கிளாம்பாக்கம் தொடரும் பிரச்சனைகள்: பரிதவிப்பில் பயணிகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு மத்தியப் பேருந்து நிலையம் மாற்றப்படுவது குறித்து அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, அது குறித்த சலசலப்பு துவங்கிவிட்டது. பயணிகளில் பலர் திணறிப் போனார்கள்.

போக்குவரத்து ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையையே சில சண்டையும் சச்சரவுகளும் ஏற்பட்டன. குறிப்பாக ஆம்னி பஸ் காரர்கள் பயணிகளின் நெருக்கடி தாளாமல் நீதிமன்றத்திற்கு போனார்கள். நீதிமன்றமும் தலையிட்டது. தலையிட்டும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தன.

பொங்கலுக்குப் பிறகு சென்னையிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றுவிட்டு, சென்னைக்கு மறுபடியும் திரும்பிய பயணிகள் சென்னை மாநகரத்திற்குள் வருவதற்குப் படாதபாடு படவேண்டி இருந்தது. இது ஏற்கனவே பலர் அனுபவித்து, வெளிவந்த செய்திகள் தான்.

தற்போது மீண்டும் அதே கதை நிகழ ஆரம்பித்திருக்கிறது. முன்பு கிளாம்பாக்கம் பேருந்து பிரச்சனைகள் எழுந்ததுமே, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஒரு குறிப்பிட்ட உத்திரவாதத்தை செய்தியாளர்களுக்கு முன் வைத்தார். கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கும் எப்போதும் பேருந்து வசதிகளும் வாகன வசதிகளும் தயாராகவே இருக்கும். அதனால் பயணிகள் கஷ்டப்பட வேண்டியதில்லை என்ற ஒரு கருத்தைச் சொன்னார்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. பகல் நேரங்களில் அங்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள், உள்ளூர் பேருந்துகளைப் பயன்படுத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு வர முடிகிறது.

ஆனால் இரவு 10 மணி ஆன பிறகு, கிளம்பாக்கத்திலிருந்து பேருந்து வசதிகள் இயக்கப்படாததால், அதன்பிறகு கிளாம்பக்கத்தில் வந்து இறங்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மக்கள் திரளாகச் சென்று கோரிக்கை விடுத்து, அதற்கு பிறகு சில குறிப்பிட்ட பேருந்துகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் சென்னையின் பல பகுதிகளுக்குப் போயிருக்கின்றார்கள். இது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது தினமுமோ இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றாக மாறிப் போயிருக்கிறது.

ஏன்? இவ்வளவு வசதிகளோடும் முன்னேற்பாடுகளோடும் துவக்கப்பட்ட கிளாம்பாக்கத்து பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் எந்த பேருந்து வசதியும் சென்னைக்குள் வருவதற்கு இயலாமல் போகின்றது.

போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகள், பயணிகளின் இந்த சிரமங்கள் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையா?

தொடர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி அதற்கு பிறகுதான் பேருந்துகளைவிட வாய்ப்பு இருக்கின்றது என்பது எவ்வளவு நடைமுறை கோளாராக இருக்கின்றது.

அடிக்கடி ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் இது குறித்தும் உரிய கவனம் செலுத்தட்டும்.

You might also like