காரம், புளிப்பு, இனிப்பு என்ற முச்சுவைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் நாம் கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு போன்றவற்றை உட்கொள்ள பெரிதாக மெனக்கெடுவதில்லை. அறுசுவை உணவு என்று பரிமாறப்படுபவற்றில் கூட, இந்த கணக்கு சரிவர பார்க்கப்படுவதில்லை.
‘இதெல்லாம் பந்திக்கு ஆகுமா’ என்ற எண்ணம்தான் இதற்கான காரணமாக இருக்கக்கூடும். இப்போது, வீடுகளிலும் கூட அறுசுவை என்பது ஆறிப்போன பழஞ்சொல்.
உப்பை அள்ளிக் கொட்டிக்கொள்வது உவர்ப்பில் வருமா என்று தெரியவில்லை. உப்பின் நீர்மையே உவர்ப்பென்று உணர்கிறேன்.
சென்னையில் இருக்கும் ஆயுர்வேத மருத்துவர் கௌதமனைப் பேட்டி கண்டு தொடராக வெளியிட்டபோது, ஒருமுறை ‘பயறு வகைகள் பூஞ்சை பிடித்துவிடாமல் இருக்கத் தெளிக்கப்படும் கரைசல் மிளகாய் கொண்டு தயாரிக்கப்பட்டது’ என்று சொன்னார்.
கிட்டத்தட்ட பூச்சிக்கொல்லி ரேஞ்சுக்கு பயன்படுத்தத்தான் மிளகாயை இங்கு இறக்குமதி செய்திருக்கின்றனர்.
அந்த மிளகாயில் இருந்த காரம் யாரோ ஒரு புண்ணியவானுக்குப் பிடித்துவிட, மிளகு நம் உணவில் இருந்து பின்வாங்கிக் கொண்டது.
மிளகு எவ்வளவு சாப்பிட்டாலும், அது வயிற்றுக்குள் சென்றதும் இனிப்பு குணம் கொண்டதாக மாறிவிடும் என்று அவர் சொன்னபோது கிண்டலாகத் தெரிந்தது. ஆனால், அதுவே உண்மை என்று பின்னர் விளங்கிப் போனது.
தேன், வெல்லம், கருப்பட்டியில் இருந்து சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரை வரை இனிப்பெனப் பயன்படுத்தி வருவது பலர் அறிந்தது.
வெள்ளைச் சர்க்கரை பாகு ஆக்கும்போது அளவு அதிகமானால் உப்பின் சுவை இழையோடுவதாக உணர்ந்திருக்கிறேன். இது எனது பிரமையாக கூட இருக்கலாம்.
புளிப்பு பற்றித் தனியாகத்தான் சொல்ல வேண்டும். டார்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம் என்று வகை பிரித்தாலும் ஆரஞ்சும் சாத்துக்குடியும் கறுப்பு திராட்சையும் வெவ்வேறு சுவைதான்.
ஓட்டில் சிறு துளை கூட இல்லாத புளியம்பழத்தை அப்படியே பறித்துச் சாப்பிடும்போது உண்டாகும் கிறக்கம் புளிப்பின் ஆதிமூலத்தைத் தொட்டுக் காண்பிக்கும்.
இவ்வளவு சொன்னாலும், துவர்ப்புக்குச் சரியான எடுத்துக்காட்டுகள் சொல்லத் தெரியாத அளவுக்கே நம் உணவுப் பழக்கம் அமைந்திருக்கிறது. மலை நெல்லியைச் சாப்பிடும்போது முதலில் வரும் புளிப்பை அடுத்துவருவது துவர்ப்பு.
நாவற்பழம், அத்திக்காய், வாழைப்பூவும் கூட இந்த ரகத்தில் சுவையூட்டும் என்று சொல்லிச் சென்றிருக்கின்றனர் நம் முன்னோர்.
வாழைப்பழமே சரியாகக் கனியாதபோது இப்பதத்தில் இருக்குமென்பது என் அனுபவம். வயிற்றுப்புண் இருக்கும்போது இப்பதத்தில் சாப்பிட்டால் உடனடியாகக் குணமாவதை உணர்ந்திருக்கிறேன்.
சவ்சவ், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றில் உவர்ப்பைக் கண்டிருக்கிறேன். (ஏலே என்ன சொல்லுத என்று கொதிப்பவர்கள் தனியாக இன்பாக்ஸ் வந்து தலையில் கொட்டவும்..)
குழந்தைகளுக்குக் கசப்பைப் பழக்கிவிட எண்ணுபவர்கள் வேப்பப்பழம், பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை விடுத்து அதலைக்காயில் இருந்து தொடங்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
இது, பாகற்காயை ஒடுக்கிவைத்தாற்போல இருக்கும் காயினுள் மூன்று அல்லது ஆறேழு உருண்டை விதைகள் வரை இருக்கும். கிட்டத்தட்ட வெண்டைக்காயினுள் இருக்கும் முத்துகள் போன்றிருக்கும்.
விருதுநகர், கோவில்பட்டி, சிவகாசி என்று வெயில் மழையெனப் பொழியும் கரிசல்காடுகளில் மழை தூறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இவை அறுவடையாகும். அதாகப்பட்டது, காடுகரைகளில் முளைத்திருக்கும் கொடியிலிருந்து இவற்றைப் பிடுங்கியெடுக்கலாம்.
ஓரிரு நாள் தவறினாலும் உள்ளிருக்கும் முத்துகள் வெடித்து ‘அடுத்த வருஷம் சேர்த்து எடுத்துக்கோ’ என்று திருப்பியனுப்பிவிடும்.
சென்னை முதலான பெருநகரங்களில் சில அங்காடிகளில் இவை விற்கப்படுகின்றன. சமயங்களில் டிசம்பர் வரை கூட இவை கிடைக்கின்றன.
கசப்பைப் பழக்குவதில் இருக்கும் ஒரு அனுகூலம் வாழ்வின் துன்பங்களை எதிர்கொள்வது பற்றித் தனியாகப் பாடம் எடுக்கத் தேவையில்லை.
இனிப்பைக் கொண்டாட்டமாகக் கருதினால், தேர்ந்த மசோகிஸ்ட் துன்பங்களைத் தேடித்தேடிக் காமுறுவதுபோலத்தான் காரம் புளிப்பின் கதி ஆகிவிட்டது.
தேமேவென போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் என்ன இருக்கிறது லேசான ஆசாபாசங்களைத் தவிர என்பவர்கள் துவர்ப்பையும் உவர்ப்பையும் உணரக் கூடும்.
உண்மையில் வாழ்வின் மேட்டில் ஏறி பள்ளத்தில் இறங்கும்போது நம்முள் சுரப்பது கசப்பு. அதன் சுவையில் மலங்கித் திளைப்பதும் ஆபத்து; வேண்டாம் இது என்று வெறுப்புற்று நிற்பதும் தேவையற்றது.
ரோலர்கோஸ்டர் ரைடு போல கசப்பை ஏந்திக்கொண்டு இறங்கியேறிக் கரை கண்டவர்களைப் பார்த்தபோது இது தோன்றியிருக்கலாம்.
தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள் அடர்ந்த காரத்தோடு சேர்த்து கசப்பையும் உண்ணுவர்.
தயிர் சாதத்துக்கு பாகற்காயையும் சுண்டைக்காயையும் கூட்டிக் கூட்டிச் சாப்பிடுவது என் வழக்கம். ’என்னடா உன் டேஸ்ட்டு’ என்று அசூயை கொள்பவர்கள் அதலைக்காயைத் துணைக்கழைத்துப் பார்க்கலாம்!
வானம் பார்க்கலாம் வா!
– உதய் பாடகலிங்கம்