பன்முகக் கலைஞன் ஜி.வி.பிரகாஷ்!

திரைப்படத் துறையில் நடிகராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, இயக்குனராக, இன்னபிற தொழில்நுட்பக் கலைஞராகக் கோலோச்சியவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்களில் ஒரு சிலரே ஒன்றுக்கும் மேற்பட்டவற்றில் வெற்றி பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். அவர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

பின்னணி பாடகராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், இன்று ஒரு வெற்றிகரமான நாயகனாகவும் அவர் இருந்து வருகிறார்.

தொடரும் பயணம்!

‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ பாடலைப் பாடி தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.

தொடர்ந்து ‘மாரி மழை பெய்யாதோ’, ‘பாலக்காட்டு மச்சானுக்கு’, ‘மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்’. ‘குச்சி குச்சி ராக்கம்மா’, ‘இனி அச்சம் அச்சம் இல்லை’, ‘ஷாக்கடிக்குது சோனா’, ‘குலுவாலிலே முத்து வந்தல்லோ’ பாடல்களைத் தனது மழலைக் குரலால் அலங்கரித்தவர்.

சிறிது இடைவெளிக்குப் பின்னர், தனது பதின்ம வயதில் ‘காதல் யானை’ வருகிறான் ‘ரெமோ’ பாடல் வழியே மீண்டும் தனது குரலைக் காற்றில் தவழவிட்டார்.

2006-ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘வெயில்’ வெளியானது.

‘வெயிலோடி விளையாடி’ பாடல் நகரத்தில் இருந்தவர்களைப் புழுதிக் காட்டுக்குள் இழுத்துச் சென்றது என்றால், ‘உருகுதே மருகுதே’ பாடல் அனைவரையும் காதல் மழையில் நனைய வைத்தது.

பிறகு ‘ஓரம் போ’, ’கிரீடம்’, ‘பொல்லாதவன்’ என்று விதவிதமான கதைகளைக் கொண்ட படங்களில் ஜி.வி.பிரகாஷின் இசை ஒலித்தது.

‘வெள்ளித்திரை’யில் இடம்பெற்ற ‘விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே’ பாடல் ரசிகர்களின் காதில் எந்தளவுக்கு ரீங்காரமிட்டதோ, அதற்கு இணையாக ‘காளை’யில் இருந்த ‘குட்டிப்பிசாசே’ பாடல் அவர்கள் மனதில் நங்கூரமிட்டு ஒட்டிக்கொண்டது.

’ஆயிரத்தில் ஒருவன்’, ‘மதராசப்பட்டினம்’, ‘ஆடுகளம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மயக்கம் என்ன’, ’முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘தாண்டவம்’, ’உதயம் என்ஹெச் 4’, ‘ராஜா ராணி’, ’கொம்பன்’, ‘தெறி’, ’அசுரன்’, ’சூரரைப் போற்று’, ’வாத்தி’, ’மார்க் ஆண்டனி’, ’கள்வன்’ என்று நீள்கிறது அவர் தந்த ஹிட் ஆல்பங்களின் வரிசை.

தங்கலான், லக்கி பாஸ்கர், ராபின்ஹுட், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், மாஸ்க் என்று ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகக் காத்திருக்கும் படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியவையாகவும் திகழ்கின்றன.

ஒரு சில கலைஞர்கள் மட்டுமே இப்படியொரு சிறப்பினைத் தங்களது திரை வாழ்வில் பெறுவார்கள்.

ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராகப் பாடல்களையும் பின்னணி இசையையும் தருவது நிச்சயம் சிறப்புக்குரியதுதான். அதையும் தாண்டி ஒரு நடிகராகவும் கூடத் தனது பங்களிப்பைத் தொடர்கிறார் ஜி.வி.பிரகாஷ். அது நிச்சயம் சாதாரண விஷயமல்ல!

மெருகேறும் நடிப்பு!

சாம் ஆண்டன் இயக்கிய ‘டார்லிங்’ படத்தில்தான் முதன்முறையாக நாயகன் ஆனார் ஜி.வி.பிரகாஷ். அதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது, ஆதிக் ரவிச்சந்திரன் அறிமுகமான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’. அப்படம் 2கே கிட்ஸ்கள் மத்தியில் அவருக்கென்று தனி அபிமானத்தை உருவாக்கியது.

தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ப்ரூஸ்லீ, நாச்சியார், செம, சர்வம்தாளமயம், குப்பத்துராஜா, வாட்ச்மேன் என்று பல படங்களில் நடித்தார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், அவருக்கென்று தனிப்பட்டதொரு அடையாளத்தைத் தந்தது சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.

லிஜிமோள் ஜோஸ், சித்தார்த், காஷ்மீரா பர்தேஷி உடன் அவர் நடித்த இப்படமே, பெண்கள் மத்தியில் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது. குறிப்பாக லிஜிமோள் – ஜி.வி.பி சம்பந்தப்பட்ட அக்கா – தம்பி பாசக் காட்சிகள் ரசிகர்களைச் சட்டென்று ஈர்த்தன.

2021-ல் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம், வளரும் நடிகர்களில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கான இடம் தனித்துவமானது என்பதை உணர வைத்தது.

அந்தப் படத்தில் அவர் ஏற்ற பாத்திரம், ஒரே படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாகிப் பின் அரசியலில் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களால் கைக்கொள்ள முடியாதது.

ஜி.வி.பிரகாஷின் திரை வாழ்வில் முக்கியமான திருப்புமுனையை உருவாக்கிய படம் என்றும் அதனைக் குறிப்பிடலாம்.

பிறகு ’ஜெயில்’, ’செல்ஃபி’, நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான ‘ஐங்கரன்’, ‘அடியே’, ’ரெபல்’, ‘கள்வன்’, ‘டியர்’ உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பில் வந்திருக்கின்றன. இந்த படங்கள் அனைத்துமே ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபடும் வகையிலான கதையமைப்பைக் கொண்டவை.

அவற்றில் ஜி.வி.பிரகாஷ் ஏற்ற பாத்திரங்கள் கூட அப்படித்தான் இருக்கும். நெகட்டிவ் பாத்திரங்களும் இதில் அடங்கும்.

ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு மென்மேலும் மெருகேறி வருகிறது என்பதுதான் திரை விமர்சகர்கள், ரசிகர்களின் வரவேற்பை அவர் பெறக் காரணமாகியிருக்கிறது.

எண்பதுகளில் மோகன், சத்யராஜ் போன்ற ஒருசில நாயகர்களே இப்படிப்பட்ட பாத்திரங்களை, வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் அது போன்ற முயற்சிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் தயாராக இருக்கிறார் என்பதே நிச்சயம் அவருக்கான ரசிகர்களை அதிகப்படுத்தும்.

வெற்றி வசமாகட்டும்!

தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொள்ளும் சோகங்கள், சுகங்களைத் தாண்டி நின்று ஒரு கலைஞன் தனித்துவமான இடத்தை அடைவதென்பது சவாலான ஒன்று. அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் ஜி.வி.பிரகாஷுக்குத் தொடர்ந்து வெற்றிகள் வசப்படட்டும்.

இசையமைப்பாளராக, நடிகராக மட்டுமல்லாமல் இன்னபிற திரைப்பிரிவுகளிலும் அவர் தனக்கான அடையாளத்தையும் இடத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியான உழைப்பும் பிசகாத மனப்பாங்கும் அதனைச் சாத்தியப்படுத்தும் என்று நம்பலாம்.

முப்பத்தேழு வயதை நிறைவு செய்து 38-ம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வாழ்த்துகள்!

– மாபா

You might also like