸ்.ஏ.சி.

பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை பெற்ற பெருவெற்றிகளுக்குப் பிறகு வெளியான எஸ்.ஏ.சியின் படங்கள் விஜய்யால் அடையாளம் காணப்பட்டது வரலாறு. ஆனால், அந்த விதையை இட்டவர்கள் அவர்களே என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அந்த காலகட்டத்தில் ஒரு இயக்குனர் கதை சொல்ல வந்தால், அவரிடம் விஜய்யும் எஸ்.ஏ.சியும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ கதை கேட்பது வழக்கம். இருவருக்கும் பிடித்தால் மட்டுமே, அது தயாரிப்பாளரின் காதுகளுக்குச் சென்று திரைப்படமாக உருப்பெறும்.

‘திருப்பாச்சி’ போன்ற ஒரு சில விதிவிலக்குகள் தவிர, அப்போது வெளியான பல திரைப்படங்கள் அப்படி உருவானவைதான்.

பிற்காலத்தில் ‘துப்பாக்கி’ போன்ற படங்களில் நடிக்கும்போது அந்த அணுகுமுறையை விஜய் மாற்றிக் கொண்டார்.

இப்படிப் பலரது பங்களிப்புடனேயே விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து ஏற்றம் கண்டது.

அதனை ஈடுகட்டும் நோக்கோடு, ‘புலி’ படத்தின்போது தனது கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக்கொண்ட செல்வகுமாரைத் தயாரிப்பாளர் ஆக்கினார். எஸ்.ஏ.சிக்காக ‘சுக்ரன்’ போன்ற படங்களில் கௌரவ தோற்றத்தில் தலைகாட்டினார்.

தன்னை வைத்து ஆரம்பகாலத்தில் படம் தயாரித்த சில தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்திருக்கிறார். போலவே, இன்றும் தன்னிடம் பணியாற்றுபவர்கள் படம் தயாரிக்க உதவுவது முதல் பல விஷயங்களைச் சத்தமின்றி செய்து வருகிறார்.

எப்போது 69?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது.

பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உட்படப் பல பிரபலங்கள் அதிலுண்டு. அதுவே, அப்படத்தை ‘மல்டி ஸ்டார்’ படமாக மாற்றியிருக்கிறது.

விஜய்யின் நட்சத்திர ஜொலிப்பை மீறி அவர்களுக்கும் திரையில் இடம் இருக்கும் என்பது நிச்சயம் அவர்களது ரசிகர்களுக்கு உவப்பளிக்கும் தகவல்.

இன்னும் சில நாட்களில் ‘விஜய் 69’ படத்திற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ‘துணிவு’ இயக்குனர் வினோத் உட்பட மிகச்சில இயக்குனர்களின் பெயர்கள் அதனை இயக்குவதற்கான பட்டியலில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய காரணத்தால் முழு நேரமாக அரசியலில் ஈடுபடும் நோக்கோடு, விஜய் சினிமாவில் நடிப்பதைக் கைவிட இருப்பதாகவும் தகவல் உலவுகிறது.

ஆனால், இதுவரை அவர் அதனை நேரடியாக அறிவிக்கவில்லை. ஒருவேளை தன் மீதான ரசிகர்களின் மோகம் தீராது என்றறிந்தபிறகு, அதற்காகவே சில படங்களில் முகம் காட்ட முடிவு செய்யலாம்.

திரையில் அவரைக் காண்பதையே தவமாகக் கருதும் பலர், அப்படியொரு முடிவுக்கே அவர் வரவேண்டும் என்று விரும்புகின்றனர். தற்போதைய சூழலில், விஜய்யின் முடிவு என்னவென்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

சமீபத்தில் மறு வெளியீட்டைக் கண்ட ‘கில்லி’ மிகப்பெரிய வெற்றியைத் திரையரங்குகளில் பெற்றிருக்கிறது. ஜுன் 21 அன்று துப்பாக்கி, போக்கிரி உள்ளிட்ட சில படங்கள் வெளியாகின்றன.

அவற்றுக்கு விஜய் ரசிகர்கள் தரும் வரவேற்பு அலாதியாக இருக்கும் பட்சத்தில், அவரது ஆரம்பகாலப் படங்களும் மறுவெளியீட்டைக் காணலாம். அது, அப்படம் சம்பந்தப்பட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம்.

ஆனால், ரசிகர்களைப் பொறுத்தவரை விஜய் நடிக்கும் புதிய படங்களே அவர்களுக்கு ஆசுவாசமளிக்கும் சுவாசம். அது என்றென்றும் தொடர வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள்.

ஐம்பத்தோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய், அவர்களது சந்தேகங்களுக்கும் கேள்விக்குறிகளுக்கும் நல்லதொரு பதிலைத் தருவார் என்று நம்புவோம்..

தளபதி விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

– மாபா

You might also like