ரிஸ்க் எடுப்பது வெற்றியாக மாறினால் உதாரணமாகிவிடும். தோல்வியாக மாறினால் யாருக்கும் தெரியாது. வெளியே சொன்னால் இதைச் செய்திருக்க வேண்டாமே என்ற அறிவுரை மட்டும் கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுப்பது என்பது சம்பந்தப்பட்ட மனிதன் எடுப்பது அல்ல. அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் உறவுகளும் நட்பும் எடுப்பதுதான் ரிஸ்க்.
எனக்கு, வாழ்க்கையில் யோசித்துப் பார்த்தால் முதன்முதலில் ரிஸ்க் என்பது எட்டு வயதில் நான் தனியாக திரைப்படம் பார்க்கச் சென்ற நிகழ்வைக் குறிப்பிடலாம்.
என் தந்தை என்னை தனியாக படத்துக்குப் போ என்று அனுப்பினார். மகன் திரும்பி வருவானா தொலைந்துபோய்விடுவானா என்பது என் தாய்க்குத்தான் ரிஸ்க். நான் பாட்டுக்கு உற்சாகமாகக் கிளம்பிவிட்டேன். என்னதான் பக்கத்துத் தெருவில் இருந்த தியேட்டராக இருந்தாலும் அந்த 4 மணி நேரமும் ரிஸ்க் என்பது என் தாய்க்குத்தான்.
அதன்பிறகு ஒரு தொழிலைத் தொடர்ந்து நடத்துகிற என் குடும்பத்தினர் தங்கள் மகன் தங்கள் தொழிலைப் பார்த்துக்கொள்வான் என எதிர்பார்க்கும்போது, நான் சினிமாவுக்கு கிளம்பி வந்து விட்டேன்.
திரைத்துறையில் வெற்றி அடைவோமா, இல்லையா என்பது நான் எடுத்த ரிஸ்க் என நான் சொல்லக்கூடாது. அது யாருக்கு ரிஸ்க் என்றால் என் தந்தைக்குத்தான்!
தொழிலைப் பெரிதாக்காமல் மகனை வெளியே அனுப்புகிறோமே.. சரியாக வரவில்லை என்றால் தொழிலும் கெட்டுவிடுமே என்பது அவருடைய ரிஸ்க் தான்!
என்னைப் பொறுத்தவரை விரும்பிய திரைத்துறைக்குச் சென்றது எனக்கு மகிழ்ச்சியே. வந்த சினிமாவில் நான் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே என்னைக் காதலித்தது என் மனைவி எடுத்த ரிஸ்க். சம்பாதிக்காத ஒரு காதலன், அவனை நம்பி காதலித்து அது மணவாழ்வில் முடிவது என்பது அவர் எடுத்த ரிஸ்க்.
ஆகவே நம்முடைய இளம் பிராயத்திலிருந்து, தொழில் செய்வதிலிருந்து, கல்யாணம் செய்வது வரைக்கும் ரிஸ்க் என்பது நாம் எடுப்பது இல்லை. நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள் எடுப்பது என்றே பார்க்கலாம். சுற்றத்தார் வலுவாக இருக்கையில் அந்த ரிஸ்க் அவர்கள் எடுக்கிறார்கள்.
தியேட்டருக்குப் போன சிறுவன் திரும்பி வராவிட்டால் தாய் தான் தேடி அலைந்திருப்பார். திரைத்துறையில் நான் தோற்றுபோயிருந்தால் என்னைத் தாங்கும் பொறுப்பு என் தந்தைக்குத்தான் வந்திருக்கும்.
பணம் சம்பாதிக்காத என்னைக் காதலித்து மணந்த என் மனைவி, என்னால் பொருள்திரட்ட முடியாமல் போயிருந்தால், தான் வேலைக்குப் போய் என்னைக் காப்பாற்றி இருப்பார்.
அப்படி இருக்கையில் நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்று சொல்வதெல்லாம் சும்மா. அவன் தக்கையாக மிதக்கிறான். ஒரு காரியத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கிறான். மற்றவர்கள்தான் அவனைக் கொண்டு சேர்க்கிறார்கள்.
ஆகவே இதுவரை நான் என் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்ததே கிடையாது! இனிமேல் என் வாழ்வில் நடக்கப்போவதும் என் ரிஸ்க் அல்ல; அன்றைய தினம் என் உடன் இருக்கப்போகிறவர்கள் சார்ந்தது அது.
நமக்கு என்ன விருப்பமோ அதைச் செய்துகொண்டு அதன் போக்கில் போகவேண்டியதுதான் வாழ்க்கை. அதற்கு ரிஸ்க், தியாகம் போன்ற உயர்வு நவிற்சியான சொற்கள் எல்லாம் சொல்லவேண்டியது இல்லை.
– நன்றி: அந்திமழை, ஏப்ரல்-2024 மாத இதழ்.