மக்கள் சுதந்திரமாக வாழ ஆயுதம் ஏந்திய சாமானியன்!

நூல் அறிமுகம்:

சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் சேகுவேரா – அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கிள் பயணங்கள்.

மருத்துவம் பயின்ற இருவரும் ‘லா பெடரோசா’ பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள்.  அதன்படி தனது குடும்பத்திடம் இருந்து விடைபெற்று அவர்கள் கிளம்பினர்.

அர்ஜென்டினாவில் ஆடம்பரமான ஒரு வாழ்க்கை. இருந்தும் சேவுக்கு புதிய விஷயங்களைத் தேட ஆசை. அதற்காக தனது காதலியிடம் இருந்தும் அவர் விடைபெற்றுக் கொண்டார். தனக்கென நிலையான வசிப்பிடத்தோடும் மனிதர்களோடும் வாழ்வதை சே அசௌகரியமாக கருதினார். அதனால்தான் அவர் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றித் திரிந்தார்.

நீண்ட பயணத்துக்கு பின்னர், அன்று ‘சே’வும் அல்பர்ட்டோவும் வெனிசுலாவில் இருந்தனர். அல்பர்ட்டோவுக்கு, ‘பயணத்தை முடித்துக் கொள்ளலாம்’ என தோன்றிவிட்டது. ‘நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுதான் தனது கடமை’ என அல்பர்ட்டோ நினைத்தார்.

ஆனால் சே அதற்கு எதிர்மறையாக தனது பயனத்தைத் தொடர விரும்பினார். ‘அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும்’ என்ற கனவு அவரை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

அந்த பயணத்தின்போது, குச்சிகாமாட்டா சுரங்கங்களையும் அங்கு நடக்கும் சுரண்டல்களையும் நேரில் கண்டார்.

ஏழ்மை நிலையிலும் கொள்கையில் உறுதியோடு இருக்கும் கம்யூனிச தம்பதியைப் பார்த்தார்.

துயரப்படும் தொழு நோயாளிகளைக் கண்டார். பழமையான நாகரிகங்கள் சிதைக்கப்பட்டதைப் பார்த்தார். மொத்தத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை உணர்ந்தார்.

அதன்பின்னரே, ‘இம்மக்கள் சுதந்திரமாக வாழ வேன்டும்’ என்று அவருக்குத் தோன்றியது. ‘அதற்கான போராட்டங்கள் அனைத்தும் துப்பாக்கியைத் தாங்கி நடக்க வேண்டும்’ எனத் தீர்மானித்தார்.

வெனிசுலாவில் தனது நண்பனைப் பிரிந்து, வாழ்வின் அடுத்த சாகசத்துக்கு தயாரானார் சே. அடுத்த 10 வருடங்களுக்கு அவர் அல்பர்ட்டோவைச் சந்திக்கவில்லை.

*****

நூல்: சே குவேரா
எழுத்தாளர்: தா. பாண்டியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள்: 276
விலை: ரூ.350/-

You might also like