கும்பகோணத்தில் டைமண்ட் தியேட்டர் அருகில் இருந்த எங்களது பழைய வீட்டில், ஒரு பெரிய கருப்பு வெள்ளை புகைப்படம் இருக்கும்.
கோட் சூட் போட்டு, பெரிய மீசையுடன் இருக்கும் அவர் தான் எனது முப்பாட்டனார் T.S.DURAI ‘SAMI’ ‘கருங்குயில் குன்றத்து கொலை’ நாவலை எழுதியவர் என்று எனக்கு விவரம் தெரிந்த பின்பு சொல்லப்பட்டது.
நான் படிக்க ஆரம்பித்த பின்பு அவருடைய எழுத்தைத் தேடிப் படிக்க விரும்பினேன். வீட்டில் மாதா படத்தின் கீழே இருக்கும் அலமாரியில் எல்லா புத்தகங்களுமே பொடி பொடியாக உதிர்ந்து போயிருந்தது, ஒரு பிரதி கூட தேரவில்லை.
அவர் கருங்குயில் குன்றத்து கொலை, நோரா மணி, வெரோனா நகரத்து இரு குல மக்கள் என்றெல்லாம் நாவல், மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார் என்று அறிந்தேன்.
இறுதியில் ‘கருங்குயில் குன்றத்து கொலை’ பாண்டிச்சேரியிலிருந்து வரும் சர்வவியாபி பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது தெரிந்து, அந்த அலுவலகம் சென்று கிட்டத்தட்ட 200 அத்தியாயத்தையும் ஜெராக்ஸ் பண்ணி எடுத்துக் கொண்டேன்…
சுந்தரபுத்தன் உதவியோடு அதை புத்தகமாக கொண்டுவந்தோம். பூபதியின் தோழமை பதிப்பகத்தில். மனோகரின் ஓவியத்தோடு.
ஜெயமோகன் அதற்கு ஒரு சிறப்பான முன்னுரை எழுதி, புத்தக வெளியீட்டிற்கும் வந்து, அறிமுக உரையும் கொடுத்தார். எனது சகோதரர் – வரலாற்று ஆசிரியர் – திரு. பெர்னாட்டி சாமி எனது முப்பாட்டனாரை பற்றிய குறிப்புகளை அப்பொழுது பேசினார்.
கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை பட்சிராஜா ஃபிலிம்ஸ் ரைட்ஸ் வாங்கி, மரகதம் என்று சினிமாவாக எடுத்தார்கள், சிவாஜியும், பத்மினியும் நடித்தார்கள். கதையில் அலமு என்ற பெண் பாத்திரம் பலமாக இருக்கும். படத்தில் ஹீரோவுக்கு தான் அதிக வேலை.
சந்திரபாபுவின் குங்கும பூவே, கொஞ்சு புறாவே என்ற பாடல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. நான் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் பொழுது ஆனந்த விகடன் மாணவர் பக்கத்தில் எனது முதல் சிறுகதை பிரசுரமானது. அப்பொழுது எனது மாமா எழுதினார்…
“கருங்குயில் ஒன்று சிறு முளைவிட கண்டேன். வாழ்த்துகள்” என்று ரொம்பவும் சந்தோஷமாக உணர்ந்த தருணம் அது. கலைஞனாக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா.
நன்றி: முகநூல் பதிவு
#சந்திரபாபு #குங்கும_பூவே_கொஞ்சு_புறாவே_பாடல் #இயக்குநர்_ஜேடி #director_jd #கருங்குயில்_குன்றத்துக்_கொலை_நாவல் #சிவாஜி #பத்மினி #மரகதம்_திரைப்படம் #chandrababu #kungumapove_song #karunguyil_kundrathu_kolai_novel #sivaji #badmini #maragatham_movie