சிங்கி இறாலுக்கும் சந்திர பாபுவுக்கும் என்ன சம்மந்தம்?

படத்தில் பார்க்கிறீர்களே. இந்த கடல் உயிரின் பெயர் கல் இறால் (Lobster). இதை சிங்கி இறால் என்றும் அழைப்பார்கள். இதில், மணிச்சிங்கி, தூள்பட்டைச் சிங்கி என்று பல வகைகளும் உண்டு.

அமெரிக்காவில், வெள்ளையர்கள் குடியேறிய காலத்தில், இந்த சிங்கி இறால்கள் அதிக எண்ணிக்கையில், அள்ள அள்ள குறையாமல், கடலில் கிடைத்தன. ஆகவே, அந்த காலத்து ஏழை மக்களின் உணவு இந்த சிங்கி இறால்கள்தான்.

மலிவாகக் கிடைத்ததால், சிறைக் கைதிகள், வீட்டு வேலைக்காரர்களின் உணவுகளில் சிங்கி இறால்கள் அதிகம் இடம்பிடித்தன. ‘தினமும் சிங்கி இறால்தானா?’ என்று அவர்களால் சிணுங்க முடியவில்லை.

சிணுங்கியிருந்தால், ‘ஓகோ! துரை, சிங்கி இறால் சாப்பிட மாட்டீங்களோ?’ என்று பிடரியில் அடி விழுந்திருக்கும்.

அமெரிக்க கடலோரங்களில் வாழ்ந்து, சிங்கி இறால்களை உணவாகச் சாப்பிட்ட ஏழை எளிய மக்கள், தங்கள் வறுமையை மறைக்க, சமையலுக்குப்பின் சிங்கி இறால்களின் ஓடுகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்க பழங்குடி மக்களோ சிங்கி இறால்களை உணவுக்குப் பதிலாக வயலுக்கு உரமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இதே கதைதான். பூனைகளுக்கு உணவாகக் கூட சிங்கி இறால்கள் பயன்பட்டிருக்கின்றன. அதன்பிறகு நிலைமை அப்படியே மாறியது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் ரயில் பாதைகள் நீண்டன. ரயில்களில் பயணிகளுக்கு சிங்கி இறால்கள் பரிமாறப்பட்டன. அதுவரை சிங்கி இறாலை பார்க்காத பயணிகளுக்கு அது மிக ருசியாக இருந்திருக்கிறது.

“என்னப்பா? இது இவ்ளோ டேஸ்ட்டா இருக்கு? இவ்வளவு நாளா இந்த மாதிரி சுவையான அயிட்டத்தை எங்கே ஒளிச்சு வச்சிருந்தீங்க?” என்று மக்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.

சாலைகளும், ரயில் பாதைகளும் விரிவடைய விரிவடைய, சிங்கி இறால்களுக்கான தேவை அதிகரித்தது.

1920களில் தகர டின்களில் அடைத்து சிங்கி இறால்கள் விற்கப்பட்டன. நட்சத்திர உணவகங்களில் பணம்படைத்த பெருமுதலாளிகள் சாப்பிடும் உணவாக சிங்கி இறால்கள் மாறின.

‘என்னப்பா இது? இப்ப எல்லாம் நம்ம சாப்பாட்டு மெனுவில் சிங்கி இறாலையே காணோமே?’ என்று சிறைக்கைதிகள் கேட்டபோது, வார்டன்கள், ‘அட ஏம்ப்பா. உலகம் தெரியாம இருக்கீங்க? சிங்கி இறால் இப்ப விற்கிற விலை தெரியுமா? நீங்க கெட்ட கேட்டுக்கு உங்களுக்கு சிங்கி இறால் கேக்குதா?’ என்று கைதிகளின் கொமட்டில் குத்தினார்கள்.

நட்சத்திர உணவகம் ஒன்றில் புகழ்பெற்ற நடிகை ஒருவர் சமைத்த சிங்கி இறாலை எடுத்துக் கடிக்க, அதன் உள்ளே அகற்றப்படாமல் இருந்த கல், நடிகையின் பல்லைப் பதம் பார்க்க, அவர் பல மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு உணவகம் மீது வழக்கு தொடர, இப்படிகூட சுவையான பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

சரி. இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க என்கிறீர்களா? சத்தம் சந்தடி எதுவும் இல்லாம இருந்த நம்ம சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி சந்தை மதிப்பு திடீர்னு கூடி, லக் அடிச்சுது பார்த்தீங்களா?

அதுபோலத்தான் ஒருகாலத்தில் ஒதுக்கி ஓரமாக வைக்கப்பட்டிருந்த சிங்கி இறாலுக்கு இன்னைக்கு இவ்வளவு மவுசு வந்திருக்கு. அதுமாதிரிதான் எல்லாமே. எந்த நேரத்தில் யாருக்கு நேரம் வரும், யாரோட மதிப்பு கூடும்னு யாருக்குமே தெரியாது.

இறுதியாக சிங்கி இறால் பற்றி இரண்டு விந்தையான தகவல்களைச் சொல்லி பதிவை முடிச்சுக்குவோம்.

கடலில் வெப்பம் அதிகரிக்கும் போது சிங்கி இறால்கள் கரையை நோக்கி வரும். குளிர் மிகுந்தால், ஆழ்கடலை நோக்கி நகரும்.

கடலில் குளிரும், கொந்தளிப்பும், அதிகரித்தால், சிங்கி இறால்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே வரிசையில் ஆழ்கடல் நோக்கி, கடலடியில் ஒற்றை வரிசையாக நகர்ந்து ஊர்வலமாகச் செல்லும். இந்த ஒற்றை வரிசையை ஆங்கிலத்தில் ‘கியூ‘ என்று சொல்வார்கள்.

அப்புறம் இன்னொரு தகவல்.

‘நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடி இல்லாமல் வளர்க‘, என்று வாழ்த்துவார்களே. இந்த மாதிரியான வாழ்த்துக்கு மிகப் பொருத்தமான உயிர் சிங்கி இறால்தான்.

காரணம் சிங்கி இறால்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகள் கூட உயிர்வாழக்கூடியவை. ஒவ்வொரு முறை ஓடுகளை கழற்றி, புதுஓடு மாற்றும் போதும் சிங்கி இறால் புத்துயிர் பெற்று, புதுவாழ்வை அடைகிறது.

ஓடு கழற்றுவதன் மூலம் சிங்கி இறால்கள் மீண்டும் மீண்டும் இளமை அடைகின்றன. மூப்படைந்து சிங்கி இறால்கள் இறப்பதேயில்லை.

சிங்கி இறால்கள் முதிர்ச்சி அடைந்தாலும் அவற்றின் பசி குறையாது. உணவின் அளவையும் சிங்கி இறால் குறைத்துக் கொள்ளாது.

அதன் உயிர்ப் பரிமாணமும் மாறாது. சிங்கி இறாலுக்கு இனப்பெருக்க ஆர்வமோ, திறனோ குறையாது. உடல்நலமும் கெடாது. (அடேங்கப்பா!)

இயற்கையாக வாழும் ஒரு சிங்கி இறால், மீனவர்களின் வலையில் பிடிக்கப்பட்டோ, அல்லது சுறா, கணவாய் போன்ற மீன்களுக்கு இரையானால்தான் அதன் வாழ்வு முடியும். மற்றபடி நூறாண்டுகளை கடந்து நோய்நொடியில்லாமல் சிங்கி இறால்கள் சிறப்பாக வாழும்.

– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு 

You might also like