ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான மிக முக்கியமான அம்சம் என்ன? படம் பார்க்கும் ரசிகர்கள், அதில் காட்டப்பட்ட பாத்திரங்கள், சம்பவங்கள் மற்றும் உலகத்துடன் ஒன்றிப் போக வேண்டும்.
அதனைச் சாத்தியப்படுத்துவதில் தான் இயக்குனரின், திரைக்கதை எழுதுபவர்களின், நடிகர் நடிகைகளின், அதில் பணியாற்றிய அனைவரது கூட்டுழைப்பின் வெற்றி அடங்கியிருக்கிறது. அப்படி ரசிகர்களைப் படத்துடன் ஒன்ற வைக்க, திரைக்கதை ட்ரீட்மெண்டில் நிதானத்தை விரவுவது ஒருவகை. கன்னடப் படமான ‘கோடி’ அதனைச் செய்திருக்கிறது.
பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘டாலி’ தனஞ்ஜெயா, மோக்ஷா குஷால், ரமேஷ் இந்திரா, தாரா, ரங்காயன ரகு, பிருதிவி ஷனனூர், தனுஜா வெங்கடேஷ், ஜோதி தேஷ்பாண்டே உட்படப் பலர் நடித்துள்ளனர்.
சாதாரண ரசிகர்களை இந்தப் படம் ஈர்க்கிறதா?
கோடி ரூபாய் லட்சியம்!
‘நல்லவனாக வாழ்வதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது’ என்றிருப்பவர் கோடி (தனஞ்ஜெயா). ஜனதா நகரில் உள்ள பூர்விக வீட்டில் தாய் (தாரா), தங்கை (தனுஜா வெங்கடேஷ்), தம்பி நாச்சி (பிருத்வி ஷனனூர்) உடன் வாழ்ந்து வருகிறார்.
கடனாகப் பெற்ற பணத்தில் ஒரு ‘ட்ரக்’ வாங்கி, சில பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, வீடு ‘ஷிப்ட்’ செய்யும் தொழிலைச் செய்து வருகிறார் கோடி. தனது தம்பிக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்து, ஒரு டாக்ஸி நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது அவரது கனவு. போலவே, படிப்பை முடித்த தங்கைக்கும் ஒரு கல்யாணம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்.
இதற்கிடையே, ‘ரேஷன் அரிசி கடத்தல்’ தொடர்பாகத் தந்தையின் நண்பரான ரமணா (ரங்காயன ரகு) உடன் கோடிக்குத் தகராறு ஏற்படுகிறது. “நீ செய்யும் திருட்டுத்தனத்திற்கு என்னை ஏன் உடந்தை ஆக்குகிறாய்” என்று ஒருமுறை அவரை அடித்துவிடுகிறார். பதிலுக்கு கோடியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்யும் ரமணா, அவரது தாயை அடித்துவிடுகிறார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வரும் கோடி, சுவரில் ‘ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திருடன் இருக்கிறான்’ என்று ரமணா கரியால் எழுதியிருப்பதைப் பார்த்து ‘டென்ஷன்’ ஆகிறார். தாயின் காதில் இருந்து ரத்தம் வருவதைப் பார்த்ததும் வெகுண்டெழுகிறார்.
‘யார் காரணம்’ என்று கேட்டுவிட்டு, ரமணா இருக்குமிடத்தைத் தேடிச் செல்கிறார்; அவரைப் பொழந்து கட்டுகிறார். அப்போது, “நீ கடன் வாங்குகிற தினு சாவ்கர் மட்டும் நல்லவனா” என்று கேட்கிறார் ரமணா.
“சாவ்கர் என்ன அநியாயம் செய்தாலும், நான் அவரிடம் நேர்மையாகத்தான் இருக்கிறேன். என்னை அவர் அநியாயத்திற்குத் துணை நிற்கச் சொன்னால் ஒருநாளும் அதனைச் செய்ய மாட்டேன்” என்கிறார் கோடி.
தினு சாவ்கர் (ரமேஷ் இந்திரா), ஜனதா நகரில் ஒரு பெரும்புள்ளி. அதனை ஆட்டுவிக்கும் ஒரு கேங்க்ஸ்டர். தான் சிறுவயதில் வேலை செய்த தியேட்டரையே வீடாக மாற்றி, அங்கு மனைவி (ஜோதி தேஷ்பாண்டே) உடன் வாழ்ந்து வருபவர்.
மகாநவமி அன்று அகமதாபாத் சென்று ஒரு ஆளைக் கொல்ல வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த ஒரு ரவுடி தினு சாவ்கரிடம் சொல்கிறார். அதனைச் செய்வதற்காகப் பெரும்பணம் கொடுக்கிறார்.
அந்த வேலையைச் செய்யும் நபரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும் அந்த ரவுடி சொல்லிவிடுகிறார். கூடவே, துப்பாக்கியின் இலக்கு துல்லியமாக இல்லாவிட்டால் சாவ்கரின் மொத்த சாம்ராஜ்யமும் சரிந்துவிடும் என்று மிரட்டவும் செய்கிறார்.
முதலில் அந்த வேலைக்குத் தன்னிடம் உள்ள சிவாவையே (அபிஷேக் ஸ்ரீகாந்த்) அனுப்பலாம் என்றெண்ணுகிறார் சாவ்கர். அப்போதுதான், சாவ்கர் முன்பு தனது துப்பாக்கி சுடும் திறனை வெளிக்காட்டுகிறார் கோடி. அந்தக் கணம் முதல் கோடியின் மீது தினு சாவ்கரின் கவனம் பதியத் தொடங்குகிறது.
ஒன்பது லட்சம் ரூபாய் கடனாக வேண்டும் என்று சொல்லும் கோடியிடம் ‘முப்பது லட்சம் ரூபாயை எடுத்துக்கிட்டு நான் சொல்ற வேலையைச் செய்’ என்கிறார் தினு சாவ்கர். அதனை ஏற்க மறுக்கும் கோடி, அவரிடத்தில் வெறுமனே ஒன்பது லட்சம் ரூபாயை மட்டும் பெற்றுச் செல்கிறார்.
கடனாக வாங்கிய பணத்தில் ஒரு காரை வாங்குகிறார் கோடி. அதனை தியேட்டர் வாசலில் விட்டுவிட்டு தங்கை, தம்பியுடன் சினிமா பார்க்கச் செல்கிறார். ஏதோ ஒரு எண்ணத்தில் தியேட்டரை விட்டு வெளியே வருபவர், இரண்டு பேர் காரைத் திருடிச் செல்வதைக் காண்கிறார். பின்னால் துரத்திச் சென்றும், கோடியால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.
போலீசில் புகார் அளித்தால், ‘இன்சூரன்ஸ் எடுக்காத காரைப் பத்தி புகார் கொடுத்து என்ன செய்யப் போற’ என்கிறார் இன்ஸ்பெக்டர் (சர்தார் சத்யா). அவரிடம், ‘காரை கண்டுபிடிச்சுக் கொடுங்க’ என்று கெஞ்சுகிறார் கோடி.
கார் திரும்பக் கிடைக்காத சூழலில், வழக்கம்போல வீடு ‘ஷிப்டிங்’ பணியில் ஈடுபடுகிறார் கோடி. ஒருநாள் ஒரு அபார்ட்மெண்டில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பொருட்களை இடம் மாற்றம் செய்கிறார்.
அதில் ஒரு ப்ரிட்ஜ் மட்டும் விட்டுப் போகிறது. ‘ஷிப்ட்’ செய்யச் சொன்னவரின் மொபைல் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால், அதனைத் தனது வீட்டு வாசலில் வைக்கிறார். ‘அண்ணன் புதுசா ப்ரிட்ஜ் வாங்கியிருக்கு’ என்ற நினைப்பில், அவரது தங்கை அதனை வீட்டுக்குள் எடுத்துச் சென்றுவிடுகிறார்.
குடும்பத்தினரின் மகிழ்ச்சியைக் காணும் கோடி, அந்த நபருக்கு போன் செய்து ‘புதிதாக ப்ரிட்ஜ் வாங்கித் தருகிறேன்’ என்று சொல்ல முடிவெடுக்கிறார். ஆனால், எதிர்முனையில் இருப்பவரின் மொபைல் தொடர்ந்து தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறது.
இந்த நிலையில், தன் வீட்டில் இருந்த மொத்தப் பொருட்களையும் ஒரு கும்பல் பட்டப்பகலில் திருடியதாகப் போலீசில் புகார் செய்கிறார் ஒரு நபர். அவர் சொல்கிற வீட்டில் இருந்து பொருட்களை எடுத்தவர்கள் கோடியும் அவரிடம் வேலை செய்பவர்களும் தான்.
அதையடுத்து, காவல் நிலையத்திற்கு உடனே வருமாறு கோடியை அழைக்கிறார் இன்ஸ்பெக்டர். ‘கார் கிடைத்துவிட்டது போல’ என்று நம்பிக்கையுடன் அங்கு செல்பவருக்கு, பெருத்த அவமானம் பரிசாகக் கிடைக்கிறது.
‘இவரோட வீட்டுல ஏண்டா திருடுன’ என்று ஒரு நபரைக் கை காட்டுகிறார் இன்ஸ்பெக்டர். அந்த நபர் திருடு போன பொருட்களுக்கு ஈடாக 22 லட்சம் ரூபாய் வேண்டும் என்கிறார்.
வேறு வழியே இல்லாமல், தினு சாவ்கருக்கு போன் செய்கிறார் கோடி. அங்கு வரும் அவர், அந்தப் பணத்தைக் கொடுக்கிறார். அப்போதும், ’அகமதாபாதுக்கு நான் செல்ல மாட்டேன்’ என்று அவரிடம் தெளிவாகச் சொல்கிறார் கோடி.
இதற்கிடையே, கோடியின் தாய்க்கு காது கேட்காமல் போகிறது. அதனைச் சரி செய்வதற்கான ஆபரேஷனுக்கு பத்து லட்சம் ரூபாய் செலவிட வேண்டிய நிலைமை.
கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடனாளி ஆகிவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் கோடி.
அப்போது, அவரது வீட்டு பத்திரத்தையும் லாரிக்கான ஆவணங்களையும் பிடுங்கிச் செல்கின்றனர் சாவ்கரின் ஆட்கள். அவரது தங்கையையும் அவமானப்படுத்துகின்றனர். ’மகாநவமி முடிந்தவுடன் அகமதாபாதுக்கு ரயில் ஏறுற’ என்று மிரட்டிவிட்டுச் செல்கின்றனர்.
ஆத்திரத்தின் உச்சத்தில் தினு சாவ்கரைத் தேடிச் செல்கிறார் கோடி. அப்போது, தான் சந்தித்த அத்தனை அவமானங்களுக்கும் சூத்திரதாரி சாவ்கர் என்பதை உணர்கிறார்.
அதன்பிறகு கோடி என்ன செய்தார், தான் நம்புகிற நியாயம், நேர்மையைத் தொடர்ந்தாரா என்று சொல்கிறது இத்திரைப்படத்தின் மீதி.
இந்தக் கதையில், நியாயமாகச் சம்பாதித்து கோடி ரூபாய் சேர்ப்பேன் என்பதே கோடியின் லட்சியமாக இருக்கிறது. அதனை அவரது தங்கை, தம்பி உட்பட எவரும் ஏற்பதாக இல்லை. எதிரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
ஆனால், கோடியின் தாய் மட்டுமே அதனை எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார். அப்படிப்பட்ட தாயைக் காப்பாற்றுவதற்காக, கோடி தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்தாரா என்கிறது இப்படம்.
ஒரு வித்தியாசமான படம்!
கோடியாக வரும் தனஞ்ஜெயா, வழக்கமான கமர்ஷியல் ஹீரோக்கள் போலவே திரையில் தோன்றுகிறார்; நாயகியைக் காதலிக்கிறார்; அடியாட்களுடன் சண்டையிடுகிறார். அதனைத் தாண்டி, படம் முழுக்க ஒரேமாதிரியான பாவனைகளுடன் வலம் வருகிறார். அதுவே அவரது நடிப்பின் சிறப்பம்சமாக உள்ளது.
நாயகியாக இதில் மோக்ஷா குஷால் வருகிறார். க்ளப்டோமேனியா எனும் மனநோய்க்கு ஆளானவராக, விக்கல் எடுக்கும்போதெல்லாம் எதையாவது திருட வேண்டும் என்கிற வேட்கை கொண்டதாக அப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், வெறுமனே அழகுப்பதுமையாக மட்டுமல்லாமல் போதுமான அளவுக்கு நடிக்கவும் செய்திருக்கிறார்.
நாயகனின் தாயாக நடித்துள்ள தாரா, ‘நாயகன்’ படத்தில் கமலின் தங்கையாக நடித்தவர். அவரை ‘ஆயி’ என்று நாயகன் விளிக்கும்போது, ‘தஞ்சாவூர் ஏரியாவுல அம்மாவை இப்படித்தானே கூப்பிடுவாங்க’ என்ற எண்ணம் மனதுக்குள் வந்து போகிறது.
நாயகனின் தம்பியாக வரும் பிருத்வி ஷனனூர், தான் வரும் காட்சிகளில் ஒரு ஹீரோ போலவே தென்படுகிறார். போலவே, தங்கையாக நடித்துள்ள தனுஜா வெங்கடேஷும் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையிலான அழகையும் பாவனைகளையும் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜோதி தேஷ்பாண்டே, சர்தார் சத்யா, அபிஷேக் ஸ்ரீகாந்த், ரங்காயன ரகு உட்படப் பலர் இதில் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். அவர்களது இருப்பைக் காலி செய்யும் அளவுக்குத் திரையை ஆக்கிரமிக்கிறார் தினு சாவ்கராக நடித்துள்ள ரமேஷ் இந்திரா.
ஒரு நாயகனை ரசிகர்கள் கொண்டாட, அந்தப் படத்தில் வில்லனுக்குச் சமமான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதற்கு இதில் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார்.
படத்தில் பல காட்சிகளில் குச்சி ஐஸ் சுவைத்தவாறே வருகிறார் நாயகன் தனஞ்ஜெயா. ப்ரிட்ஜில் மொத்தமாகப் பத்து பதினைந்து குச்சி ஐஸ்களை அவர் ‘ஸ்டோர்’ செய்திருப்பதாகவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
போலவே, தனக்கு இதுவரை விக்கலே வந்தது இல்லை என்று நாயகியிடம் சொல்வார் நாயகன்.
அதற்கான காரணமாக, திரைக்கதையில் ஒரு பிளாஷ்பேக் காட்சி உள்ளது. அதில், நாயகனின் தந்தையாகத் தோன்றி ரசிகர்களின் அனுதாபங்களை அள்ளுகிறார் துனியா விஜய்.
அருண் ப்ரமாவின் ஒளிப்பதிவு, நோபின் பால் பின்னணி இசை, குணா கரண் கலை இயக்கம், பிரதீக் ஷெட்டியின் படத்தொகுப்பு உட்படப் படத்தில் தொழில்நுட்ப அம்சங்கள் ஒவ்வொன்றும் இயக்குனர் பரம் உருவாக்க நினைத்த உலகத்திற்குத் திரையில் உயிரூட்டியிருக்கின்றன.
வாசுகி வைபவ்வின் இசையில் அமைந்த பாடல்கள், முதல்முறை கேட்கும்போதே நம்மை ஈர்க்கும் ரகம்.
தியேட்டர் பின்னணியில் புலி வேடமிட்ட நாயகனை வில்லனின் அடியாட்கள் துரத்துவதாக, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ’டாக்டர்’ படத்தில் வரும் மெட்ரோ ரயில் சண்டைக்காட்சி போன்று அக்காட்சி நம்மை வசீகரிக்கிறது.
இந்த படத்தில் ஸ்டண்ட் கொரியோகிராபர்களாக அர்ஜுன் ராஜ், விக்ரம் மோர் மற்றும் தினேஷ் சுப்பராயன் பணியாற்றியுள்ளனர்.
கமர்ஷியல் படத்திற்கு உண்டான கதை என்றபோதும், மிக மெதுவாக நகரும் காட்சிகளும், அதனைச் சாத்தியப்படுத்துகிற திரைக்கதை ட்ரீட்மெண்டும் ‘இது ஒரு வித்தியாசமான படம்’ என்ற எண்ணத்தை வலுப்படுத்துகின்றன.
கன்னட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை இயக்கிய அனுபவம் கொண்டவர் பரம்; அவர் இயக்கியுள்ள முதல் படம் இது.
நிதானமிக்க திரைக்கதை!
லாஜிக் மீறல்களைத் தாண்டி, இந்த படத்தில் நம்மை நெருடுகிறது ஒரு விஷயம். ‘ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு திருடன் இருக்கிறான்’ என்ற வாசகத்தை நியாயப்படுத்தும் விதமான காட்சிகள் அறத்திற்குப் புறம்பானதாக உள்ளன.
பெட்டிக்கடையில் தாய் வைத்திருக்கும் முறுக்குகளில் இருந்து ஒவ்வொரு துண்டாக எடுத்து தின்பார் நாயகனின் தம்பி. ‘இந்த திருட்டால யாரும் காயப்படலையே’ என்று நாயகனிடம் நியாயம் சொல்வார்.
‘லாட்ஜ் ரூம்ல டவல் எடுத்துட்டு வர்றது, ஸ்வீட்ஸ் ஸ்டால்ல ஒரு துண்டை எடுத்து டேஸ்ட் பார்க்கறது மாதிரி எதையுமே நீ செய்ததில்லையா’ என்று நாயகனிடம் கேட்கும் ரமணா பாத்திரம்.
’24 கேரட் தங்கத்தால யாருக்குமே பயன் இல்ல; அது கூட கொஞ்சம் தாமிரமோ, வெள்ளியோ சேர்த்தாகணும்’ என்று சொல்லும் நாயகி பாத்திரம்.
இவையே இந்த படத்தின் கிளைமேக்ஸ் எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைத்துவிடும். அறம் சிறிதுமற்ற அந்தச் சித்தரிப்பு மட்டுமே இந்தப் படத்தில் இருக்கும் ‘மைனஸ்’.
மெதுவாக நகரும் திரைக்கதை, சிலருக்கு இப்படத்தின் பெருங்குறையாகத் தென்படலாம். உண்மையைச் சொன்னால், அதுவே இப்படத்தின் பலமாகவும் இருக்கிறது.
சாதாரணமாக ஒரு குடும்பத்தில் இருப்பவர்களின் உரையாடல் போன்று வசனங்கள் அமைந்திருப்பதும், அடுத்தடுத்து காதல், நகைச்சுவை, ஆக்ஷன் என்று நகரும் காட்சிகளைப் பார்த்து நாம் எரிச்சலடையாமல் இருப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு காட்சியிலும் நிதானம் கூடி நிற்பதும் இத்திரைக்கதையின் சிறப்பு.
அதுவே, இதன் கதாபாத்திரங்களோடு, நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளோடு நம்மை எளிதாகப் பிணைக்கிறது. பல நல்ல படங்கள் அதனைத் தவற விட்டுவிட்டு, திரையில் அரைகுறை உயிருடன் ஒளிர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். ‘கோடி’ அந்த தவறைச் செய்யவில்லை.
ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு, பாத்திரங்களையும் காட்சிகளையும் வலுவாக அமைப்பதன் மூலமாகத் திரைக்கதையில் ‘ப்ரெஷ்னெஸ்’ கூட்டிவிடலாம் என்று நிரூபித்திருக்கிறது ‘கோடி’. தனக்கான இலக்கை எட்டியிருக்கிறது.
‘எல்லா படமும் ஒரே மாதிரி இருக்கு’ என்ற புலம்பல்களைப் புறந்தள்ள, இது போன்ற சிறப்பம்சங்கள் மிக முக்கியம். அதனைச் சாதித்துள்ளது இந்த ‘கோடி’.
– உதயசங்கரன் பாடகலிங்கம்