திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் என்று ஆறேழு பெயர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடிப்பவர்களாக இருப்பார்கள். வெகு அரிதாக ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் படங்களில் நடிப்பார்கள். அதனால், தங்களது ஆக்ஷன் படத்திலேயே அவற்றுக்கு இடம் தந்துவிடுவது அவர்களது வழக்கம்.
அதற்கடுத்த நிலையிலுள்ள நாயகர்கள் பலர் வெகு அரிதாகவே ஆக்ஷன் படங்களில் நடிப்பார்கள். பெரும்பாலும் இதர வகைமை படங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அவற்றில் கொஞ்சமாய் ஆக்ஷன் இருக்கும்.
தெலுங்கு திரையுலகில் அப்படியொரு நிலையில் இருக்கும் இளம் நாயகர்களில் ஒருவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்று மிகச்சில படங்களில் நடித்தவர்.
ஸ்ரீராம் ஆதித்யா கதை, திரைக்கதை, இயக்கத்தில் சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள ‘மனமே’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆனது, நாயகன் நாயகி இருவரும் இரண்டு வயது குழந்தையுடன் தோன்றுவதாக அமைந்திருந்தது. அதுவே இப்படம் வித்தியாசமானதாக இருக்குமென்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.
சரி, படம் எப்படியிருக்கிறது?
இரு வேறுபட்ட மனங்கள்!
லண்டனில் எந்நேரமும் மது போதை, பார்த்த பெண்கள் மீதெல்லாம் காதல் என்று வாழ்ந்து வருகிறார் விக்ரம் (சர்வானந்த்). அவரது நெருங்கிய நண்பர் அனுராக் (த்ரிகன்) விபத்தில் இறந்துவிட, குழந்தை குஷியைப் பராமரிக்கும் பொறுப்பு அவரை வந்து சேர்கிறது.
போலவே, குஷியின் தாய் சாந்தியின் தோழியான சுபத்ராவும் (கீர்த்தி ஷெட்டி) அதனை வளர்க்க நேரிடுகிறது. அதற்காக, அவரும் ஹைதராபாதில் இருந்து லண்டன் வருகிறார். அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.
குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, ஒரு நிறுவனத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்வு என்று சமூகம் ஒரு ஆண் மகனிடம் எதிர்பார்க்கும் எந்தவொரு விஷயமும் தனக்குத் தேவையில்லை என்று நினைப்பவர் விக்ரம். அதற்கு நேரெதிரான அத்தனை குணங்களையும் கொண்டவர் சுபத்ரா.
இப்படி இரு வேறுபட்ட மனங்களைக் கொண்ட இரண்டு பேர் எப்படி ஒன்றாக ஒரே வீட்டில் வாழ முடியும்? அனுராக் – சாந்தி வீட்டில் இருவரும் பல்லைக் கடித்துக்கொண்டு, ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்கின்றனர். இந்த நேரத்தில், குழந்தை குஷியின் இயல்பையும் அதன் ஏக்கத்தையும் இருவரும் புரிந்து கொள்கின்றனர். மெல்ல இருவருக்குள்ளும் ஒருவர் மீது ஒருவர் காதல் பிறக்கிறது.
அதனை இருவரும் வெளிப்படுத்தினார்களா, இல்லையா என்று சொல்கிறது ‘மனமே’ திரைப்படம்.
ரொமான்ஸ் காமெடி படம்!
முழுக்க ரொமான்ஸ், காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டுள்ளது ‘மனமே’. குழந்தை குஷி பாத்திரம் மூலமாக நாயகன், நாயகி இடையே காதல் பிறந்து, வளர்ந்து, வலுப்பட்டு, ஒருகட்டத்தில் உலகுக்குத் தெரிவிக்கப்படுகிறது என்பதே இக்கதையின் சிறப்பம்சம்.
அதேநேரத்தில், அக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒரு சில விஷயங்களையே சுற்றி வருவது சிலருக்குப் போரடிக்கலாம். சிலருக்கு, மொத்தக்கதையும் வலிந்து திணிக்கப்பட்ட கதாபாத்திர வார்ப்பை, திருப்பங்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றலாம். முழுக்கச் செயற்கையான, தட்டையான, பிளாஸ்டிக்தனமான காட்சிப் படைப்பாகத் தெரியலாம்.
‘அதெல்லாம் ஒன்றுமில்லை; ஒரு கமர்ஷியல் படத்தில் இப்படித்தானே வெளிப்படுத்த வேண்டிவரும்’ என்பவர்கள் அவற்றைப் புறந்தள்ளுவார்கள். அவர்களை வாரியணைத்துக் கொள்ளும் வகையிலான அனைத்து விஷயங்களும் இந்தப் படத்தில் உண்டு.
அந்த வகையில், ஒரு ‘பீல்குட்’ கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா.
கார்த்திக் – அர்ஜுன் இணையின் வசனம், ஹேஷம் அப்துல் வஹாப்பின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, விஷ்ணு சர்மா – ஞானசேகரின் ஒளிப்பதிவு, பிரவீன் புடியின் படத்தொகுப்பு, ஜோனி ஷெய்க்கின் கலை வடிவமைப்பு மற்றும் காஸ்ட்யூம் டிசைன், விஎஃப்எக்ஸ், டிஐ உட்படத் தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன.
சர்வானந்த் – கீர்த்தி ஷெட்டியை இளம் தம்பதியராகவும், விக்ரம் ஆதித்யாவை அவர்களது குழந்தையாகவும் எண்ணி தியேட்டருக்கு வந்தவர்கள் மட்டுமே கொஞ்சம் ஏமாற்றத்தை எதிர்கொள்வார்கள். ஒரு தெலுங்கு படத்தில் அப்படிப்பட்ட சித்தரிப்பை எதிர்பார்க்கத் தேவையில்லை என்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதால், அந்த ஏமாற்றத்தின் சதவிகிதம் ரொம்பக் கொஞ்சமே..!
ஸ்டைலிஷான சர்வானந்த், அழகு மிளிரும் கீர்த்தி ஷெட்டி, கவர்ச்சிக்கு ஆயிஷா கான், சீரத் கபூர் மற்றும் இதர வெளிநாட்டுப் பெண் கலைஞர்கள், சென்டிமெண்ட்டுக்கு சச்சின் கடேகர், துளசி, சீதா, முகேஷ் ரிஷி, ஜரினா வஹாப், விஜயகுமார் போன்ற மூத்த கலைஞர்கள், நகைச்சுவைக்கு வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் சர்வானந்தின் நண்பராக வருபவர் என்று பலர் இதிலுண்டு. த்ரிகன் மற்றும் ராகுல் ரவீந்திரனுக்கும் இப்படத்தில் இடம் உண்டு.
அனைவரையும் தாண்டி நம்மை வசீகரிக்கிறார் குஷியாக வரும் விக்ரம் ஆதித்யா. அக்குழந்தையின் வியப்பும் சிரிப்பும் வருத்தமும் கேலியுமே நம்மைப் படத்துடன் ஒன்றச் செய்கிறது.
‘மனமே’ ஒரு வழக்கமான தெலுங்கு காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இதில் நாயகன் சர்வானந்த் ‘பிளேபாய்’ ஆக நடித்திருக்கிறார். ‘அதென்னடா பிளேபாய்’ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், பல காட்சிகளில் விளையாட்டுப் பையனாகவும் தோன்றியிருக்கிறார்.
அதனால், ஒரு விளையாட்டுப் பையன் ரொம்பவே பொறுப்பான இளம்பெண் மீது காதல் கொள்வதைச் சொல்லும் படம் என்று ‘மனமே’வை குறிப்பிடலாம். அந்த காதல் பிறக்கக் காரணமாக இருப்பது நாயகன், நாயகிக்கு நெருக்கமான தோழன் – தோழியின் இரண்டு வயது குழந்தை என்பதே ‘இப்படத்தின் சிறப்பு.
அது போதுமே என்பவர்கள் ‘மனமே’வை கொண்டாடலாம்! ஒரு ‘கலர்ஃபுல்’லான கொண்டாட்டத்தை திரையில் காணலாம்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்
#மனமே_விமர்சனம் #சர்வானந்த் #த்ரிகன் #கீர்த்தி_ஷெட்டி #விக்ரம்_ஆதித்யா #ஆயிஷா_கான் #சீரத்_கபூர் #Manamey_Movie_Review #sarvananth #keerthi_shetty #vikram_adithya #ayisa_khan #seerth_kaboor #இயக்குனர்_ஸ்ரீராம்_ஆதித்யா #director_sriram_adhithya