மலையாள சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நாயகர்கள் சக கலைஞர்களின் படங்களில் ஒரு பாத்திரமாக இடம்பெறுவது சகஜம். வெறுமனே இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டவும் தயாராக இருப்பார்கள்.
அதனாலேயே, அங்கு ஒரு படத்தில் நாயகனாக நடித்தவர்கள் அதற்கடுத்த வாரம் வெளியாகும் படைப்புகளில் நான்கைந்து காட்சிகளில் வந்து போவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
அந்த காரணத்தினால், ஒன்றுக்கு மேற்பட்ட நாயகர்கள் ஒரு திரைப்படத்தில் இடம்பெறுவதும் கூட பெரிய விஷயமாகக் கருதப்படாது. அதே நேரத்தில் அவர்களுக்கான முக்கியத்துவத்தில் பெரிதாக ஏற்ற இறக்கங்கள் இல்லாத அளவுக்குத் திரைக்கதையும் காட்சியாக்கமும் இருக்கும்.
அப்படியொரு எண்ணத்தை உருவாக்கியது பிஜு மேனன், ஆசிஃப் அலி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தலவன்’ பட ட்ரெய்லர்.
இதில் மியா ஜார்ஜ், அனுஸ்ரீ, திலீஷ் போத்தன், ஜோஜி ஜான், சங்கர் ராமகிருஷ்ணன், ரஞ்சித், ஜாபர் இடுக்கி உட்படப் பலர் நடித்துள்ளனர். ஜிஸ் ஜாய் இயக்கியுள்ள இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.
‘தலவன்’ எப்படி இருக்கிறது?
நீளும் விசாரணை!
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான உதயபானு (திலீஷ் போத்தன்), பழைய குற்ற வழக்குகளின் விசாரணை குறித்து தான் அறிந்த தகவல்களை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
ஒருநாள் படப்பிடிப்புக்கு முன்னதாக, செப்பனம்தொட்டா கொலை வழக்கு விசாரணை பற்றிப் பேசலாமா என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அவரிடம் கேட்கிறார். ரொம்பவே தயங்கும் உதயபானு, பிறகு அது பற்றி விவரிக்க ஆரம்பிக்கிறார்.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் (பிஜு மேனன்) ரொம்பவே முன்கோபமும் ஈகோவும் கொண்டவர். அதேசமயத்தில், மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர். அவரது மனைவி சுனிதா (மியா ஜார்ஜ்).
சரியாக ஓராண்டுக்கு முன்னர், சுனிதாவை ஒரு நபர் (சுஜித் சங்கர்) ஆயுதம் கொண்டு தாக்குகிறார். அதனால், கால் பாதிப்புக்குள்ளாகி அவர் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.
அந்த நபரை போலீசார் கைது செய்கின்றனர். தவறுதலாக சுனிதாவை வெட்டியதாக நீதிமன்றத்தில் அவர் விளக்கமளிக்கிறார். அதனால், சிறைத் தண்டனையையும் அனுபவிக்கிறார்.
அந்த நபரின் மனைவி ரம்யா (அனுஸ்ரீ). அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உண்டு. எஸ் ஐ கார்த்திக் (ஆசிஃப் அலி), ஜெயசங்கர் பணியாற்றும் காவல் நிலையத்திற்கு இடமாற்றலாகி வருகிறார். முதல் சந்திப்பின்போதே ஜெயசங்கர் உடன் அவருக்கு மோதல் ஏற்படுகிறது.
அதிக முறை இடம் மாற்றல் ஆனதற்கான காரணத்தை ஜெய்சங்கர் கேட்க, “நான் நேர்மையாக இருக்கிறேன்” என்று கார்த்திக் பதில் சொல்ல.. “அப்படியானால் நாங்கள் எல்லாம் நேர்மையானவர்கள் இல்லையா” என்று அவர் கேட்க.. அப்போது தொடங்கிய முட்டல் அதன்பின்னும் தொடர்கிறது.
இதே போல அந்த காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள், பணியாற்றுபவர்கள் என்று பலருடன் மோதல் அனுபவங்களைக் கொண்டவர் ஜெயசங்கர்.
ஜெயசங்கரின் ஊரில் கோயில் திருவிழா நடைபெறுகிறது. அதன் இறுதிநாளன்று சுனிதா தனது சகோதரர் வீட்டுக்குக் கிளம்புகிறார்.
அன்றிரவு உதயபானு மற்றும் ஏஎஸ்ஐ வேணு (ஜோஜி ஜான்) உடன் இணைந்து மது அருந்தத் திட்டமிடுகிறார் ஜெயசங்கர். அதனை வாங்கச் செல்வதற்குத் தயாராகும்போது, ரம்யா அவரை வீட்டில் வந்து தனியாகச் சந்திக்கிறார்.
தனது கணவரைச் சிறையில் இருந்து விடுவிக்க, சுனிதா மீதான தாக்குதல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அவர் ஜெயசங்கரிடம் கேட்கிறார்.
அதற்காக, பணம் தரவும் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.
ரம்யாவிடம் கடிந்து பேசும் ஜெயசங்கர், அவரை உடனே வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்கிறார்.
மாலையில் மீண்டும் ஜெயசங்கர் வீட்டிற்குத் தனது குழந்தையுடன் வருகிறார் ரம்யா. அப்போது, அவர் வீட்டில் இல்லை. சிறிது நேரம் தான் வந்த ஆட்டோவில் காத்திருக்கும் ரம்யா பிறகு அங்கிருந்து அகல்கிறார்.
அன்றிரவு, உதயபானு உடன் மது அருந்துகிறார் ஜெயசங்கர். வேணுவும் அங்கிருக்கிறார். திருவிழாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எஸ்ஐ கார்த்திக்கும் அங்கு வந்து போகிறார்.
அடுத்தநாள் காலையில் ஜெயசங்கர் வீட்டு மொட்டை மாடியில் ஒரு சாக்குப்பை இருக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று அவர் திறந்து பார்க்கிறார். உள்ளே, ரம்யாவின் சடலத்தைக் கண்டவுடன் அதிர்கிறார். அதற்குள் விஷயம் வெளியே தெரிந்து, போலீசார் வந்து விடுகின்றனர்.
பெரிதாக ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், உடனடியாக ஜெயசங்கர் கைது செய்யப்படவில்லை. ஆனால், மக்களின் எதிர்க்குரலால் அவரைக் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது.
ஜெயசங்கர் கொலை செய்ய வாய்ப்பில்லை என்று தெரிய வந்தாலும் கூட, காவல் துறை அந்த வழக்கை மேற்கொண்டு முன்னகர்த்த முடியாமல் திணறுகிறது. அந்த நேரத்தில், அந்த வழக்கு கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஜெயசங்கர் உடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் கார்த்திக், அந்த வழக்கில் எவ்வாறு விசாரணை மேற்கொண்டார்? இறுதியில் அந்த கொலையோடு தொடர்புடைய குற்றவாளியின் அடையாளம் தெரிந்ததா என்று சொல்கிறது ‘தலவன்’ படத்தின் மீதி.
இதன் டைட்டிலுக்கு தமிழில் ‘தலைவன்’ என்றே அர்த்தம். அதற்குத் தகுந்தாற்போல, ஒரு உண்மையான தலைவனாக சிஐ ஜெயசங்கர் சிந்தித்துச் செயல்பட்டாரா என்று சொல்கிறது இப்படம்.
ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளி என்று தொடர்ந்து விசாரணை முடிவின்றி நீள்வதையும், இதற்கிடையே மேலும் சிலர் கொலையாவதையும் காட்டுகிறது இதன் திரைக்கதை.
இறுதியில், தங்களது பார்வையில் விடுபட்டுப்போன சில விஷயங்களை ஜெயசங்கர், கார்த்திக் பாத்திரங்கள் கண்டெடுப்பதே இக்கதையில் ஹைலைட்டான விஷயம்.
செறிவான ‘மேக்கிங்’!
தான் நடிக்கும் படங்களின் வெற்றி தோல்விகள், சக கலைஞர்களின் புலிப்பாய்ச்சல்களைக் கண்டுகொள்ளாமல் ‘தானுண்டு தனது வேலை உண்டு’ என்று தனிபாதையில் பயணிப்பவர் பிஜு மேனன்.
அவர் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களும் கதைகளும் ஏதோ ஒருவகையில் வித்தியாசமானதாக இருக்குமென்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர். அந்த வரிசையில் ‘தலவன்’ படமும் இணைந்துள்ளது.
‘அய்யப்பனும் கோஷியும்’ படத்திலும், சமீபத்தில் வந்த ‘துண்டு’விலும் தலைமைக்காவலராக நடித்த பிஜு, இதில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வேடத்தை வேறுபடுத்த வித்தியாசமான உடமொழியுடன் தோன்றியிருப்பது அருமை. ஒன்று இன்னொன்றை நினைவூட்டாது என்பதே அவரது நடிப்பின் சிறப்பு.
போலவே, ஆசிஃப் அலியும் எஸ் ஐ கார்த்திக் ஆக மிரட்டலான நடிப்பைத் தந்துள்ளார். இந்த படத்தில் போலீசார் தேடி வருகையில் ஆசிஃபும் பிஜுவும் ஒரு பாத்ரூமில் ஒளிந்திருப்பதாக ஒரு ஷாட் உண்டு.
அந்த கட்டத்தின்போது, உங்களால் கைதட்டாமல் இருக்கவே முடியாது. அந்த வகையில், இது யதார்த்தமான கதையமைப்பைக் கொண்ட படம் என்பதைத் தாண்டி ஒரு கமர்ஷியல் படமாகவும் உள்ளது.
இவர்கள் தவிர்த்து திலீஷ் போத்தன், அனுஸ்ரீ, மியா ஜார்ஜ், ஜோஜி ஜான், ரஞ்சித், கோட்டயம் நசீர், ஜாபர் இடுக்கி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
வில்லனாக வரும் பிலாஸ் சந்திரஹாசன் கிளைமேக்ஸில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.
ஷரண் வேலாயுதனின் ஒளிப்பதிவு, நாம் நேரில் ஒரு போலீஸ் விசாரனையைக் காணும் உணர்வை உருவாக்குகிறது.
சூரஜின் படத்தொகுப்பு மிகச்செறிவாக அமைந்து, அடுத்தடுத்த காட்சிகளை ஆவலுடன் எதிர்நோக்க வைக்கிறது. தீபக் தேவ் அமைத்துள்ள பின்னணி இசை திரையில் பரபரப்பை நிறைக்கிறது.
கிளைமேக்ஸ் காட்சி மிரட்டலாக அமைந்திருப்பதில் அஜய் மங்கத்தின் கலை வடிவமைப்புக்குப் பங்குண்டு.
இந்த படத்தின் கதை, திரைக்கதையை ஆனந்த் தேவர்கட், சரத் பெரும்பாவூர் இருவரும் அமைத்துள்ளனர். ’யார் வில்லன்’ என்று சட்டென்று கண்டறிய முடியாத வகையில் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருப்பது அருமை.
வசனம் எழுதியதோடு இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார் ஜிஸ் ஜாய். நிகழ்காலம், கடந்தகாலம் என்று மாறி மாறிப் பயணிக்கும் திரைக்கதையை ‘ஜஸ்ட் லைக் தட்’ அவர் கையாண்டிருப்பது பிரமிக்க வைக்கிறது.
தலைமைப் பண்பு!
ஒருவரது குணாதிசயங்களைத் தாண்டி, அவர் வகிக்கும் பதவியும் சமூகம் தரும் அந்தஸ்தும் அதே நபரை வேறுவிதமாக அடையாளம் காட்டும். அதற்கேற்ப, அவரது சுபாவத்தில் சில வேண்டத்தகாத அம்சங்கள் இருக்கும்.
அப்படியொருவர் ஒரு குற்றத்தில் சிக்கிக்கொள்கையில், தன்னை நேர்மையானவன் என்று நிரூபிkகும் வகையில் எப்படியெல்லாம் சிந்தித்துச் செயல்படுவார் என்பதை ‘தலவன்’ காட்டியிருக்கும் விதமே இப்படத்தின் யுஎஸ்பி.
‘நாங்க ரெண்டு பேரும் இரட்டையர்கள்னு நினைக்கறேன்’ என்று ஆசிஃப் அலி பேசும் வசனம் போன்றே, இதில் வரும் இரு பிரதான பாத்திரங்களும் சம அளவில் திரையில் தெரிகின்றன.
அந்த சமநிலையைப் பேணும்விதமாக எழுத்தாக்கத்தையும் காட்சியாக்கத்தையும் கையாண்டிருக்கும் விதமே இப்படத்தின் சிறப்பு.
இரண்டு நாயகர்களைத் திரையில் முன்னிலைப்படுத்துவதற்காகத் தேவையற்ற சமரசங்கள் ஏதும் செய்யாமலேயே அதனைச் சாதிக்க முடியும் என்று காட்டிய வகையில் ஒரு முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது ‘தலவன்’.
இதில் குறைகள் இல்லையா என்று கேட்கக் கூடாது. உற்றுக் கவனித்தால், நிச்சயம் அவை தென்படும். ஆனால், அவை தென்படாமல் இருக்குமளவுக்குத் திரையனுபவத்தைத் தருவதே ‘தலவன்’ படத்தின் ப்ளஸ்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்
#தலவன்_விமர்சனம் #பிஜு_மேனன் #மியா_ஜார்ஜ் #சுஜித்_சங்கர் #அனுஸ்ரீ #ஆசிஃப்_அலி #Thalavan_Review #Jis_Joy #Asif_Ali #biju_menon #miya_george #sujith_sankar #anushree #ஜிஸ்_ஜாய்