சாதாரண மனிதர்களைப் போல் இருக்கிறாரே என்று கருத வைத்த நாயகர்களில் ரஜினிகாந்த், விஜயகாந்துக்கு அடுத்த இடத்தைப் பிடித்தவர் நடிகர் ராமராஜன். அவர் நடித்த படங்களை இன்றும் ‘பொக்கிஷமாக’ போற்றிக் கொண்டாடும் மனிதர்கள் பலர் இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட ராமராஜனை க்ளீன் ஷேவ் முகம், பளிச்சிடும் ஒப்பனை, கண்ணைப் பறிக்கும் ஆடைகள், கையை நீட்டி ஆட்டிப் பாடல்களுக்கு வாயசைக்கும் உடல்மொழியோடு நாம் ரசித்திருப்போம்.
அவை எதுவுமில்லாமல், இன்றிருக்கும் ராமராஜனின் தோற்றத்தோடு பொருந்தும் வகையில் ஒரு ஆக்ஷன் படமொன்றை தர முயற்சித்திருக்கிறது ‘சாமானியன்’ படக்குழு.
ராகேஷ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
சரி, இப்படம் எப்படியிருக்கிறது?
வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்!
மதுரையைச் சேர்ந்த மூக்கன் (எம்.எஸ்.பாஸ்கர்), சங்கர நாராயணன் (ராமராஜன்) இருவரும் சென்னையில் இருக்கும் பஸில் பாயை (ராதாரவி) பார்க்க வருகின்றனர்.
ஒருநாள் அவர் வீட்டில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலையில் இருவரும் வெவ்வேறு திசைகளில் புறப்படுகின்றனர்.
சென்னை தி.நகர் ஐசிபி வங்கியில் மேலாளராக இருப்பவரின் வீட்டுக்குச் செல்கிறார் மூக்கன். எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணின் தந்தை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மேலாளரின் மனைவி (வினோதினி), மகளோடு பேசிக் கொண்டிருக்கிறார்.
தான் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில் வசித்து வரும் கார்த்தியின் வீட்டுக்குப் போகிறார் பஸில் பாய். வீட்டில் அவரது கர்ப்பிணி மனைவி (ஸ்மிருதி வெங்கட்) இருக்கிறார்.
ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், அப்பெண் பசில் பாயோடு சகஜமாக பேசுகிறார். ஐசிபி வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறார் கார்த்தி.
அதேநேரத்தில், ஐசிபி வங்கிக்குள் ஒரு சூட்கேஸ் சகிதம் நுழைகிறார் சங்கர நாராயணன். தன்னிடம் இருக்கும் பணத்தை வங்கியில் ‘டெபாசிட்’ செய்யப் போவதாகச் சொல்கிறார்.
வங்கிப் பணியாளர் பணத்தைக் கேட்க, சூட்கேஸை திறந்து காட்டுகிறார். அதில் ஒரு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு இருக்கிறது. அது போக, அவர் கையில் ஒரு துப்பாக்கியும் இருக்கிறது.
அடுத்த நொடி அந்த வங்கியில் இருக்கும் அனைவரும் அதிர்கின்றனர். மேலாளர் (போஸ் வெங்கட்) சங்கர நாராயணனின் மிரட்டல்களுக்குத் தான் பயப்படப் போவதில்லை என்கிறார்.
அதைத் தொடர்ந்து, ஒரு ஊழியர் போலீசுக்கு தகவல் தர முனைகிறார். அந்த நபரின் காலில் குறிபார்த்து சுடுகிறார் சங்கர நாராயணன். தன்னை தாக்க வருபவர்களை அடித்து உதைக்கிறார்.
சில நிமிடங்களுக்குப் பிறகே, சங்கர நாராயணனைக் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மை வங்கிக்குள் இருப்பவர்களுக்குத் தெரிகிறது. அதன்பிறகு, போலீஸ் அந்த வங்கியைச் சுற்றி வளைக்கிறது.
‘வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்’ என்று செய்திகள் ஊடகங்களில் வெளியாக, மாநிலம் முழுவதும் பரபரப்பு பற்றிக் கொள்கிறது.
அதன்பிறகு நடப்பது என்ன? சங்கர நாராயணன் ஏன் அந்த வங்கிக்குள் வெடிகுண்டுடன் புகுந்தார்? வங்கியினால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு எத்தகையது என்று சொல்கிறது ‘சாமானியன்’.
நோ லாஜிக்!
‘சாமானியன்’ படம் மீது மக்கள் கவனம் குவியக் காரணமே, மீண்டும் இதில் ராமராஜன் நாயகனாகத் தோன்றியிருக்கிறார் என்பதே. அது மட்டுமே இப்படத்தின் யுஎஸ்பி ஆக உள்ளது.
அது கெடாத வகையில் காட்சியாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ். அதுவே இப்படத்தை ரசிக்க வைக்கிறது.
அதேநேரத்தில், லாஜிக் சார்ந்து இத்திரைக்கதையில் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்க முடியும். அவை திரையில் செறிவான ஒரு படைப்பை ஆக்கத் தடையாக உள்ளன.
ஆனால், நாம் பார்க்க வந்தது ராமராஜனைத்தான் என்றெண்ணும் ரசிகர்கள் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
மற்றவர்களுக்கு அவை ஆகப்பெரிய பிரச்சனையாகத் தான் தென்படும்.
இப்படத்தில் ராமராஜன் இப்போதிருக்கும் முதிர்ந்த தோற்றத்தோடு தோன்றியிருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் சில இடங்களில் அவரது நடிப்பு கண் கலங்க வைக்கிறது. மற்ற இடங்களில் வெறுமையும் மிரட்சியும் தெரியும் முகத்தோடு உலா வந்திருக்கிறார்.
அதனை ஈடுகட்டும் விதமாக ராதாரவியும் எம்.எஸ்.பாஸ்கரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
லியோ சிவகுமார், நக்ஷா சரண் ஜோடி படத்தின் ஆதாரமாக விளங்கும் பிளாஷ்பேக் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அழகர் – திவ்யா என்ற பாத்திரங்களில் அவர்கள் நடித்துள்ளனர். அவர்களது இருப்பானது சூப்பர், சுமார் என்ற இரு வேறு எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ளது.
அபர்ணதி, ஸ்மிருதி வெங்கட், தீபா சங்கர், வினோதினி வைத்தியநாதன், சூப்பர்குட் சுப்பிரமணி, சரவண சுப்பையா, போஸ் வெங்கட், ஷரவண சக்தி, அறந்தாங்கி நிஷா, முல்லை, கோதண்டம், கஜராஜ், கேபிஒய் வினோத் என்று பலர் இப்படத்தில் உண்டு.
கே.எஸ்.ரவிக்குமார் கௌரவ வேடமொன்றில் தோன்றியிருக்கிறார்.
இவர்களோடு, இப்படத்தில் வில்லனாக வருகிறார் மைம் கோபி.
ஒளிப்பதிவாளர் அருள்செல்வன், படத்தொகுப்பாளர் ராம் கோபி, கதாசிரியர் கார்த்திக் குமார் என்று பலரும் ‘தேரைக் கட்டி இழுப்பது போல’ ஒன்றுகூடி இப்படத்தை ஆக்கியிருக்கின்றனர்.
தத்தி வா தத்தி வா, ஒளி வீசும், கண்ணான கண்ணே என்று மூன்று பாடல்களைத் தந்திருக்கிறார் இளையராஜா. பரபரப்பூட்டும் ஆக்ஷன் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் அவரது பின்னணி இசை வழக்கம் போலத் தனது வேலையைக் காட்டியிருக்கிறது.
இயக்குனர் ராகேஷ், இந்த படத்தில் ராமராஜனின் இருப்பு வித்தியாசமானதாக இருக்குமென்று நம்பியிருக்கிறார். அதற்கேற்ப, அவரது திரையிருப்பையும் வடிவமைத்திருக்கிறார்.
இன்றைய சூழலில் மக்களை அவதிக்குள்ளாக்கும் ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு, அதனைச் சொல்ல ராமராஜனின் ‘ஸ்கிரீன் இமேஜ்’ஜை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
அதேநேரத்தில், இருக்குமிடத்தில் இருந்தவாறே பத்து பேரை நாயகன் அடிப்பது என்று தேவையில்லாத சில ‘க்ளிஷே’க்களையும் புகுத்தியிருக்கிறார். படத்தின் செகண்ட் கிளைமேக்ஸ் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான்.
ராமராஜனுக்கு அடையாளம் தந்த இளையராஜாவின் சில ஹிட் பாடல்கள், ராமராஜனைக் கிண்டலடிக்க வைக்கும் சில வசனங்கள் போன்றவற்றைக் கொண்டு தியேட்டரில் இறுக்கத்தைக் குறைத்திருக்கிறார் ராகேஷ். அந்த புத்திசாலித்தனம் படம் முழுக்க இல்லை என்பதே நமது வருத்தம்.
மீண்டு(ம்) எழுந்த ராமராஜன்!
‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தின் வழியே தமிழ் திரையில் நாயகனாக அறிமுகமானவர் ராமராஜன்.
தொடர்ந்து ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘ராசாவே உன்னை நம்பி’, ’எங்க ஊரு காவல்காரன்’, ‘கரகாட்டக்காரன்’, ‘தங்கமான ராசா’, ‘பாட்டுக்கு நான் அடிமை’, ‘ஊரு விட்டு ஊரு வந்து’ என்று பல ‘ப்ளாக்பஸ்டர்’ வெற்றிகளைத் தந்தவர்.
தொண்ணூறுகளின் பிற்பாதியில் அவரது படங்களுக்கான வரவேற்பு குறைந்தபோதும், தனக்கென்று வகுத்துக்கொண்ட பாணியில் இருந்து விலகித் திரையில் தோன்ற அவர் தயாராக இல்லை.
2012-ல் நடந்த ஒரு விபத்தில் படுகாயமடைந்த ராமராஜன் அதிலிருந்து மீண்டெழுந்தது, அவரது தன்னம்பிக்கையின் விளைவு.
ஆனாலும், அவரது செயல்பாட்டில் முன்பிருந்த நிலை இல்லை என்பதே உண்மை.
அதனால், ‘சாமான்யன்’ படமானது முப்பதாண்டுகளுக்கு முன் ரசித்த ராமராஜனைத் திரையில் காணச் செய்யாது.
அதையும் மீறி ஆக்ஷன், செண்டிமெண்ட் நிறைந்த காட்சிகளோடு தன்னை அவர் பொருத்திக்கொள்ள முயன்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
‘சாமான்யன்’ ராமராஜனின் ஆக்ஷன் அவதாரம். அதனை ரசிக்கத் தயாராக இருப்பவர்கள் போலவே கிண்டலடிக்கவும் சிலர் நிச்சயம் இருப்பார்கள்.
அவர்களைக் கண்டு அஞ்சுறாமல் தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதே ராமராஜனின் ப்ளஸ். இதுநாள்வரை அப்படித்தான் அவர் ஒரு சாதனை நாயகனாகவும் திகழ்கிறார். அந்த வகையில் இப்படத்தையும் ரசிக்கலாம்!
– உதய் பாடகலிங்கம்