அரசியல் களத்தை ஆளும் திரை நட்சத்திரங்கள்!

திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் வெற்றி பெறுவதும் இயல்பான ஒன்று. பிரபலமாக இருப்பது அவர்களுக்கான அறிமுகத்தை மக்களுக்குத் தெரிய வைக்க, அவர்களது கட்சியின் மீதான் அபிமானம் வெற்றி மாலையைப் பெற்றுத் தரும்.

அதுவும் திரை நட்சத்திரங்களுக்கு எதிரான கருத்துகளை அள்ளிவீசும் தலைவர்கள் நிறைந்திருக்கும் கட்சிகளில் அவர்களுக்கென்று தனியிடம் தரப்படுவதும், தேர்தலில் வெற்றிகளைச் சுவைப்பதும் நிச்சயம் கவனிக்கத்தக்கதாக அமையும்.

அந்த வகையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலிலும் சில திரை நட்சத்திரங்கள் வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.

சுரேஷ் கோபி:

மலையாள நடிகர் சுரேஷ் கோபியை நம்மூர் ரசிகர்களும் நன்கறிவார்கள். ‘தீனா’ படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், மலையாளத்தில் இருந்து தமிழில் ‘டப்பிங்’ செய்யப்பட்ட தி சிட்டி, கமிஷனர், ஏலம் போன்ற படங்கள் அவரது திரையாளுமை எப்படிப்பட்டது என்பதைச் சொல்லும்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, திரைத்துறையில் சொல்லும்படியாக அவரது பங்களிப்பு அமையவில்லை.

சமீபகாலமாக வெளியான ஓரிரு படங்களே அவரை மீண்டும் அடையாளப்படுத்தியிருக்கின்றன.

இந்தச் சூழலில், திருச்சூர் மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றிருப்பது கேரளாவில் கூட ஆச்சர்யமாகத்தான் நோக்கப்படுகிறது. ஏனென்றால், அம்மாநிலத்தில் பிஜேபிக்கு கிடைத்திருக்கும் முதலாவது பெரிய வெற்றி இது.

வரும் ஆண்டுகளில் சுரேஷ் கோபி ஆற்றப்போகிற மக்கள் பணிகளே சக திரைக்கலைஞர்கள் மத்தியிலும் வாக்களித்தவர்களிடமும் நன்மதிப்பினை அதிகரிக்கச் செய்யும்.

கங்கனா ரனாவத்:

தமிழில் ‘தாம் தூம்’, ‘தலைவி’ படங்களில் நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத்.

அவ்வப்போது வலதுசாரித்தனமாகக் குரல் கொடுத்து பல சர்ச்சைகளில் ‘வான்டெட்’ ஆக வந்து சிக்கிக் கொள்பவர்.

‘அப்படிப்பட்டவருக்கு ஏன் பிஜேபியில் சீட் கொடுக்கப்பட்டது’ என்று கேட்டவர்கள் பலர்.

அவர்கள் கைகட்டி, வாய் மூடி மௌனித்திருக்கும் வகையில், இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் கங்கனா.

சமீபகாலமாக அவர் நடித்த இந்திப் படங்கள் பெரிய வசூலைக் குவிக்காத சூழலில், இந்த வெற்றி அவருக்குப் புதிய பீடங்களைப் பெற்றுத் தரலாம் என்று நம்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஹேமமாலினி:

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஹேமமாலினி.

இவர் யார் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை.

தமிழ்ப் படங்களில் நடிக்க முடியாமல் மும்பை சென்று, அங்கிருந்த முன்னணி ஹீரோக்களுடன் அவர் ஜோடியாக நடித்தது நம்மில் பலர் அறிந்த கதை.

பிஜேபியின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவராக இருந்தாலும், இவரது அரசியல் பொது வாழ்க்கை குறித்து சாதாரண ரசிகர்கள் அறிந்துகொள்ளும் விஷயங்கள் மிகக்குறைவே.

சத்ருகன் சின்ஹா:

ஹேமமாலினி காலத்து ஆட்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா, ‘தனக்கு வயதாகவில்லை’ எனும்விதமாக எதிரே இருப்பவரை நம்பச் செய்யும் தகுதி கொண்டவர்.

பிஜேபியில் இருந்த அவர் திருணமூல் காங்கிரஸுக்கு சென்றதும், இப்போதைய தேர்தலில் மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதும் அவரது ரசிகர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

 

மனோஜ் திவாரி:

போஜ்புரி சினிமா நடிகரான இவர், வடகிழக்கு டெல்லி தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

டெல்லியில் ஏற்கனவே இப்பதவியை வகித்து, மீண்டும் தக்கவைத்துக் கொண்டவர் இவர் ஒருவரே.

இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் காங்கிரஸ் வேட்பாளரான கன்னையா குமார்.

மாணவர் பேரவை தலைவராக நன்கறியப்பட்டவர். அவரை சுமார் 1,38,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் மனோஜ் திவாரி.

அருண் கோவில்:

‘ராமாயணம்’ தொடர் டிவியில் ஒளிபரப்பானபோது, அதனைக் கண்டு மனம் குளிர்ந்தவர்கள் பலர்.

நினைவலைகளில் அதனைத் தேக்கி வைத்திருந்தவர்களை நேரில் சந்தித்து, தனது ‘கன்னி’ தேர்தலுக்கு வாக்கு சேகரித்தார் அருண் கோவில்.

‘முதல் அடியே வெற்றி’ என்பது போல, உத்தரப்பிரதேசத்தின் மீரட் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ரவி கிஷன்:

மோனிஷா என் மோனலிசா, சங்கத்தமிழன் ஆகிய தமிழ் படங்களில் தலைகாட்டியவர் போஜ்புரி நடிகர் ரவிகிஷன்.

ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் வெளியான ‘லாப்தா லேடீஸ்’ படத்திலும் இன்ஸ்பெக்டர் ஆக வந்து அசத்தியிருந்தார்.

தற்போதைய தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட காஜல் நிஷாத் ஒரு போஜ்புரி நடிகை. அந்த வகையில் சக கலைஞரின் பிரபல்யத்தை மீறி வெற்றி பெற்றிருக்கிறார் ரவி கிஷன்.

பவன் கல்யாண்:

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரர் இவர்.

இவரது ஜனசேனா கட்சி பாஜக, தெலுங்கு தேசம் கட்சி உடன் கூட்டணி சேர்ந்து இத்தேர்தலில் போட்டியிட்டது.

ஆந்திராவின் பீதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

இவரது ஜனசேனா கட்சி 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

ரச்னா பானர்ஜி:

‘பூவரசன்’, ‘டாட்டா பிர்லா’, ‘வாய்மையே வெல்லும்’ ஆகிய தமிழ் படங்களில் ரச்னாவை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நாயகியாக நடித்த இவர், இப்போது திருணமூல் காங்கிரஸ் கட்சியில் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கிறார். மேற்கு வங்கத்தின் ஹுக்ளி தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் திரை நட்சத்திரங்களாகவும் அரசியல்வாதிகளாகவும் திகழ்ந்து வரும் ஜுன் மலியா, சதாப்தி ராய், தேவ் அதிகாரி ஆகியோரும் இந்த தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று எம்பி ஆகியிருக்கின்றனர்.

திருணமூல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்தும் வெற்றிவாகை சூடியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் திரைப்பட இயக்குனர்கள் தங்கர் பச்சான், மு.களஞ்சியம் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினர். ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்த வரிசையில் சேர்ந்திருக்கக் கூடும்.

திரை நட்சத்திரமாக இருப்பது மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுத் தந்து அரசியலில் பதவியைப் பெற்றுத் தந்தாலும், அதனைத் தக்க வைப்பது அவரவர் செயல்பாட்டைப் பொறுத்தது.

இந்த தேர்தல் முடிவுகள் அப்பயணத்தின் தொடக்கத்தைக் காட்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியைக் காண இன்னும் 5 ஆண்டுகள் மீதமிருக்கின்றன..!

-மாபா

You might also like