ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி ஒரு சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.
அதாவது, பூரி ஜெகன்னாதர் கோவிலில் உள்ள பொக்கிஷத்தின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு போய்விட்டன என்கிற விதத்தில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உணர்வுள்ள பல தமிழர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பிரதமரின் பேச்சுக்கு கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, ஒடிசா மாநிலத்தில் ஒரு கோவிலில் உள்ள பொக்கிஷ அறைக்கான சாவிகள் தொலைந்துபோய், அவை கண்டுபிடிக்கப் படாத நிலையில் இருக்கும்போது நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கிற பிரதமர், இவ்வளவு காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் மீது குற்றம் சாட்டுவானேன்.
இதனால் இவர் அடிக்கடி தமிழின் தொன்மைப்பற்றி புகழ் பாடுவதையும், தற்போது தேர்தல் பரப்புரையின்போது அதே தமிழர்களை இழிவுபடுத்துவதையும் எப்படி எடுத்துக் கொள்வது.
ஒருவேளை இந்தக் கோவில் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் பிரதமருக்கு அதிகமான அக்கறை இருக்குமென்றால், இந்தியாவிலேயே ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஒரு சாவி கடத்தப்பட்டதைப் பற்றி பேசும் உரிமை இருக்கிறது என்றால் நம் பாரத நாட்டில், குறிப்பாக பிரதமர் அடிக்கடி அண்மையில் வந்து சென்ற தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு ஒரு கோவிலில் இருந்து கலைமதிப்புள்ள அதேசமயம் விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷத்தைப் போன்ற கல்லினால் உருவான மண்டபமே கடத்தப்பட்டிருக்கிறது. அந்த கடத்தப்பட்ட கல்மண்டபம் தற்போது எங்கிருக்கிறது என்பது பற்றிய ஒரு பதிவு கீழே…
****
குறிப்பு:
தமிழ்நாட்டிலிருந்து பிலடெல்பியா மியூசியத்தில் மதுரையிலிருந்து கடத்தப்பட்ட அந்த மண்டபத்தைப் பற்றி குறிப்பு இருக்கிறது. அதுபற்றி ஆங்கிலத்தில் சின்ன குறிப்பேடே தயாரித்திருக்கிறார்கள்.
முன்பு ஒரு முறை அந்த மியூசியத்தைப் பார்வையிட்ட தமிழக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான பழ.நெடுமாறன் அந்த மண்டபத்தை மீட்டு வருவது பற்றி தமிழக சட்டமன்றத்திலேயே பேசி இருக்கிறார்.
தற்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை. ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவிலினுடைய நிலைமையைப் பற்றி கவலை கொள்கிற பிரதமர், தமிழகத்திலிருந்து ஒரு கோவில் மண்டபமே கடத்தப்பட்டிருப்பது பற்றி அக்கறை கொள்ளமாட்டாரா? அதை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாட்டாரா?
தேர்தல் பரப்புரையின்போது மட்டும் கோவில்கள் மீது இருக்கிற கவனம் மற்ற நேரங்களிலும் அவரிடம் மிகைப்படும் என்று நம்புகிறோம்.
– மணா