ஹிட் லிஸ்ட் – புதுமுகங்களுக்கு ஹிட்டாக அமைந்ததா?

ஒன்றாகப் பணியாற்றிய திரைக்கலைஞர்கள், தங்களது அடுத்த தலைமுறை அதே துறையில் அறிமுகமாவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது வெகு அபூர்வமாக நிகழும்.

தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சூரியகதிர் காக்கள்ளார், கே.கார்த்திகேயன் இருவரையும் இயக்குனர் நாற்காலியில் அமரவைத்த கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்காவை அந்த படத்தின் நாயகனாகத் தேர்ந்தெடுத்ததும் அப்படியொரு வரிசையில் இடம்பெறத்தக்க ஒன்று.

2022 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம், தற்போது திரையை எட்டியிருக்கிறது. இதில் சரத்குமார், சித்தாரா போன்ற மூத்த நட்சத்திரங்களின் பங்களிப்பும் உண்டு.

‘ஹிட் லிஸ்ட்’ படத்தில் நாயகன் மற்றும் இயக்குனர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்துள்ளது?

ஆட்டுவிக்கும் ‘மர்ம நபர்’!

தாய் (சித்தாரா), தங்கை (அபி நட்சத்திரா) உடன் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு வருபவர் விஜய் (விஜய் கனிஷ்கா).

வள்ளலார் வழியில் ‘உயிர் கொல்லாமை’ கொள்கையைக் கடைப்பிடிப்பவர்.

அசைவ உணவுகளுக்கு நிகராக ஆற்றல் தரும் சைவ உணவுகளைப் பரிந்துரைக்கும் செயலி ஒன்றை, அசிஸ்டெண்ட் கமிஷனர் யாழ் வேந்தன் (சரத்குமார்) மனைவியோடு இணைந்து உருவாக்குகிறார் விஜய். அதனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் யாழ்வேந்தனைப் பங்கேற்கச் செய்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும், விஜய்க்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது. அதனை அவர் புறக்கணிக்கிறார். மீண்டும் மீண்டும் அந்த எண்ணில் இருந்து அழைப்பு வர, அதனை ‘அட்டெண்ட்’ செய்கிறார்.

எதிர்முனையில் இருப்பவர் விஜய்யின் தங்கையையும் தாயையும் கடத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் விஜய், நேராக யாழ் வேந்தனிடம் சென்று விஷயத்தைச் சொல்கிறார்.

அந்த தகவல் உண்மையா, இல்லையா என்று உறுதிப்படுத்துமாறு போலீசாரிடம் கூறுகிறார் யாழ்வேந்தன். அது உறுதிப்படுத்தப்பட்டதும், அந்த மர்ம நபரின் எதிர்பார்ப்பு என்னவென்று அறியும் வகையில், விஜய்க்கு தெரியாமல் அவரது மொபைல், வாகனத்தில் உளவு அறியும் கருவிகளைப் பொருத்த உத்தரவிடுகிறார்.

காவல் நிலையத்தில் இருக்கையில் விஜய்யை வீடியோகாலில் அழைக்கிறார் அந்த மர்ம நபர். உடனே அங்கிருந்து சொல்வதுடன், தான் சொன்னதை அப்படியே செய்ய வேண்டும் என்கிறார்.

அந்த நபர் சொல்வதைத் தான் அப்படியே செய்யத் தயாராக இருப்பதாக யாழ்வேந்தனிடம் சொல்கிறார் விஜய். அதையடுத்து, அவரது சட்டையில் பட்டன் கேமிராவைப் பொருத்துகின்றனர் போலீசார். அவருக்குத் தெரியாமல் இரண்டு பைக்குகளில் பின்தொடர்கின்றனர்.

அந்த மர்ம நபர் சொன்னபடி ஒரு கோழிக்கடைக்குள் புகுந்து சேவல் ஒன்றை வாங்கி வருகிறார் விஜய். வீட்டிற்குச் சென்றதும், அதனைக் கொல்லுமாறு கூறுகிறார் அந்த மர்ம நபர்.

ரொம்பவே தயங்கும் விஜய், தனது தாயையும் தங்கையையும் அந்த நபர் துன்புறுத்துவதை வீடியோ காலில் கண்டதும் அதனைச் செய்கிறார்.

அடுத்த நாள் காலையில், மீண்டும் விஜய்யை தொடர்பு கொள்கிறார் அந்த நபர். ‘நேற்று ஒரு சேவலைக் கொன்றது போலவே இன்று ஒரு மனிதனைக் கொல்ல வேண்டும்’ என்கிறார். அவர் சொன்னபடியே, வடசென்னையில் உள்ள ஒரு இடத்திற்குப் போகிறார் விஜய்.

அங்கு ஒரு ரவுடி அடியாட்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறார். அப்போது, எதிரே இருக்கும் நபரைத்தான் கொல்ல வேண்டும் என்கிறார் அந்த மர்ம நபர். அதனைக் கேட்டு, பயத்தில் உறைகிறார் விஜய்.

அதன்பிறகு என்ன நடந்தது என்று சொல்கிறது ‘ஹிட் லிஸ்ட்’டின் மீதி. விஜய்யை ஆட்டுவிக்கும் அந்த மர்ம நபர் யார் என்பது கிளைமேக்ஸில் தெரிய வருகிறது.

மர்ம நபரின் துரத்தல்களுக்கேற்ப விஜய் செயல்படும் காட்சிகள் நாமே அந்த துரத்தலில் பங்கேற்ற ‘எபெக்டை’ ஊட்டுகின்றன.

அந்த நபர் யார் என்பது நமக்குத் தெரியவரும் காட்சிகள் மிக மெதுவாகத் திரையில் நகர்கின்றன. இரண்டையும் பொருத்திப் பார்த்தபிறகு திருப்தியை உணர்ந்தால், உங்களுக்குப் படம் பிடித்துவிட்டதாக அர்த்தம்.

சரத்குமாரின் உதவி!

‘புரியாத புதிர்’ முதல் ‘ஜக்குபாய்’ வரை சரத்குமாரை நாயகனாகக் கொண்டு எட்டு படங்கள் இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். அவருக்கு ‘சூர்யவம்சம்’ என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத் தந்தவர் விக்ரமன்.

இருவரோடும் கொண்ட நட்பின் அடிப்படையில், ‘ஹிட் லிஸ்ட்’டில் தனது பங்களிப்பைத் தந்திருக்கிறார் சரத்குமார். இந்த படம் குறித்து பட்டிதொட்டியெங்கும் தெரியச் செய்யும் முகமாக இருப்பது அவரே.

விஜய் கனிஷ்காவுக்கு இது நல்லதொரு அறிமுகம் என்றே சொல்ல வேண்டும். முக்கால்வாசி படம் வரை அவரது நடிப்பு அருமையாக உள்ளது. இடைவேளைக்கு முன்னதாக வரும் சண்டைக் காட்சியில் அவரது செயல்பாடு அற்புதம்.

அதேநேரத்தில், திரைக்கதையில் வரும் பிளாஷ்பேக்கும் அதனையொட்டிய இடங்களும் போதிய திருப்தியைத் தரவில்லை. அப்போதுதான், அவர் ஒரு புதுமுகம் என்பது நம் நினைவுக்கு வருகிறது.

ஐஸ்வர்யா தத்தா, பாலசரவணன் வரும் ஆரம்ப காட்சிகள் லேசாக நம்மை சிரிக்க வைக்கின்றன. கிங்க்ஸ்லி, லதா ராவ் ஜோடியும் லேசாக கிச்சுகிச்சு மூட்டுகிறது.

முனீஸ்காந்தும் தன் பங்குக்கு சில ‘ஒன்லைனர்’களை அள்ளி விடுகிறார். ஆனால், பின்பாதியில் ரசிகர்கள் சிரிக்க ஒரு வாய்ப்பு கூட தரவில்லை திரைக்கதை.

ஸ்மிருதி வெங்கட் வரும் காட்சிகள் நெகிழ்வை ஊட்டுவதாக உள்ளன.

சித்தாரா, அபி நட்சத்திராவின் பங்களிப்பும் இதில் அதிகமில்லை. அவர்களைப் போலவே சமுத்திரக்கனியும் மிகச்சில நிமிடங்கள் தலைகாட்டியிருக்கிறார்.

கௌதம் மேனன், ‘கேஜிஎஃப்’ ராமச்சந்திர ராஜு இதில் வில்லன்களாக வருகின்றனர். அவர்கள் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் நிச்சயம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்.

எஸ்.தேவராஜ் எழுதிய கதைக்கு திரைக்கதை வசனம் அமைத்திருக்கிறார் இயக்குனர்களில் ஒருவரான சூரியகதிர். பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.

ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண், படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம், கலை இயக்குனர் அருண் சங்கர் துரை, சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் விக்கி, ஃபீனிக்ஸ் பிரபு உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு சிறப்புடன் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

‘லாஜிக் மீறல்கள்’ அதிகம்!

முதன்முறை படத்தைப் பார்க்கும்போது, நமக்குப் பெரிதாக லாஜிக் மீறல்கள் தென்படாது. த்ரில்லர் பட ரசிகர்களோ, முக்கால் கிணறு தாண்டும் வேளையில் சில சந்தேகங்களை எழுப்புவார்கள். அவற்றுக்கு இந்தப் படம் பதிலளிக்கவில்லை.

மர்மநபர் சித்தாரா, அபி நட்சத்திராவை கடத்தியதைப் பார்த்ததாக, ஒரு நபர் குடிபோதையில் போலீசாரிடம் சாட்சியம் கூறுவார்.

போலவே, இடைவேளைக்குப் பிறகு வரும் சண்டைக் காட்சியொன்றில் விஜய் கனிஷ்கா இருக்குமிடத்திற்கு சரத்குமார் சட்டென்று வருவார். அந்த காட்சிகளில் லாஜிக் மீறல்கள் வெளிப்படையாகத் தெரியவரும்.

கூடவே, ரத்தம் தெறிக்கும் வன்முறையும் திரையில் தென்படுகிறது.

‘லாலாலா..’ இசையை மனதுக்குள் கேட்டபடி விக்ரமன் மகன் அறிமுகத்தைப் பார்க்க நினைத்தவர்களுக்கு அக்காட்சிகள் ‘அசூயை’யை ஏற்படுத்துவது நிச்சயம்.

முன்னரே சொன்னது போல, நாயகனை அந்த மர்ம நபர் துரத்துவது ஒருவகை உணர்வையும், பிளாஷ்பேக்கில் தெரிய வரும் சில உண்மைகள் நம்மிடம் வேறொரு உணர்வையும் எழுப்பும்.

அவை பொருந்திப் போனால் மட்டுமே ‘ஹிட் லிஸ்ட்’ நமக்குப் பிடிக்கும்.

அவ்வாறு நோக்கினால், அனைத்து ரசிகர்களையும் இப்படம் திருப்திப்படுத்துமா என்ற கேள்விக்கான பதில் ‘புரியாத புதிர்’ தான்!

மற்றபடி, விஜய் கனிஷ்கா மற்றும் இயக்குனர்கள் இணை சூரியகதிர் காக்கள்ளார் – கே.கார்த்திகேயனுக்கான சிறந்த அறிமுகமாக ‘ஹிட் லிஸ்ட்’ இருக்குமென்று தாராளமாகச் சொல்லலாம்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like