புகையிலை எந்த வடிவிலும் வேண்டாம்!

மே 31 – உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஒரு பொருள் தரும் நன்மைகளை விட தீமைகள் அதிகம் இருந்தால் அதனைப் புறக்கணிப்பது மனித வழக்கம். ஆனால் போதைப் பொருட்களுக்கு மனதைப் பறிகொடுக்கும் மனிதகுலத்தைப் பார்க்கையில் விளக்குகளை தேடும் விட்டில்பூச்சிகளே நினைவுக்கு வருகிறது.

திட, திரவ, வாயு வடிவங்களில் போதைப்பொருள்கள் விதவிதமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல நோய்கள் தீர்க்கும் அருமருந்தாகவும் பயன்படுகின்றன என்பது முரணை ஏற்படுத்தும் உண்மை.

அவற்றுக்கான மூலப்பொருட்களை தரும் தாவரங்களில் முதன்மையாக இருப்பது புகையிலை.

இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12.8 லட்சம் பேர் புகையிலையால் மரணமடைகின்றனர். இவர்களில் 3.5 லட்சம் பேர் புகைப் பழக்கம் உள்ள சுற்றுப்புறத்தினால் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

நம்மால் தடுக்க முடியும்!

மனிதர்கள் தெரிந்தே செய்கிற தவறுகளால் ஏற்படும் மரணங்களை ‘தடுக்கக்கூடிய மரணங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது புகையிலை.

புகையிலையில் உள்ள நிகோடின் ஆனது நுரையீரல் பாதிப்பு உட்படப் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இவற்றை எளிதில் தடுக்க நம்மால் முடியும்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் வெற்றிலையோடு புகையிலையையும் சேர்த்துச் சுவைக்கும் பழக்கம் நம்மூரில் உண்டு. சுருட்டு, பீடி, சிகரெட் என்று பல்வேறு வடிவங்களில் புகைபிடிக்கும் வழக்கம் அதனை புறந்தள்ளியது.

மனித உடலில் சுவாச மண்டலம் சார்ந்த பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் புகையிலையை அறவே ஒழிப்பது சாத்தியப்படாமல் போனதற்கு முக்கியக் காரணம், சம்பந்தப்பட்டவர்களின் தினசரி வாழ்வில் ஒன்றாகக் கலந்திருப்பதே.

உணர்வில் கலந்த போதை!

வேக யுகத்தில் தினசரி வாழ்வின் ஒவ்வொரு கணமும் மன அழுத்தத்தை தருபவைதான். அதிலிருந்து தப்பிக்க அல்லது விடுபட அல்லது எதிர்கொள்ள ஏதாவது ஒரு ஆறுதல் தேவைப்படுகிறது.

சக மனிதர்களிடம் அதனைத் தேடாமல் போதைப்பொருட்களை நோக்கி ஒடுகையில், அதற்கான குறைந்த விலை வழியாக அமைந்துவிடுகிறது புகையிலை.

‘புகை நமக்குப் பகை’ என்பதை உணர்வதற்குள் சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையும் அகாலத்தில் முடிந்து விடுகிறது.

பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், கேளிக்கைக்கான இடங்கள் என்று எங்கும் புகைப் பிடிப்பவர்களைக் காண முடியும். சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை மட்டுமல்லாமல் தினசரி வழக்கங்களிலும் இது ஒன்று கலந்துள்ளது.

நம்மவர்கள் கழிவறைக்குச் செல்வதற்கு முன்பாகவும், உணவு உண்ட பின்பும், பணியில் சோர்வு அல்லது எரிச்சல் அல்லது பதட்டம் ஏற்படும் சூழல்களிலும் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

இன்று சிகரெட், மதுவை விட குட்கா, பான், ஜர்தா பாக்கெட்டுகள் எளிதாகக் கிடைக்கும் போதைப் பொருட்களாக உள்ளன. மத்திய, மாநில அரசுகள் எத்தனை தடைகள் விதித்தாலும், இவற்றின் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது.

இவற்றைச் சுவைப்பவர்கள் சுற்றுப்புறத்தை அசிங்கப்படுத்துவது ஒருபுறமிருக்க வாய், பற்கள், தொண்டைப் பகுதி தொடங்கி உணவு மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள், இவற்றை ஒழிப்பதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

எனவே, இந்த புகையிலை எதிர்ப்பு தினத்தில் ‘எந்த வடிவிலும் புகையிலையை நம் வாழ்க்கைக்குள் அனுமதிக்கக் கூடாது’ எனும் உறுதியை ஏற்க வேண்டும்.

கைவிடுவதில் உறுதி!

1987-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சியால் முதன்முதலாக ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு முதல் மே 31-ம் தேதி இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புகையிலை பழக்கத்தை எதிர்ப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளவதும் எதிர்கால தலைமுறையை காப்பதும் இதன் நோக்கமாகும்.

2021 உலக புகையிலை எதிர்ப்பு தின பிரச்சாரத்தின் நோக்கம் ‘கைவிடுவதில் உறுதிப்பாடு’ (Commit to Quit) என்பதாகும்.

குறிப்பாக, புகைப்பிடிப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ள காலகட்டத்தில் புகைபிடிப்பதைக் கைவிடுவது சிறப்பான பலனைத் தரும்.

ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் போதைப் பொருட்களின் விற்பனை அறவே குறைந்திருப்பதையும், பலர் புகை பழக்கத்தைக் கைவிட தயாராக இருப்பதையும் மத்திய அரசின் சுகாதார துறை வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

புகையிலை உட்பட எந்த போதைப் பொருளை கைவிடுவதாக இருந்தாலும் மனநல ஆலோசகர்களின் பங்களிப்பை பெறுவதே சிறந்த வழி.

இதற்காகவே அரசு மற்றும் தனியார் சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி, இன்று தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனைகளைப் பெற முடியும்.

தற்போது வாட்ஸ்அப் உட்பட புதிய தொழில்நுட்பங்களின் வழியே இவ்வகை ஆலோசனைகளைப் பெறும் வகையில், ஃப்ளோரன்ஸ் (Florence) எனும் பெயரில் முதலாவது டிஜிட்டல் சுகாதாரப் பணியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்த சாட்பாட் எளிதாகச் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளைத் தீர்க்கும்.

புகையிலையை ஒழிப்போம்!

ஒன்றைக் கைவிட இன்னொன்றைக் கைக்கொள்வது சிறந்த வழி அல்ல. அந்த வகையில் இ-சிகரெட் என்பது புகையிலைப் பழக்கத்திற்கான மாற்றல்ல.

நாக்கையும் மூக்கையும் மட்டுமல்ல, நம் பாக்கெட்டையும் காலி செய்வது புகையிலையின் தனிச்சிறப்பு. தனி மனிதர்கள் மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையம் சீரழிக்கும் அளவுக்கு இதன் வீச்சு உச்சத்தில் உள்ளது.

அதனைத் தவிர்க்க வேண்டுமானால், இந்த பூமியில் இருந்து புகையிலையை ஒழித்தாக வேண்டும்.

உணவின் அசல் சுவையை அறிய, எதையும் தனித்து ருசிக்க வேண்டும். அது போலவே, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை அறவே துறந்த பிறகு இவ்வுலக வாழ்வின் சுவை முழுமையாகத் தென்படும்!

-உதய் பாடகலிங்கம்

#World_No_Tobacco_Day #உலக_புகையிலை_எதிர்ப்பு_தினம் #புகையிலை #சுருட்டு #பீடி #சிகரெட் #beedi #cigarette

You might also like