அம்மாவின் மதுரை வீதிகளும் நினைவுகளும்!

எழுத்தாளர் ஜா. தீபா

எனது அம்மா திருநெல்வேலிக்காரர். அப்படித் தான் நினைத்திருந்தேன். இப்போது, குறிப்பாக அப்பா மறைந்த பிறகு அம்மா மதுரைக்காரராக மாறிவிட்டார். அவர் நினைவில் மதுரை மட்டுமே உள்ளது. இந்த மாற்றத்தினை அருகில் இருந்து பார்க்கிறேன். அடிக்கடி அவர் பேச்சில் மதுரை வீதிகளும் நினைவுகளும் வந்து, போகாமல் நிற்கின்றன.

இதற்காகவே நானும், எனது அக்காவும் அண்ணனும் அம்மாவை அழைத்துக் கொண்டு  மதுரைக்குச் சென்று வந்தோம். அவர் எங்களுக்கு சமீப காலங்களில் தொடர்கதையாக சொல்லி வந்தத் தெருக்களையும், வீடுகளையும் நாங்கள் மூவரும் அம்மாவுடன் பார்த்தபடி இருந்தோம். கூடவே அம்மாவின் சகோதர சகோதரிகளும் வந்திருந்தார்கள்.

அவர்கள் சிறு வயதில் விடுமுறைக்குச் சென்ற பாட்டி வீட்டின் கிணறும் அருகிலேயே சிதிலமடைந்த கட்டடமும் இருந்தது. அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு பாகமும் எங்களுக்கு அம்மா கல்கல்லாய் எடுத்துச் சொன்னவை. எல்லாம் மாறிப் போயிருக்க, மாமாக்களும், பெரியம்மாவும் நிகழ்காலத்தில் நினைவுகளோடு நின்று கொண்டிருந்தனர். எங்கெங்கு போக வேண்டுமோ சொல்லுங்கள் போகலாம் என்றதும் அம்மா யானைக்கல் பார்க்க வேண்டும் என்றார். வைகையை கீழ்ப்பாலம், மேம்பாலத்தை இரண்டையும் இரண்டு முறை சுற்றினோம்.

தான் படித்த பள்ளிக்கூடத்தை, ஆதி சொக்கநாதரை, பேராத்து அம்மன் படித்துறையை, கல்பனா தியேட்டரை, என் அப்பாவுடன் திருமணமான மண்டபத்தை, நீச்சலடித்த நீராழி மண்டபத்தினைதினமும் தொழுத பிள்ளையாரை அம்மாவின் அப்பா மரணமுற்ற வீட்டினை.. சொல்லப்போனால் அந்த நொடியை.. தீரத் தீர அனுபவித்தார். அது அவரது பேச்சில் தெரிந்தது. நாங்கள் அவருடன் இல்லையென்றாலும் அவர் பேசியபடி இருந்திருப்பார்.

இத்தனை நாட்கள் இத்தனை நினைவுகளை அவர் எவர்பொருட்டு, எதன் பொருட்டு வெளிப்படுத்தவில்லை? வெளிப்படுத்தாத பலவுமாக அமைந்த இந்தப் பயணத்தின் இறுதியில் எங்களுக்குத் தோன்றியது, அவர் மனதில் நாங்கள் அவருக்கு மட்டுமே அறிமுகமாயிருந்த ஊரில் திசை தெரியாத குழந்தைகள். அவர் மட்டுமே எங்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல முடியும் என்பதான குழந்தைகள் ஆகியிருந்தோம்.

எல்லாரையும் செட்டில் செய்துவிட்ட ஒரு வாழ்வில் அவருக்கு மீட்கக் கிடைத்த நினைவுகள் மதுரையில் மட்டுமே இருந்திருக்கின்றன. எங்களுக்கு அது ஒரு நாள் பயணம். அம்மாவுக்கு நெடுவருட கனவின் பயணம். சென்னை வந்து இறங்கியதும் அம்மா எங்களிடம் ‘ரொம்ப தாங்க்ஸ்’ என்றார். தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு என்று சொல்லவில்லை. எதுவுமே நான் சொல்லவில்லை.

நன்றி: முகநூல் பதிவு

#எழுத்தாளர்_ஜா_தீபா #மதுரை #யானைக்கல் #வைகை #madurai #yanaikkal #vaigai #writer_j_deepa

You might also like