அண்மையில் ஒரு திருவிழா, அது பெருவிழா. அது ஒரு தவ விழா. கோவையில் நடைபெற்றது. பொதுவாக விழாக்கள் கூடிக் கலைவதுதான் நமது வழக்கம். கூடும்போதும், கூட்டத்தில் இருக்கும்போதும் கலையும்போதும் எந்த ஒழுங்கும் இன்றி இருப்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.
கூட்டத்தில் இருப்போருக்கு எதற்காக இந்தக் கூட்டத்திற்கு வந்தோம் என்பது தெரியாத நிலையிலேயே பலர் அமர்ந்திருப்பர்.
இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஒரு தேடுதலில் வந்தவர்கள். இந்தக் கூட்டமும் அரங்கக் கூட்டம்தான். இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள் சற்று வித்தியாசமாகவே அமர்ந்திருந்தார்கள். எனவே அமைதி, ஒழுங்கு, கட்டுப்பாடு அனைத்தையும் பங்கேற்றவர்களிடம் பார்க்க முடிந்தது.
அந்த விழா குண்டலினி யோக அறிவியலை உருவாக்கிய ஞானவான் பரஞ்ஜோதி மகானின் 124 அவதார தினம். அதை ஞானியர் தினமாக கொண்டாடினர். அன்றைய நாள் அன்னையர் தினமாகவும் செவிலியர் தினமாகவும் கொண்டாடப்பட்டது.
அதை நடத்தியது திருமூர்த்தி மலையிலுள்ள உலக சமாதான அறக்கட்டளைதான். அந்த விழாவிற்கு தலைமை உரை ஆற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
அங்கு வந்திருந்த அனைவரும் எதோ கோடை வெயிலுக்கு ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் நடக்கும் விழாவில் உட்கார்ந்து பொழுதைக் கழிப்போம் என்று வந்தவர்கள் அல்ல.
உலக சமாதான நிறுவனர் குருமகானின் சமூக மாற்றத்திற்கான மாற்றம் பெற்ற மனிதராக உருவாகும் வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.
எனவே அவர்களுக்கு நேரம் மிகவும் முக்கியமானது. நேரத்தில் எதையும் நடத்துவது என்பது இவர்களின் நடத்தையில் ஊறிப்போன ஒன்று. எனவே அனைவரும் தவத்துக்கு வந்தவர்போல்தான் வந்திருந்தனர்.
அழைத்தவர் அனைவருக்கும் யாரென்று தெரியும், எதற்காக அழைத்தார் என்பதும் தெரியும். ஒரு நிமிட அமைதியுடன் விழா தொடங்கியது.
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, குரு கீதம், ஞானகீதம் என அனைத்து இசையுடன் அஷ்ட தீபத்தை பெண்கள் இணைந்து ஏற்றி ஒரு வேள்வி அரங்கமாகவே மாற்றிவிட்டனர்.
ஒரு நிகழ்வு சடங்காக அல்லாமல் ஒரு வேள்வியாக மாற்றிச் செயல்படுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள இந்த நிகழ்வு முன்னுதாரணமாக விளங்கியது.
பொதுவாக ஆசிரமங்களுக்குச் செல்லும்போது, அவைகளை நான் வழிபாட்டுத் தலங்களாக கருதுவது கிடையாது. அது ஒரு மாற்றத்தை மனிதர்களிடம் உருவாக்கும் வல்லமை கொண்ட பயிற்சிச் சாலைகள் என்பதை புரிந்து செல்வேன். பல ஆசிரமங்கள் ஒரு காலத்தில் அப்படி பயிற்சி சாலையாக விளங்கியவைகள்தான்.
ஆனால் இன்று அதே அமைப்புக்கள் சடங்குகளுக்கு மாறியிருப்பதையும் பார்த்து வருபவன்.
எனவே இந்த பரஞ்ஜோதி மகானை குருவாக ஏற்று உலக சமாதான மையம் எப்படி உயிர்ப்புடன், உணர்வுடன் சாதாரண மனிதர்களை மாமனிதர்களாக செதுக்க செயல்படுகின்றது என்பதையும் கண்டுணர்ந்தவன் என்ற அடிப்படையில் ஓர் உயிரோட்டமான தொடர்பினை நான் கொண்டுள்ளேன்.
தமிழ் மண் ஆன்மீகம் நிறைந்தது. எண்ணற்ற மகான்களும், தவயோகிகளும், சித்தர்களும் நடந்த மண். இந்த மண்ணில் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மதங்களைக் கடந்த மகான்கள் வாழ்ந்த பூமி. சமூக நீதி, மானுட நீதி மட்டுமல்ல பிரபஞ்ச நீதிக்கான பார்வையை உருவாக்கிய தவயோகிகள் வாழ்ந்த நாடு.
தமிழ் மக்களுக்கு அசல் எது, நகல் எது என்பது தெரியாத காரணத்தால்தான் நம் சமூகத்திற்கு வழிகாட்டும் வல்லமை பெற்ற தவயோகிகளையும் மகான்களையும் நாம் கடைகட்ட வைத்துவிட்டோம். அதன் விளைவுதான் பொருள் சேர்க்கும் வாழ்வில் உயர்ந்து அறவாழ்வில் தாழ்ந்து நிற்கிறது நம் தமிழ் நிலம்.
இதனை மாற்றுவதும் சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டி அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உலக சமாதான மையம் பழனிக்கு அருகில் இருக்கக் கூடிய திருமூர்த்தி மலையில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திற்குத் தேவை சமூக மாற்றத்திற்கான ஒரு பார்வை கொண்ட ஓர் இயக்கம்.
அந்த இயக்கத்திற்கு ஒரு தலைமை தேவை. அந்தத் தேவை என்பது வழிகாட்டுதலுக்கான தேவை. எனவே மக்களுக்கு வழிகாட்டுவதைத்தான் நாம் தலைமை என்று பொருள் கொள்கிறோம்.
இவைகளெல்லாம் இந்த உலக சமாதான மையத்தில் நம்மால் பார்க்க முடியும். அது மட்டுமல்ல சமூக நீதிப் பார்வை கொண்ட ஆன்ம நேயப்பார்வை கொண்ட நிறுவனமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
எனவே இதன் பணிகளில் இணைந்து செயல்படுவது உலக அமைதிக்கு உலகத்திற்கு தமிழகம் வழிகாட்டும் என்ற பார்வையில் செயல்படுவது என உணர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
இந்தப் பின்னணியில் இந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்க அழைக்கப்பட்டேன். அந்த நிகழ்வில் தலைமையுரையாக ஒரு சில கருத்துக்களை முன் வைத்தேன்.
இந்த விழா ஏன் ஒரு ஞானியர் தினமாக கொண்டாடப்படுகிறது? இன்று சமூகத்தில் ஞானியர்களுக்கு தேவை இருக்கிறதா? என்ற கேள்விக்கு நாம் விடை தேட வேண்டும்.
இன்று எங்கும் எதிலும் அறம் இழந்து சீர்கெட்டு சிதிலமடைந்து விட்டது நம் சமூகம். அமைதியைத் தொலைத்துவிட்டது. நிறைவைத் தொலைத்து விட்டது. ஒருவிதமான தேடுதலில் நம் சமூகம் ஓடத் தொடங்கிவிட்டது. இது பலருக்கும் புரிகிறது. ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
பலர் செயல்படக் காத்திருக்கின்றார்கள். ஆனால் வழிகாட்ட ஆட்கள் இல்லை. இங்குதான் ஞானிகள் தேவைப்படுகிறார்கள். ஞானிகளுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது, இனம் கிடையாது, நாடு கிடையாது. இவை அனைத்தையும் கடந்து மானுடம், உலகம், பிரபஞ்சம் என்ற நிலையில் செயல்படுபவர்கள்.
இன்று சிறிய அடையாளங்களால் பிரிந்து நிற்கும் மக்களுக்கு, இந்த சிறிய அடையாளங்களைக் கடந்து, மானுடம், உலகம், பிரபஞ்சம் என்ற பெரிய ஒற்றை அடையாளத்தில் செயல்பட மக்களைத் தயார் செய்வது தான் நம்முடைய இன்றைய தேவை.
குடும்பத்திற்கு தலைமையுண்டு, தெருவுக்குத் தலைமையுண்டு, ஊருக்குத் தலைமையுண்டு, ஜாதிக்குத் தலைமையுண்டு, மதத்திற்குத் தலைமையுண்டு, நாட்டுக்குத் தலைமையுண்டு.
மானுடத்திற்கு யார் தலைமை, அதை எப்படிக் கொண்டுவர முடியும். உலகத்திற்கு யார் தலைமை தாங்குவது. உலகத்தை ஓர் அமைப்பாக கட்டமைக்க முடியுமா? இதை எப்படி நாம் கொண்டு வருவது இதற்கு வழிகாட்டத்தான் நமக்கு ஞானியர்கள் தேவை.
இன்றைய மானுட வாழ்வு ஒரு புரிதலற்ற ஓட்டத்தில் மக்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அனைவரும் ஒரு மயக்கத்தில் இருக்கின்றனர்.
சிலர் சொத்து வாங்கிக் குவிப்பதில் சிக்குண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர், சிலர் அதிகாரத்தைத் தேடி ஓடுகின்றனர், சிலர் பதவிகளைப் பிடிக்க ஓடுகின்றனர், சிலர் புகழ்தேடி ஓடுகின்றனர், சிலர் பொன் தேடுகின்றனர், சிலர் பெண் மோகம் கொண்டு இயங்குகின்றனர், சிலர் பொருள் மீது மோகம் கொண்டு அலைகின்றனர். எதாவது ஒரு நிலையில் புலன்களின் தூண்டுதலால் மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த சமூகம் மயக்கத்தில் இயங்குகின்றது. இந்த மயக்கத்தை எப்படி தெளிவிப்பது. குண்டலினி யோகத் தந்தை பரஞ்ஜோதி மகான் கூறுகிறார், இந்த உலகில் மூன்று விதமாக மக்கள் வாழ்கின்றனர்.
ஒன்று இன்ப, துன்பங்களை வெளியிட்டுக் கூறாது, நாம் ஏன் இப்படி துன்பியலில் வாழ்கிறோம் என்று தெரியாது வயிற்றுக்காகவே வாழ்கின்றனர். இவர்களைத்தான் பாரதி கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணமும் அறிந்திலார் என்று கூறுவார்.
இரண்டாவது நிலையில், பலருக்கு நாம் ஏன் இப்படி தாழ்வுற்று இருக்கின்றோம் என்பது தெரியும். ஆனால் இவைகளை எப்படிச் சமாளிப்பது என்பது அறியாது வாழ்ந்து வாழ்க்கையை முடித்து விடுகின்றனர்.
மூன்றாவது நிலை பெரு முயற்சியுடன் சிந்தித்து செயலில் ஒருங்கிணைந்து அனைவருக்கும் பயன்படுமாறு தன் வாழ்வை மாற்றியமைத்து வெற்றி பெறுகின்றனர். இந்த மூன்றாவது நிலையில் செயல்படுவோர் லட்சத்தில் ஒருவர். இவர்கள் மூலம்தான் சமூகம் மேம்படும். இவர்களைத்தான் சமூகம் எப்போதும் தேடிக் கொண்டேயிருக்கும்.
ஞானத்தில் உள்ளவர்கள் செய்வது, ஆத்மசக்தியைப் பெருக்கி மக்களின் சிந்தனைப் போக்கை மாற்றி வழிகாட்டி சமூகத்தை மட்டுமல்ல பிரபஞ்சத்தைக் காப்பார்கள்.
காரணம் பிரபஞ்சம் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டது அல்ல. உலகத்தில் உயிர் வாழும் அத்தனையும் படைத்தது அந்த இறைச் சக்திதான்.
பிரபஞ்சம் நலமுடன் இருந்தால்தான் மனிதர்களாகிய நாமும் நலமுடன் வாழ முடியும் என்ற புரிதலில் வாழ்ந்த சமூகம் நம் சமூகம்.
அந்த சமூகம் இன்று எங்கு இருக்கின்றது என்பதுதான் கேள்வி. இன்று நாம் நினைப்பதுபோல் அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ மட்டும் அறமிழந்து செயல்படவில்லை.
அரசாங்கம் என்பதும் அரசியல் கட்சிகள் என்பதும் சமுதாயம் என்ற கட்டமைப்பிற்குள் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள்.
எனவே நம் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூல காரணம் என்பது சமுதாயத்தின் மனோபாவம்தான். மக்களின் சிந்தனைப்போக்கு சிறப்புற்று இருக்குமேயானால் அங்கு அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் சிறப்பாகவே செயல்படும்.
பொதுவாக வளர்ச்சிக் கோட்பாட்டாளர்கள் கூறுவார்கள், முன்னேற்றம் என்பது எதன் செயல்பாடு என்றால் மூலதனத்தின் செயல்பாடு, அறிவியலின் செயல்பாடு, மேலாண்மையின் செயல்பாடு, தொழில்நுட்பத்தின் செயல்பாடு, அரசாங்கத்தின் செயல்பாடு, கொள்கைகளின் செயல்பாடு என்று விளக்குவார்கள்.
உண்மை மூலதனம், நிலம், உழைப்பாளி, அறிவியல், தொழில்நுட்பம், ஆளுகை, கொள்கை, மேலாண்மை, நிர்வாகம் மட்டுமல்ல, இவைகளைக் கடந்த சிந்தனைப் போக்கு என்பதுதான் அடிப்படையான காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள். இந்த சிந்தனைப் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வருவது கல்விதான்.
இன்று கல்வி வளர்ந்தது, அறிவியல் வளர்ந்தது, தொழில்நுட்பம் வளர்ந்தது, பொருளாதாரம் வளர்ந்தது, வாழ்க்கை வசதிகள் வளர்ந்தது,
இலக்கியம் வளர்ந்தது, இசை வளர்ந்தது, கலை வளர்ந்தது, ஆனால் மனிதர்களின் மாண்பு வளரவில்லை. அதுதான் இன்று நாம் சந்திக்கும் சவால்.
உலகில் போர் நடக்கிறது, சமூகப் பிணக்குகள் மக்களை அமைதியின்மைக்கு வழிவகுக்கின்றன. ஆக மனிதர்கள் மாறாமல் நாம் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு கிடையாது.
இன்று மனிதர்கள் சுயநலத்தின் உச்சத்தில் இருக்கின்றார்கள். அதுபோல் புலன்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு நுகர்வில் வெறிபிடித்து அலைகின்றார்கள்.
இந்தச் சூழல்தான் மானுடத்திற்கு மட்டுமல்ல பிரபஞ்சத்திற்கே ஆபத்தை விளைவித்து விட்டது. நாம் சுயநலமாக செயல்பட்டதன் விளைவு இன்று காலநிலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறோம்.
இந்த சுயநலப் பார்வைதான் தனிமனிதர்களை சுகம் தேடுதல், வாழ்க்கையை அனுபவித்தல் என்ற பெயரில் இயற்கையை அழித்து உலகத்தை ஒரு ஆபத்தான காலக்கட்டத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டனர் ஆசைக்கு ஆட்பட்ட ஆசை மனிதர்கள்.
இதை எப்படிச் சரி செய்வது, அதில் நாம் சமூகப் பொறுப்பாளராக என்ன செய்ய முடியும் என்பதிலிருந்து எதிலும் எனக்கென்ன என்ற சிந்தனையுடன் அலையும் கூட்டம் பெருத்துவிட்டது.
இதிலிருந்து மனிதர்களை மடை மாற்றம் செய்து, சமூகப் பார்வை கொண்டவர்களாய் தயார் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கான செயல் என்ன என்றால், சமூக மாற்றத்திற்கான மாமனிதர்களை உருவாக்குவதுதான்.
இது மந்திரத்தால் உருவாக்குவது அல்ல. மாபெரும் அறிவியல் முயற்சியால். அந்த அறிவியல் யோக அறிவியல். குண்டலினி யோகம் ஒவ்வொருவரையும் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் மாமனிதர்களாக மாற்றும்.
அப்படித் தயாரிக்கப்பட்ட மனிதர்களில்தான் விவேகானந்தர் 100 பேரைத் தேடினார். அப்படிப்பட்ட மனிதர் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒருவர் ஊழியராக நிர்மாண ஊழியராக கிடைத்தால் இந்தியக் கிராமங்களை சுயராஜ்யக் கிராமங்களாக மாற்றி விடலாம் என மகாத்மா காந்தி தயார்படுத்த முனைந்தார், இப்படிப்பட்ட மனிதர்களை சாதகர்களாக உருவாக்கி, பூவுலகை பொன்னுலகமாக மாற்றிடவேண்டும் என்றார் அரவிந்தர்.
79 தனிமனிதர்களை உயர்ந்த உன்னத தியாகத்திற்கு தயாரித்து, உப்புச் சத்தியாகிரகத்தை காந்தி நடத்தி இந்த உலகையே உலுக்கினார்.
நம் நாட்டில் நம் மகான்களும் சித்தர்களும் தங்களுடைய உடலையே சோதனைக் கூடமாக மாற்றி, அந்த சோதைனைகளில் வெளிவந்த அத்தனையும் அறிவியல் கருத்துக்கள்.
அந்த நிலையில் பரஞ்ஜோதி மகான் உருவாக்கிய குண்டலினி யோகம் இன்று கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்படுகிறது.
இன்று அதன் முழு முதல் ஆசிரியராக இருப்பவர் திருமூர்த்தி மலையில் உருவாக்கப்பட்டிருக்கும் உலக சமாதான நிறுவனர் குருமகான்தான்.
அங்கு தன் நிறுவனத்தின் மூலம் தமிழக உடற்பயிற்சிப் பல்கலைக் கழகத்தில் இணைக்கப்பட்ட ஒரு யோகக் கல்வியை இளங்கலை, முதுகலை, ஆய்வுப் படிப்பு வரை தன் கல்லூரியில் உருவாக்கி நடத்தி வருகிறார்.
அது மட்டுமல்ல அந்த நிறுவனம் இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்தும், சித்த மருத்துவ மருந்துகள் தயாரித்து ஆரோக்ய வாழ்விற்கு வழிவகுத்து ஏழை எளிய மக்களுக்குத் தந்துள்ளது.
இயற்கை வாழ்வியல், ஆரோக்யப் பாதுகாப்பு போன்ற பல்வேறு திட்டங்களை பயிற்சிகளாக்கி மக்களுக்கு உதவி வருகிறது.
அது மட்டுமேயல்ல பல்வேறு பயிற்சிகளை வடிவமைத்து, குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என தங்களின் ஆளுமைத்திறனையும் தலைமைத்துவத்தையும் வளர்த்துக்கொள்ள செயல்படுத்தி வருகின்றது.
அப்படி நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்றபோது ஒரு வளர் இளம்பெண் கூறினார், தான் பங்குபெற்ற பயிற்சியில் தனக்கு என்ன மாற்றம் நடந்தது என்று.
“நான் எவர் சொல்லையும் கேட்க மாட்டேன். என் தந்தை, தாய் கூறுவதைக்கூட அலட்சியம் செய்து விடுவேன். இந்த நிகழ்வுக்கு நான் என் விருப்பப்படி வரவில்லை.
என் தாய் தந்தையர் என்னை கட்டாயப்படுத்தித்தான் அனுப்பி வைத்தனர். அப்படித்தான் அந்த நிகழ்வில் பங்கு பெற்ற அனைவரும். முதல் நாள் ஆரம்பிக்கும்போது எப்படி ஐந்து நாளை கழிக்கப் போகிறோம் என்ற தவிப்பு.
ஒரு நாள் முடிந்ததும் எதோ ஒரு ஈர்ப்பு தங்கினேன். மூன்று நாட்களைக் கடந்தபின் என் வாழ்வு எப்படி தரிகெட்டு நடந்து கொண்டிருந்தது என்பதை உணர முடிந்தது.
இந்த வயதில் உள்ள அத்தனை ஈர்ப்புக்களும் என்னுள் இருந்தது. இன்று ஐந்தாவது நாளில் ஒரு புது வாழ்வுக்குள் செல்வதுபோல் இருக்கிறது.
இதுமாதிரிப் பயிற்சி என்பது என் வயதில் உள்ள அனைவருக்கும் கிடைத்தால் மிகப்பெரிய மாற்றத்தை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடலாம். இதற்கு முதல் நன்றி என் தாய் தந்தையருக்குத் தான் என்றார்”.
அதே நிகழ்வில் பங்கு பெற்ற ஒரு பெண்ணின் தந்தை கூறினார், “மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்து குழந்தைகளுக்காக பணம் தேடுகின்றோம்.
குழந்தைகள் நாம் படும் துன்பங்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்கின்றனர்.
என் பெண்ணையும் இந்த பயிற்சியில் சேர்த்துவிட நான் படாத பாடு பட்டேன். அவர் இந்தப் பயிற்சிக்கு வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தார். நான் கடிந்து கேட்டு அவரை இங்கு அனுப்பி வைத்தேன்.
இன்று என் பெண்ணின் மனோபாவம் வேறாக இருக்கிறது. என் போன்ற பெற்றோர்கள் பணம் சம்பாதித்து அவர்களுக்கு வைப்பதைவிட, நல்ல அறிவுத் தெளிவு தரக்கூடிய திறனை இதுபோன்ற பயிற்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பி வைத்து, நல்ல மகனாக மகளாக வைத்துக் கொண்டால், அது அந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், நாட்டுக்கும் பொறுப்புமிக்கவராக இருப்பார்கள்” என்று.
சமூக மேம்பாடு, சமூக நீதி, உலக ஒற்றுமை, மதம் கடந்த ஆன்மீகம், குடிமக்கள் தயாரிப்பு, சமூக அக்கறை கொண்ட தலைவர்கள் தயாரிப்பு அனைத்தையும் தன்னகத்தே செயல் வடிவங்களாக்கி செயல்படுத்தி லட்சக் கணக்கான உணர்வாளர்களை உலகெங்கும் ஈர்த்துள்ளது.
புதிய மானுட வாழ்வியலுக்கான புதுமைக் கல்வியையும் உருவாக்கி நடத்தி வருகின்றது. இதை தமிழ் மக்கள் பயன்படுத்தி புதுப்பாதையில் அறவாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்பதுதான் மாற்றுப்பாதை தேடும் அனைவரின் விருப்பம்.