தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பனை ரூ.1900 கோடி!

டிக்கெட் விற்பனையை விட உணவு விற்பனையில் அசுர வளர்ச்சி

பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 112 நகரங்களில் 1,748 ஸ்கிரீன்களுடன் 360 திரையரங்குகளை இயக்கி வருகிறது.

இந்த திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட, நொறுக்குத்தீனி மற்றும் பானங்களின் விலை அதிகம் என்று கூறப்படுகிறது. ஓடிடி தளத்தின் ஒரு மாத சந்தாவை விட, பாப்கார்ன் விலை அதிகம்.

இந்த நிலையில், பிவிஆர் ஐநாக்ஸில் (PVR Inox) டிக்கெட்டைவிட ஸ்நாக்ஸ் விற்பனையின் மூலம் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 2024-ம் நிதியாண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் காலாண்டு வருவாயை அறிவித்துள்ளது. அதில் உணவு மற்றும் குளிர்பானங்களின் வருவாயானது டிக்கெட் விற்பனை வருவாயைவிட அதிகமாக உள்ளது.

2023 மற்றும் 2024 ம் நிதியாண்டில் பிவிஆர் ஐநாக்ஸ், பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள் மற்றும் பெப்சி உள்ளிட்ட பான வணிகத்தின் மூலம் 21 சதவிகித வருவாய் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஸ்நாக்ஸ் விற்பனை மூலமாக ரூ.1,618 கோடி வருமானத்தை பிவிஆர் பெற்றிருந்தது. அதுவே இந்த முறை ரூ.1,958.4 கோடியாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய ரூ.2,000 கோடி வருமானத்தைப் பெற்றுள்ளது.

டிக்கெட் விற்பனையை எடுத்துக்கொண்டால் 19 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.2,751.4 கோடியிலிருந்து, தற்போது ரூ.3,279.9 கோடியை PVR Inox நிறுவனம் ஈட்டியுள்ளது. டிக்கெட் விற்பனை வருவாய் 19 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில் ஸ்நாக்ஸ் விற்பனையின் வருவாய் 21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பண்டங்கள் வருவாய் அதிகரித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள PVR ஐனாக்ஸ் குழுவின் தலைமை நிதி அதிகாரி நிதின் சூத், இந்த ஆண்டு அதிகப்படியான சூப்பர் ஹிட் படங்கள் இல்லாததால் டிக்கெட் வருவாய் வளர்ச்சியை காட்டிலும், உணவு பொருட்கள் விற்பனையில் அதிகப்படியான வளர்ச்சியின் போக்கு காணப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

திரைப்பட டிக்கெட்டுகளை விட திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் ஸ்நாக்ஸ் விலை பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதால், நடுத்தர குடும்பங்களுக்கு, குறிப்பாக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

குழந்தைகள் படத்தை விட பாப்கார்ன், ஐஸ்கிரீம் போன்ற ஸ்நாக்ஸ் மீதே அதிக ஆர்வம் காட்டுவதால், பெற்றோர் அவற்றை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மட்டுமல்லாமல், தியேட்டர்களில் வெளி உணவு மற்றும் பானங்களைத் தடை செய்வதால், அதிக விலையில் ஸ்நாக்ஸ் வாங்க வேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது.

– நன்றி: வேல்ஸ் மீடியா இணையதளம்

You might also like