ஆரோக்கியமான உடல், மனநலம் வேண்டுமா? பட்டினியை ஒழிப்போம்!

மே 28 – உலக பட்டினி ஒழிப்பு தினம்

‘பசித்துப் புசி’ என்பது ஆரோக்கியமாக வாழ்வதற்கான அடிப்படைச் சொல். ஆனால், இந்த உலகில் பசித்த பிறகும் உண்ண முடியாமல் தவிப்பவர்கள் எத்தனையெத்தனை? அவர்களது பசி தீராமல் போவதால் உருவாகும் பிரச்சனைகள் தான் எத்தனை? அந்த வகையில், இந்த உலகை இயக்கும் மாபெரும் காரணியாக விளங்குகிறது ‘பசி’.

அதுவே ஒருவர் வாழ்வில் தொடரும்போது அது ‘பட்டினி’ ஆகிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையில் கசப்பைத் தவிர வேறு சுவையே தெரியாது.

‘பட்டினியே சிறந்த மருந்து’ என்பது படோடோபமாக வாழ்பவருக்குப் பொருந்திப் போகும். சாதாரண மனிதர்களுக்குப் பட்டினி என்பது பெருஞ்சாபம்.

உலகை வாட்டும் பட்டினி!

பட்டினி குறித்த உலகளாவிய அளவிலான பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. பட்டியலிடப்பட்ட 125 நாடுகளில் நம் நாடு பெற்ற புள்ளிகள் 28.7.

உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் பட்டினியால் வாடுகின்றனர். அதே நேரத்தில், வளர்ந்த நாடுகளில் தயாராகும் உணவுகளில் 40 சதவிகிதம் தினமும் வீணடிக்கப்படுகின்றன.

சமநிலையற்ற இந்த போக்கு தொடர்வதும், அது குறித்த விழிப்புணர்வு பரவாமல் இருப்பதுமே இந்த உலகில் பட்டினி தொடர வழி வகுக்கிறது.

பட்டினி மட்டுமல்லாமல் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும் பாதிக்கப்படுவது பெருங்கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. தினமும் 100 கோடி பேராவது இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.

போர், பஞ்சம், வானிலை மாற்றம் என்று பல காரணங்கள் இந்த ஊட்டச்சத்தின்மைக்குப் பின்னால் உள்ளன.

ஒரு தாயிடம் இருந்து குழந்தைக்கு இப்பாதிப்பு பரவும்போது, அதன் செயல்பாடுகள் மாறுகின்றன. மூளை வளர்ச்சியும் அதன் அடிப்படைச் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.

உலகில் பல நாடுகள் இதனால் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. தனிமனிதர்கள், குடும்பம், சமூகம், நாடு என்று ஒவ்வொரு வட்டத்திலும் இது பொருளாதாரம், சமூகம், மருத்துவம் மற்றும் வளர்ச்சி சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

தீர்வு உண்டா?

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களையும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதியன்று ‘உலக பட்டினி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை ‘பட்டினி ஒழிப்பு தினம்’ என்று சொல்வதே சரி.

இந்த தினத்தில் பட்டினியைப் பூமியில் இருந்து ஒழிப்பதற்கு உண்டான அத்தனை பணிகளையும் மேற்கொள்வதே சிறப்பான தீர்வாக இருக்கும். ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்வதே ஆரோக்கியமான, நிறைவான வாழ்வுக்கு வழி வகுக்கும் என்ற விழிப்புணர்வை அனைவருக்கும் ஊட்டுவது அவசியம்.

போதிய பயிற்சி மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலமாக, சிறு அளவில் விவசாயம் செய்து வருபவர்களை ஊக்குவிக்கலாம். போதிய கல்வி வசதியை வழங்குவதன் மூலமாக, ஏழைக்குழந்தைகளைத் தொடர்ந்து வரும் பட்டினியின் வேரை அடியோடு அறுத்தெறியலாம்.

பட்டினி சார்ந்த உடல்நலப் பாதிப்புகளைக் குறைக்கும் விதமாக அல்லது அகற்றும்விதமாகச் சிகிச்சைகளை மேம்படுத்தலாம்.

மக்கள் பட்டினியால் வாடும் அளவுக்கு வறுமை பீடித்துள்ள பகுதிகளில், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அம்மக்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கிச் சம்பாதிப்பதற்கு உண்டான அடிப்படைப் பணிகளைச் செய்து தரலாம்.

இது போக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஊட்டுவது, அப்படிப்பட்ட உணவுகளைக் கிடைக்கச் செய்வது, கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து நுகர்வு குறித்த சோதனைகளை மேற்கொள்வது, போதுமான ஊட்டச்சத்து உணவுகளை அவர்களுக்குக் கொடுப்பது,

தாய்ப்பால் ஊட்டுதல் குறித்த விழிப்புணர்வைப் பரவச் செய்வது, தாய்மையின் மகத்துவம் மற்றும் பாலூட்டுதலின் அவசியம் பற்றி அனைவருக்கும் தகவல் தெரியச் செய்வது என்று பலவற்றை முன்னெடுத்தால் மட்டுமே பட்டினியின் பின்விளைவுகளைச் சிறிதளவாவது நம்மால் தடுக்க முடியும்.

பயமுறுத்திய கொரோனா!

கோவிட் -19 காலகட்டத்தில் இந்த உலகின் இயக்கம் முற்றிலுமாகச் செயலிழந்தது. அதன் நேரடி விளைவுகளில் மிக முக்கியமானது, பட்டினியின் கோர முகத்தால் மக்கள் அவதிப்படுவது.

பட்டினிக்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளாவிட்டால், 2030க்குள் சுமார் 15 கோடி பேர் தொடர் பட்டினியால் அவதிக்குள்ளாவார்கள் என்று உலக உணவுத் திட்டத்தின் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

பட்டினியால் கொடிய விளைவுகள் நேர்வதற்கு முன்னதாக, அதனைச் சரி செய்வதற்கான பணிகளில் இறங்குவது அவசியம்.

போர், பயங்கரவாதம், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், பாரம்பரிய விவசாய முறைகள் ஒழிப்பு, பயிர் நிலங்கள் அழிப்பு என்று பல்வேறு காரணங்களால் தற்போது பட்டினியையும் ஊட்டச்சத்து குறைபாட்டையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அவற்றில் இருந்து விடுபட, அனைத்தையும் படிப்படியாகச் சரியாக்க வேண்டிய கட்டாயத்தில் நாமனைவரும் இருக்கிறோம்.

2024ஆம் ஆண்டு உலக பட்டினி ஒழிப்பு தினத்திற்கான கருப்பொருளாக ‘தாய்மார்கள் செழித்தால் உலகம் செழிக்கும்’ என்பது கொள்ளப்படுகிறது.

கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, அடுத்த தலைமுறையை சிறப்பான உடல்நலமும் மனநலமும் மிக்கதாக உருவாக்க முடியும்.

அதனைக் கருத்தில் கொண்டு, நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் பட்டினியின்றி, போதுமான ஊட்டச்சத்துகளோடு கூடிய வாழ்வு மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கைக்கொள்வோம்..!

– மாபா

You might also like