கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள்: கவனிக்குமா அரசு?

கே.ஆர்.பாலாஜி

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,14,000; முதுநிலை பொறியியல் படித்தவர்கள் 2,14,000 பேர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) என்பது தமிழக அரசுப் பணிக்கு தேவையான நபர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாக தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.

இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம். தொடக்கத்தில் இதன் பெயர் தி மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் (The Madras Service Commission). மாநில சீரமைப்புக்குப் பின் மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படத் தொடங்கியது.

சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்ட பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமாக மாறியது.

வருடாந்திர கால அட்டவணை:       

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருடம் தோறும் அரசுப் பணிகளுக்கு வருடாந்திர கால அட்டவணை வெளியிடுகிறது. கால அட்டவணையில் அரசுப் பணியிடங்கள், தேர்வு நடைபெறும் மாதம், தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எனவே தேர்வர்கள் கால அட்டவணைக்கு ஏற்ப தேர்வுக்கு தங்களை தயார் செய்வர்.   ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி தேர்வுகளை நடத்துவது கிடையாது.

மேலும், தேர்வு முடிவுகளை மிகவும் தாமதமாக வெளியிடுகிறது.

(உதாரணமாக : 2022ல் நடைபெற்ற குரூப் 2, 2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் 2023ல் வெளியிடப்பட்டது; அதன் முதன்மை தேர்வு  முடிவுகள் 2024இல் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகள் தற்சமயம் வெளியிட்டு இருந்தாலும் கலந்தாய்வு, பணியாணை வழங்க இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம். அப்படியென்றால் 2022ல் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டு 2025ல் பணியில் சேரும் நிலை உள்ளது).

இந்த மாதிரியான தேர்வு நடைமுறைகள் தேர்வர்களிடையே மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை முறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். 

தனியார் மயத்தால் பறிபோன சமூகப் பாதுகாப்பான வேலை:

ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கையின் அமலாக்கத்தின் காரணமாக அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் சரி பாதி காலிப் பணியிடங்களை 5 ஆண்டுகள் வரை தற்காலிகம் மற்றும் அவுட்சோர்சிங் முறை மூலம் பணியமர்த்தி கொள்வதும்; 10 ஆண்டுகள் கடந்த பின்பு நிரந்தரத்தன்மை கொண்ட காலிப் பணியிடங்களே இல்லை என்கிற விபரத்தை வெளி யிடுவதும் என அரசுகள் செயல்படுகின்றன.

தற்போது தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் துணை ஆட்சியர் துவங்கி அலுவலக உதவியாளர்கள் வரை 6 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிற அதே வேளையில், தேர்வாணையம் துவக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 2023ஆம் ஆண்டு தான் அதிகபட்சமாக 10,000 காலிப் பணியிடங்களுக்கு  தேர்வு அறிவிப்பை வெளியிட்டது என்பது வேதனையானது.

வரலாற்றிலேயே இல்லாத அளவு இந்தியாவில் வேலையில்லா நெருக்கடி அதிகரித்திருக்கிற சூழலில் மிகக் குறைவான பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிக்கப்படுவது முதல், நடந்து முடிந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படும் வரை தேர்வர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம்.

இதனால் பெரும்பாலான தேர்வர்களின் அரசு வேலை வாய்ப்பு என்பது கனவாகவே உள்ளது.

வயது வரம்பு:

தற்போது வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான வயதுவரம்பு 39 ஆகவும் உள்ளது.

யுபிஎஸ்சி தேர்வுகள் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கின்றன; டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு சரியான கால இடைவெளியில் நடைபெறவில்லை. இதனால் வயது வரம்பு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

கடந்த 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளில் 5 முறை யும்; 2000 முதல் 2024 வரை கடந்த 25 ஆண்டு களில் குரூப்1 தேர்வு மொத்தம் 13 முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

சீரற்ற இந்த கால இடைவெளியினால் தேர்வர்களின் வயது வரம்பு உச்சத்தை அடைந்து விடுகிறது; எனவே தேர்வை தொடர்ந்து எழுத முடியாத நிலை உள்ளது.

டிஆர்பி தேர்வைப் போல் வயது வரம்பு தேவை:

பள்ளிக் கல்வித்துறையில் டிஆர்பி போட்டித் தேர்வுக்கான வயது வரம்பை 40லிருந்து 45 ஆக திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசாணை (G.O 144-18/10/2021) வெளியிட்டுள்ளது. இதில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் 2023 ஆம் ஆண்டு பொதுப் பிரிவினருக்கு 53, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 58 ஆகவும் அக்டோபர் 2023 இல் உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

இதேபோல் டிஎன்பிஎஸ்சியிலும் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற இளைஞர்களின் பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பை 45 ஆகவும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 50 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

18 ஆண்டுகளுக்கு முன்பு 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் வயது வரம்பை (OC -35; BC, MBC, SC/ST-40) உயர்த்தியது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசோ, திமுக அரசு உயர்த்திய வயது வரம்பை மறுபடியும் 35 ஆக குறைத்தது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று வயதுவரம்பு குறைப்பு நடைபெறவில்லை.

பல்வேறு மாநிலங்களிலும் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பைப் பார்க்கும் போது, தகுதி இருந்தும் திறமை இருந்தும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் கனவுகள் –

குறிப்பாக கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் அரசுப் பணி கனவினை எட்ட உரிய வாய்ப்புகள் கிடைக்கும் முன்னரே, வயது உச்சவரம்பை அடைந்ததாகக் கூறி போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் வேதனை தமிழகத்தில் மட்டும்  தான் தொடர்கிறது.

உதாரணமாக, குரூப் 1 வயது வரம்பு (OC): ராஜஸ்தான்-45, தெலுங்கானா-44, ஆந்திரா-42, மத்தியப் பிரதேசம்-40, உத்தரப் பிரதேசம் -40. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு (BC, MBC, SC/ST) இந்த வரம்பிலிருந்து சுமாராக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை.

எனவே, தமிழ்நாட்டில், வயது வரம்பு பொது பிரிவினருக்கு 45 ஆகவும் BC, MBC, SC, ST பிரிவினருக்கு 50 ஆகவும் உயர்த்தினால் அனைத்து சமூக பிரிவினருக்கும் வேலை வாய்ப்பில் நீதியை உரு வாக்கித் தரும்.

வெளிப்படைத் தன்மையும் விடைகள் வெளியிடுதலும்:

மேற்கண்ட பின்னணியில், ஆண்டுக் கணக்கில் தங்களை வருத்திக்கொண்டு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மீது நம்பகத்தன்மை இல்லாத நிலை சமீப காலங்களாக உருவாகியுள்ளது.

எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வைப் போல் தேர்வர்க ளுக்கு விடைத்தாள் நகலை – கார்பன் காப்பி (OMR சீட்) கிடைக்கும் வண்ணம் தேர்வை நடத்த வேண்டும்.

தேர்வு நடத்தி ஒரு வார காலத்திற்குள் தேர்வாணையம் வெளியிடும் உத்தேச விடைகளுக்கும் இறுதியாக வெளியிடப்படும் விடைகளுக்கும் ஏறக்குறைய 10 முதல் 20 கேள்விக்கான வேறுபாடுகள், தேர்வர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளும் உள்ளன. இதனால் தேர்வாணையத்திடமே  இறுதியான உறுதியான  விடைகள் இல்லை என்பது தெளிவாகிறது.

கவுன்சிலிங் நடைமுறை:

கவுன்சிலிங் தற்போது 2:5 விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. இதனால் சிலர் பணிகளைப் பெற்றாலும் பெரும்பான்மையான தேர்வர்கள் ஏமாற்றமடையும் சூழல் உள்ளது. எனவே கவுன்சிலிங்கில் 1 பதவிக்கு 1:5 விகிதாச்சாரம் முறையை பின்பற்ற வேண்டும்.

காலிப் பணியிட  காத்திருப்புப் பட்டியல்:

காலிப் பணியிட காத்திப்புப் பட்டியல் கால நிர்ணயம் ஒரு வருடமாக நிர்ணயம் செய்திட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஒரு பணிக்கு தேர்வானவர்கள் காத்திருப்பு பட்டியல் ஒரு வருடமாக உள்ளது.

இதன் மூலம் காத்திருப்பு பட்டியலில் இருப்பவருக்கு பணி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இம்முறையை பின்பற்றுவது இல்லை. இம்முறையினைப் பின்பற்றினால் காத்திருப்பு பட்டியலில் இருப்போருக்கு வேலைவாய்ப்பு உறுதியாகும் என்ற நம்பிக்கை முதலில் ஏற்படும்.

வேலைக்காக காத்திருப்பவர்கள்:

மேலும், தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக என்றாவது ஒருநாள் அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு  வேலை வாய்ப்பு அலுவல கத்தில் காத்திருப்பவர்களில் 60 வயதிற்கு மேல் 7000 பேர் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 முதல் 60 வயது வரை 2,38,358 பேரும், 31 முதல் 45 வயது வரை 17,034,31 பேரும் 19 முதல் 30 வயது வரை 23,92,409 பேரும்,

18 வயதிற்குள் 10 லட்சத்து 83 ஆயிரத்து 837 பேரும் என அரசு வேலைக்காக 54,25,114 பேர் 2024 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதில் ஆண்கள் 25 லட்சத்து 134 பேர், பெண்கள் 29 லட்சத்து 24 ஆயிரத்து 695 பேர்; திருநங்கைகள் 285 பேரும் மாற்றுத்திறனாளிகள் 1,49,647 பேரும் அடங்குவர்.

இவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரி யர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,14,000; முதுநிலை பொறியியல் படித்தவர்கள் 2,14,000 பேர்.

காலிப் பணியிடங்களும்  5 ஆண்டுகளில் தேர்வு அறிவிப்பும்:

வேலையில்லா நெருக்கடி இதுவரை இல்லாத அளவில் அதிகரித்திருப்பது ஒரு புறம்; மறுபுறம் 54 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் சூழலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்வாணையம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தி இருக்கும் தேர்வு விபரங்கள் அதிர்ச்சியளிக்கிறது.

* 2017இல் 4000 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வு  நடத்தப்பட்டு 2018 நவம்பர் மாதம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

* 2022ல் 6000 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டு முதல் நிலைத் தேர்வு 2022 ஆண்டும் முதன்மைத் தேர்வு 2023 ஆண்டும் கவுன்சிலிங் 2024 வருகிற ஜூன் 20 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

* குரூப் 1 தேர்வு 2019இல் 62 பணியிடங்களுக்கும் 2021 இல் 31 பணியிடங்களுக்கும் நடைபெற்றது.

* குரூப் 4 தேர்வு 2021 இல் 13,000 இடங்களும், 2024இல் வருகிற ஜூன் 9ஆம் தேதி 7000 இடங்களுக்கும் பங்கேற்க கூடிய தேர்வும் நடைபெற உள்ளது. ஆக, காலியாக உள்ள பணியிடங்கள் என்ணிக்கைக்கும் தேர்வாணையம் நடத்தும் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கும் மிகப்பெரிய இடை வெளி உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் தேர்வர்களின் குரலாகவும் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களின் கோரிக்கைகளாகவும் சிலவற்றை முன்வைக்கிறோம்:

1. தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வு நடத்தி; வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கிட வேண்டும்.

2. யுபிஎஸ்சி தேர்வு போல் குரூப்  1,2,4 ஆகிய தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்திட வேண்டும்.

3. குரூப் 1 முதல்நிலை தேர்விற்கான தேர்ச்சி விகிதத்தை 1:20 என்ற விகிதத்தில் இருந்து 1:50 விகிதமாக மாற்ற வேண்டும்.

4. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கான வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த டிஆர்பி தேர்வைப் போல் தேர்வர்களின் விடைத்தாள்களின் கார்பன் நகலை (OMR சீட்) டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு  வழங்க வேண்டும்.

5. ஆணையம் நடத்தும் தேர்விற்கான இறுதியான உறுதியான உத்தேச விடைகளையும் இறுதிப்படுத்தப்பட்ட விடைகளையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

6. திடமான உறுதியான முடிவுகளை எடுத்திட டிஎன்பிஎஸ்சி ஆணையத்தில் அனைத்து உறுப்பினர்களையும் நியமித்திட வேண்டும்.

7.  யுபிஎஸ்சி தேர்வு போல் டிஎன்பிஎஸ்சி தேர்வும் ஆண்டுகால அட்டவணைப்படி நடத்தப்பட வேண்டும்.

8. பாடத்திட்டங்களை அடிக்கடி மாற்றக்கூடாது.

– கே.ஆர்.பாலாஜி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர்.

You might also like