இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இப்போது போன்றே கடந்த 2019-ம் ஆண்டிலும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடைசி கட்ட வாக்குப்பதிவு மே 19-ம் தேதி நடைபெற்றது. மே 17-ம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
பிரச்சாரத்தை முடித்த பிரதமர் மோடி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் சென்றார்.
ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்திலிருந்து இரண்டு கி.மீ. தூரம், பனி போர்த்திய பாதையில் நடந்து சென்று, அங்குள்ள குகையில் ஒரு நாள் முழுவதும் தியானம் செய்தார்.
மோடி தியானம் செய்த குகை, கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.
அங்கு மின்சார வசதி கிடையாது. ஒரே ஒரு படுக்கை மட்டுமே உண்டு. செல்போன் நெட்வொர்க் செயல்படாது.
கன்னியாகுமரி வருகை
இப்போது, இறுதிக் கட்டத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் 4-ம் தேதி வெளியாக உள்ளன.
இந்தநிலையில், பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி (நாளை மறுநாள்) கன்னியாகுமரி வருகிறார்.
டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை முதல் ஜூன் 1-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்கிறார்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் அவர் தியானத்தை நிறைவு செய்வது குறிப்பிடத்தக்கது.
1-ம் தேதி காலையில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, பின்னர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
அதிகாரிகள் ஆய்வு
பிரதமர் வருகையையையொட்டி வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கின்றனர்.
விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறையின் வரலாற்றை இங்கே நினைவு கூற வேண்டும்.
1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி, விவேகானந்தர், கடலில் நீந்திச் சென்று அந்தப் பாறை மீது அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
இதனை நினைவு கூறும் வகையில், 1970-ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில், அந்தப் பாறை மீது விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
அப்போது முதல் விவேகானந்தர் மண்டபம் சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.
குமரி முனையிலிருந்து அங்கு செல்ல படகுகள் இயக்கப்படுகின்றன.
– மு.மாடக்கண்ணு
#மக்களவைத்_தேர்தல் #பிரதமர் #மோடி #கேதார்நாத் #கன்னியாகுமரி #விவேகானந்தர்_பாறை #திமுக #விவேகானந்தர்_நினைவு_மண்டபம் #Vivekananda_rock #PM_Modi_Meditation_in_Kanyakumari #lokshabha_election #Vivekananda_memorial_hall #Kanyakumari