அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டி!

மகளிர் ஆணையத் தலைவி உத்தரவு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தலைமை வகித்துப் பேசிய மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி, “அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டியை வைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

அதோடு, “புகார்ப் பெட்டிக்கு வரும் கடிதங்களைப் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் முன்னிலையில்தான் திறக்க வேண்டும். மாணவர்களின் இடைநிற்றலைக் கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்கத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்து, பெற்றோருக்கு ஆசிரியர்கள் புரியவைக்க வேண்டும். மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தக்க ஆலோசனையும், பயிற்சியும் வழங்க வேண்டும்.

மலைவாழ் மாணவ, மாணவிகள் கல்வி கற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இளவயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஏ.எஸ்.குமாரி வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, “ஸ்கேன் மையங்களை மருத்துவத் துறையினரும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களை சமூக நல அலுவலர்களும் ஆய்வுசெய்து, உரிய முறையில் கண்காணிக்க வேண்டும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி, பெண்களை தொழில்முனைவோராக மாற்ற வேண்டும். நாடு வளர்ச்சி அடையும்” எனக் கூறினார்.

You might also like