‘இந்தப் படத்தையாடா நாம கவனிக்காம விட்டோம்’ என்று வடிவேலு குரலில் நம்மை நாமே திட்டிக்கொள்ளும்படி சில படங்கள் வாய்க்கும்.
குறைவான தியேட்டர்களில் அந்தப் படம் திரையிடப்படுவது, பெரிதாக விளம்பரம் இல்லாதது, சமூக வலைதளங்களில் அது பற்றிய கருத்து தெறிப்புகள் இல்லாதது, போதுமான விமர்சனங்கள் பத்திரிகைகள், யூடியூபர்களிடம் இருந்து வெளிப்படாதது என்று அதன் பின்னே பல காரணங்கள் இருக்கும்.
அதில் ஏதோ ஒரு காரணம் இப்படம் பின்னே இருக்கிறது என்பதை நமக்குணர்த்துகிறது ‘அஞ்சாமை’. விதார்த், வாணிபோஜன், கிருதிக் மோகன், ரஹ்மான், கேபிஒய் ராமர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனரான எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ளார்.
‘சரி, இவ்ளோ பில்டப் கொடுக்கற அளவுக்கு இந்தப் படத்துல என்ன இருக்கு’ என்று கேட்கிறீர்களா?
மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதித் தேர்வு தேவையா, அதனை எழுதும் மாணவர்களிடம் பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பதனைப் பற்றிப் பேசுகிறது. அதாகப்பட்டது, நீட் தேர்வு நடத்தப்படும் விதம் குறித்தும், அதன் பின்னிருக்கும் அரசியல் குறித்தும் பேசுகிறது அஞ்சாமையுடன் பேசுகிறது.
சரி, இப்படம் எப்படியிருக்கிறது?
தேர்வு என்பது வேள்வியா?
திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சர்கார் (விதார்த்). தனக்குச் சொந்தமாகவுள்ள நிலத்தில் பூந்தோட்டம் வளர்த்து, பூக்கடைகளுக்கு அப்பூக்களைக் கொண்டு சேர்க்கும் விவசாயியாக இருக்கிறார். நாடகங்களில் நடிப்பதென்றால் அவருக்கு உயிர்.
சர்கார் மனைவி சரஸ்வதி (வாணி போஜன்). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் பெயர் அருந்தவம் (கிருதிக் மோகன்).
கணவரைப் போலவே மகனும் நாடகத்தில் ஆர்வம் கொள்வதைக் கண்டு எரிச்சலுறுகிறார் சரஸ்வதி. ‘அவன் நன்றாகப் படித்து, பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணமில்லையா’ என சர்காரிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
தான் சொல்வதை மகன் கொஞ்சம்கூடக் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றெண்ணும் சரஸ்வதி, ஒருநாள் அவனைச் சரமாரியாக அடிக்கிறார். அதனைக் காணும் சர்கார், ‘தன்னை முன்மாதிரியாகக் கொண்டு நாடகத்தில் மகன் கால் பதிக்கக் கூடாது’ என்றெண்ணுகிறார். அன்று முதல் நாடகக் காதலைக் கைவிடுகிறார்.
அதன்பிறகு, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் அருந்தவம். பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுகிறார். ’டாக்டர் ஆவதே தனது லட்சியம்’ என்று பேட்டி அளிக்கிறார். தான் படித்த அரசுப்பள்ளியிலேயே மீண்டும் பன்னிரண்டாம் வகுப்பைத் தொடர்கிறார்.
அப்போதுதான், மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதித் தேர்வு எனும் நீட் அறிமுகமாகிறது. ‘பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் தேர்ச்சி பெறலாம்’ என்ற பல மாணவர்களின் கனவுகளை அது சிதைக்கிறது. அதற்கு எதிரான போராட்டம் தொடங்குகிறது.
இந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வினை வெற்றிகரமாக எழுதிவிட்டு ‘நீட்’ தேர்வுக்குத் தயாராகிறார் அருந்தவம்.
அத்தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் மையமொன்றில் தன் குடும்பத்தின் பொருளாதாரச் சக்தியை மீறிப் பணம் கட்டிச் சேர்வது, இணைய வழியில் அத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது என்று பல சிரமங்களை எதிர்கொள்கிறார். இந்த நிலையில் அவருக்கான தேர்வு மையமாக ‘ஜெய்ப்பூர்’ ஒதுக்கப்படுகிறது. அங்கு சென்று தேர்வு எழுத அருந்தவத்தை அழைத்துக்கொண்டு சர்கார் செல்கிறார்.
ரயிலில் முன்பதிவு செய்யாதோருக்கான பெட்டியில் பயணிப்பது, ரயில் செல்லத் தாமதம் ஆவது, தேர்வு மையத்திற்குக் கடைசி நிமிடத்தில் பதற்றத்துடன் சென்று தேர்வெழுதுவது என்று அருந்தவம் பெருந்தடைகளைக் கடக்கிறார்.
ஆனால், அவர் தேர்வு எழுதுவதற்காகத் தூக்கம், பசியைத் தொலைத்து மன உளைச்சலின் உச்சத்திற்குச் சென்ற சர்கார், ஜெய்ப்பூர் நகரச் சாலையில் மாரடைப்பினால் இறக்கிறார்.
‘எனது தந்தை சாகவில்லை, அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார்’ என்று காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யச் செல்கிறார் அருந்தவம். பெரும் விவாதத்திற்குப் பிறகு, இன்ஸ்பெக்டர் மாணிக்கம் (ரஹ்மான்) அந்த வழக்கைப் பதிவு செய்கிறார். அதனால், அவர் துறைரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார்.
அதையடுத்து, அருந்தவத்தின் சார்பில் அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கிறார். அதில், சர்கார் மரணத்திற்குக் காரணமான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
அந்த வழக்கு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டதா? அருந்தவத்தின் குற்றச்சாட்டுக்குப் பதில் கிடைத்ததா என்று சொல்கிறது ‘அஞ்சாமை’யின் மீதி.
இந்தப் படம் யதார்த்த நிகழ்வுகளோடு ஒத்துப் போகிறதா என்று கேட்டால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். அதேநேரத்தில், ‘இப்படியொன்று நடந்தால் நன்றாகத்தானே இருக்கும்’ என்ற சாதாரண மனிதர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
எல்லா மாணவர்களுக்கும் ஒரே கல்விமுறையை வழங்காமல், ஒரேமாதிரியான தரத்தைக் கொண்ட ஆசிரியர்களை நியமிக்காமல், திடீரென்று ஒரு தகுதித்தேர்வைக் கொண்டுவந்து மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை நசுக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியை எழுப்புகிறது ‘அஞ்சாமை’.
மிக முக்கியமாக, ஒரு மாணவர் படித்து தேர்வெழுதுவதைக் கஷ்டமாகக் கருதச் செய்யும் கல்விமுறை தேவையா என்று கேட்கிறது. கூடவே, தேர்வு என்பது மாணவர்களைச் சுட்டெரிக்கும் வேள்வித் தீயா என்கிறது. ‘நீட்’ தேர்வு குறித்து எதுவும் தெரியாதவர்களுக்கும் கூடப் புரியும்படி இருக்கிறது என்பது தான் ‘அஞ்சாமை’யின் சிறப்பு.
சிறப்பானதொரு முயற்சி!
விதார்த், வாணி போஜன், ரஹ்மான் ஆகியோர் இதில் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். அவர்களது பட வரிசையில் நிச்சயமாக அஞ்சாமை சிறப்பான இடத்தைப் பெறும்.
அருந்தவம் ஆகத் தோன்றியுள்ள கிருதிக் மோகன் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகளிலும் கூட பிசிறு இல்லாமல் நடித்திருப்பது சிறப்பு. விதார்த்தின் மகளாக வரும் ரேகா சிவன், பல காட்சிகளில் பின்னணியில் இடம்பிடித்தாலும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்.
குறிப்பாக, நீதிபதியாக வரும் சுந்தரம் இக்கதைக்குத் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறார். இவர்கள் தவிர்த்து கேபிஒய் ராமர், சஞ்சனா, ரேகா நாயர் உட்படப் பலர் இதிலுண்டு.
சீரியசான பிரச்சனையொன்றைப் பேசுகிறோம் என்கிற போர்வையில், ‘அஞ்சாமை’யை ஒரு பிரச்சாரப் படமாக வடிவமைக்கவில்லை இயக்குனர் எஸ்.பி.சுப்புராமன். மிக இலகுவான, பார்ப்பதற்குச் சுவாரஸ்யமான திரைக்கதையைக் கொண்ட ஒரு படைப்பை அவர் தந்திருக்கிறார்.
பின்பாதியில் வரும் நீதிமன்றக் காட்சிகள் யதார்த்தமில்லாததாகத் தோன்றினாலும், ஒரு திரைப்படமாக நோக்கினால் அக்காட்சிகளைக் குறை சொல்ல முடியாது. அதனால்,நல்லதொரு வரவேற்புக்குத் தகுதியானவர் ஆகிறார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் தந்திருக்கும் பங்களிப்பானது, இது மீடியம் பட்ஜெட்டையும் கடந்த ஒரு படைப்பு என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. வழக்கமாக, இது போன்ற படங்கள் அந்த தடையை எதிர்கொள்ளப் பெரிதாகச் சிரமப்படும். ’அஞ்சாமை’யில் அந்த விஷயம் அறவே இல்லை.
பாடல்களுக்கு இசையமைத்துள்ள ராகவ் பிரசாத், பின்னணி இசை தந்துள்ள கலாசரண் இருவரும் படத்திற்குத் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன், கலை இயக்குனர் ஜி.சி.ஆனந்தன், ஆடை வடிவமைப்பாளர் சிவபாலன், ஒலி வடிவமைப்பாளர் டி.உதயகுமார் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் காதலுடன் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
விதார்த், வாணி போஜனுக்கான ஒப்பனை, ஆடை வடிவமைப்பு நம்மைப் படத்துடன் ஒன்றச் செய்கிறது.
‘அஞ்சாமை’ ஒரு சிறப்பான முயற்சி. டாக்டர் எம்.திருநாவுக்கரசு இப்படத்தினைத் தயாரித்துள்ளார். மருத்துவத் துறையில் இருக்கும் ஒருவர் இதனைச் செய்ய முன்வந்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்.
வரவேற்பு இருக்கிறதா?
‘அஞ்சாமை’ படத்திற்குப் போதிய வரவேற்பு இருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. சென்னையில் பல தியேட்டர்களில் இப்படத்தின் காட்சிகள் போதிய பார்வையாளர்கள் இல்லாமல் ‘கேன்சல்’ ஆனதைக் கேட்க முடிகிறது. இன்று முதல் இப்படத்தைக் காணும் வாய்ப்பு அரிதாகிப் போகலாம்.
ஆனால், ‘அஞ்சாமை’ ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் வெளியாகும்போது நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும். தியேட்டர்களில் இந்தப் படத்தைப் பார்க்கப் போதிய பார்வையாளர்கள் வராதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பும்.
திரைப்படைப்பாளிகள் மட்டுமல்லாமல் கல்வியாளர்களும் கூட இப்படம் குறித்த தங்களது கருத்துகளைத் தானாக முன்வந்து வழங்காதது ஏன் என்று தெரியவில்லை. தயாரிப்பு தரப்பு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லையா? பதில் நமக்குத் தெரியவில்லை.
ஆனால், ‘அஞ்சாமை’யைப் பார்க்கும் எவரும் அதனை ‘அமெச்சூர்தனமான’ படம் என்று சொல்லிவிட முடியாது. ’கல்வி அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்’ என்பதனை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் மட்டுமே, இப்படத்தின் ப்ளஸ், மைனஸ் குறித்து விவாதிக்க விரும்பாமல் புறந்தள்ள எண்ணுவார்கள்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்